பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை 6 பதக்கங்கள் வென்று சாதனை

425

பொதுநலவாய விளையாட்டு விழா வரலாற்றில் 68 வருடங்களுக்குப் பிறகு குத்துச்சண்டைப் போட்டியில் இலங்கை அணி மேலும் 2 வெண்கலப் பதக்கங்களை இன்று (13) பெற்றுக்கொண்டது.

ஆண்களுக்கான 46-49 கிலோ கிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட திவங்க ரணசிங்கவும், அதனைத்தொடர்ந்து நடைபெற்ற ஆண்களுக்கான 52 கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்ட இஷான் பண்டாரவும் இவ்வாறு வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தினர்.

இதில் 46-49 கிலோ கிராம் எடைப் பிரிவிற்கான முதலாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து வீரர் கலால் யபாயை எதிர்கொண்ட இலங்கையின் திவங்க ரணசிங்க, 5-0 என்ற புள்ளிகள் அடிப்படையில் தோல்வியைத் தழுவி இறுதிப் போட்டியில் விளையாடும் சந்தர்ப்பத்தை தவறவிட்டார்.

இலங்கை அஞ்சலோட்ட அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி

இந்தப் போட்டியில் அபாரமாக விளையாடிய இங்கிலாந்து வீரர், திவங்கவுக்கு சுதாகரித்துக்கொள்ளவே அவகாசம் கொடுக்காமல் தனது தாக்குதலை தொடர்ந்தார். இதனால் போட்டியில் பல தடவைகள் நிலைகுலைந்துபோன இலங்கை வீரர் போராடித் தோற்றார்.

எனினும், குத்துச்சண்டைப் போட்டியில் இலங்கைக்கான 2ஆவது வெண்கலப் பதக்கத்தை திவங்க ரணசிங்க ஏற்கனவே உறுதி செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

  • இஷானை வீழ்த்திய நடுவர்கள்

ஆண்களுக்கான 52 கிலோகிராம் எடைப்பிரிவிற்கான முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர் கௌரவ் சொலங்கியை இலங்கையின் மற்றுமொரு வீரரான இஷான் பண்டார எதிர்கொண்டார்.

போட்டியின் முதல் சுற்றில் இலங்கை வீரரின் ஆக்ரோஷமான ஆட்டத்தினால் தடுக்கி விழுந்த இந்தியாவின் கௌரவ், சமாளித்துக் கொண்டு மீண்டும் போட்டியில் ஆடினாலும், 2ஆவது முறையும் கீழே விழுந்தார். இதனையடுத்து போட்டி நடுவர் ஒன்று முதல் எட்டு வரை எண்ணத் தொடங்கினார். அதற்குள் இந்திய வீரர் தயாராகி போட்டியைத் தொடர முதல் சுற்று நிறைவுக்கு வந்தது.

இதனையடுத்து 2ஆவது மற்றும் 3ஆவது சுற்றுக்களில் எதிராளியை கணித்து தடுப்பாட்டம் ஆடிய இந்திய வீரர், இறுதிச் சுற்றில் எதிர்த்தாக்குதல் நடாத்தியிருந்தார். எனினும், இஷான் பண்டாரவின் ஒருசில மதிநுட்பமான தாக்குதல்கள் இந்திய வீரருக்கு மிகப் பெரிய பின்னடைவை கொடுத்திருந்தமை இங்கு காணமுடிந்தது.

இதன்படி, இலங்கை வீரர் இஷானுக்கு வெற்றி கிடைக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டாலும், 29-28, 29-28, 28-28, 28.27, 29-28 என்ற புள்ளிகள் அடிப்படையில் 4-0 என இந்திய வீரர் கௌரவ் சொலங்கிக்கு வெற்றியை வழங்க நடுவர் குழாம் ஏகமனதாக தீர்மானித்தனர்.

இவ்வாறான பல பக்கச்சார்பான முடிவுகளை போட்டியின் நடுவர் குழாம் இந்திய வீரர்களுக்கு சாதகமாக வழங்கியிருந்தமை இம்முறை பொதுநலவாய விளையாட்டு விழா குத்துச்சண்டைப் போட்டியில் காணமுடிந்ததாக பலரும் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

எனினும், இந்திய வீரருக்கு பலத்த போட்டியைக் கொடுத்து போராடித் தோல்வியைத் தழுவிய இலங்கை வீரர் இஷான் பண்டார, இறுதியில் இலங்கைக்கு மற்றுமொரு வெண்கலப் பதக்கத்தை வென்று கொடுத்தார்.

இதன்படி, இம்முறை பொதுநலவாய விளையாட்டு விழாவில் குத்துச்சண்டைப் போட்டியில் பெண்களுக்கான 45 – 48 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்ட அனூஷா தில்ருக்‌ஷி கொடித்துவக்கு ஏற்கனவே வெண்கலப் பதக்கத்தை வென்று கொடுத்திருந்த நிலையில், இன்றைய தினம் மேலும் 2 பதக்கங்களை திவங்க மற்றும் இஷான் ஆகியோர் பெற்றுக்கொடுத்துள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

  • பெட்மிண்டன் அரையிறுதியில் இலங்கை ஜோடி

Commonwealth Games 2018இம்முறை பொதுநலவாய விளையாட்டு விழாவில் பெட்மிண்டன் விளையாட்டுக்காக இலங்கையிலிருந்து 8 வீரர்கள் பங்கேற்றிருந்தனர்.

இந்நிலையில், ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு பெட்மிண்டன் காலிறுதிப் போட்டிகள் இன்று (13) நடைபெற்றது.

இதில் இலங்கை சார்பாக சச்சின் டயஸ் மற்றும் புவனேக குணத்திலக்கவும், கனடா அணி சார்பில் ஜேசன் ஹோ சூ மற்றும் நைல் யகுரா ஆகியோரும் 4ஆவது காலிறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தினர்.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 21-19 22-20, 21-17 என்ற நேர் செட் கணக்கில் இலங்கையின் சச்சின் டயஸ் மற்றும் புவனேக குணத்திலக்க ஜோடி வெற்றிபெற்று அரையிறுதிக்குத் தகுதிபெற்றனர்.

பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு தேசிய சாதனையுடன் பதக்கம்

இதன்படி, நாளை (14) நடைடபெறவுள்ள ஆண்களுக்கான இரட்டையர் பெட்மிண்டன் அரையிறுதிப் போட்டியில் பிரபல இந்திய அணியை இலங்கை எதிர்கொள்ளவுள்ளது.

இதேநேரம், பெண்களுக்கான இரட்டையர் பிரிவு காலிறுதி பெட்மிண்டன் போட்டிகளில் இலங்கை சார்பாக 2 ஜோடிகள் கலந்துகொண்டனர்.

இதன் 2ஆவது காலிறுதியில் இந்திய வீராங்கனைகளான சிக்கி ரெட்டி, அஷ்வினி பொன்னப்பாவுடன் போட்டியிட்ட இலங்கையின் ஹசினி அம்பலங்கொடகே, மதுஷிகா தில்ருக்‌ஷி ஜோடி 21-11, 21-13 நேர் செட் கணக்கில் தோல்வியைத் தழுவினர்.

இதனைத் தொடர்ந்து 3ஆவது காலிறுதியில் இங்கிலாந்து வீராங்கனைகளான லோரன் ஸ்மித், சாரா வோல்கர் ஜோடியிடம் 21-12, 21-16 என்ற செட் கணக்கில் இலங்கையின் திலினி பிரமோதிகா, கவிதி சிறிமான்னகே ஜோடி தோல்வியைத் தழுவி, அரையிறுதியில் விளையாடும் வாய்ப்பை தவறவிட்டனர்.

இந்நிலையில் ஆண்களுக்கான ஒற்றையர் பெட்மிண்டன் காலிறுதிப் போட்டிகள் இன்றைய தினம் நிறைவுக்கு வந்தன. இதன் 4ஆவது காலிறுதியில் இலங்கை அணியின் முன்னணி பெட்மிண்டன் வீரரான தினுக கருணாரத்ன, இந்தியாவின் எச்.எஸ் பரன்னோவுடன் பலப்பரீட்சை நடத்தினார்.

போட்டியின் ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடிய பரன்னோ 21-13, 21-6 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதிபெற்றார்.

  • மல்யுத்தத்தில் இலங்கை வீரர்களுக்கு ஏமாற்றம்

21ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவின் மல்யுத்தப் போட்டிகள் நேற்று (12) ஆரம்பமாகியது. இம்முறை விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக 3 வீரர்கள் பங்கேற்றிருந்தனர்.

இதில் பெண்களுக்கான 53 கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்ட இலங்கையின் தீபிகா தில்ஹானி 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

குறித்த எடைப்பிரிவிற்காக 5 வீராங்கனைகள் மாத்திரம் கலந்துகொண்டிருந்த காரணத்தால் லீக் முறையில் போட்டிகளை நடத்த ஏற்பாட்டுக் குழுவினர் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன்படி, தனது முதல் போட்டியில் 10-2 என்ற புள்ளிகள் அடிப்படையில் அவுஸ்திரேலியாவின் கெரிசா ஹோல்ன்டை வெற்றிகொண்ட தீபிகா, அதனைத் தொடர்ந்து கலந்துகொண்ட இந்தியா, கனடா மற்றும் நைஜீரியா ஆகிய வீராங்கனைகளிடம் தோல்வியைத் தழுவி போட்டித் தொடரிலிருந்து வெளியேறினார்.

இதேநேரம், ஆண்களுக்கான 57 கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்ட டிவோஷன் பெர்ணான்டோ, முதல் போட்டியில் ஸ்கொட்லாந்தின் ரொஸ் கொனேலியை  12-6 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிகொண்டார்.

எனினும், காலிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் மொஹமட் பிலாலிடம் (12-2) தோல்வியைத் தழுவிய டிவோஷன் அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்தார்.

இந்நிலையில், ஆண்களுக்கான 74 கிலோகிராம் எடைப்பிரிவின் முதல் சுற்றில் கலந்துகொண்ட இலங்கையின் சுரேஷ் பெர்ணான்டோ, 6-0 என்ற புள்ளிகள் அடிப்படையில் வேல்ஸ் வீரர் கர்ட்ஸ் டோஜிடம் தோல்வியைத் தழுவினார்.

  • வரலாற்றில் இடம்பிடித்த எனா

இம்முறை பொதுநலவாய விளையாட்டு விழாவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த போட்டியாக இசையுடனான ஜிம்னாஸ்டிக் போட்டிகள் அமைந்திருந்தன.

இதேநேரம், பொதுநலவாய விளையாட்டு வரலாற்றில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி முதற்தடவையாக இலங்கை வம்சாவளி வீராங்கனையான என்னா மெரி ஒன்டாச்சி கலந்துகொண்டார்.

நான்கு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் முறையே 11.800, 11.750, 10.400 மற்றும் 10.350 புள்ளிகளை எனா பெற்றுக்கொண்டார்.

இதன்படி, 16 வீராங்கனைகள் பங்குபற்றிய இப்போட்டியில் ஒட்டுமொத்தமாக 44.300 புள்ளிகளுடன் 11ஆவது இடத்தைப் அவர் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பொதுநலவாய மெய்வல்லுனரில் இறுதிப் போட்டியில் 2 இலங்கையர் 

17 வயதான எனா, ஆரம்ப காலங்களில் கனடாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேச போட்டிகளில் பங்குபற்றி வருகின்றார். இதில் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற பசுபிக் ரிம் சம்பியன்ஷிப் போட்டிகளின் குழு நிலைப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றதுடன், 2016ஆம் ஆண்டு றியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கவிருந்த கனடா ஜிம்னாஸ்டிக் அணியின் முதல்நிலை வீராங்கனையாகவும் திகழ்ந்தார்.

இந்நிலையில், கடந்த வருடம் இத்தாலியில் நடைபெற்ற உலக இசையுடனான ஜிம்னாஸ்டிக் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் முதற்தடவையாக இலங்கையைப் பிரிதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  • இலங்கைக்கு 6 பதக்கங்கள்

பொதுநலவாய விளையாட்டு விழாவின் 21ஆவது அத்தியாயம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நிறைவுக்கு வரவுள்ள நிலையில், இலங்கை அணி, இதுவரை ஒரு வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 27ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.

அதிலும், பளுதூக்கல் மற்றும் குத்துச்சண்டைப் போட்டிகளிலேயே இவ்வாறு இலங்கை வீரர்கள் பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், பொதுநலவாய விளையாட்டு விழா வரலாற்றில் இலங்கை அணி பெற்றுக்கொண்ட அதிகபட்ச பதக்க எண்ணிக்கையாக இது வரலாற்றில் இடம்பெற்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

  • அவுஸ்திரேலியா முன்னிலை

இதுவரை நடைபெற்ற போட்டிகளின் முடிவில் போட்டிகளை நடாத்தும் அவுஸ்திரேலிய அணி 65 தங்கப் பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. 31 தங்கங்களுடன் இங்கிலாந்து 2ஆவது இடத்திலும், 17 தங்கங்களுடன் இந்தியா 3ஆவது இடத்திலும் உள்ளது.