சென்னையின் கால்பந்து கழக அணியுடனான மோதலை சமநிலை செய்த கொழும்பு அணி

119

நேற்று (6) கொழும்பு ரேஸ் கோஸ் மைதானத்தில் இடம்பெற்று முடிந்த ஆசிய கால்பந்து சம்மேளன (AFC) கிண்ணத்திற்கான தகுதிகாண் பிளே ஓப் சுற்றின் கொழும்பு கால்பந்து கழகம் மற்றும்  சென்னையின் கால்பந்து கழகம் இடையிலான முதல்கட்டப் போட்டி கோல்கள் ஏதுமின்றி சமநிலை அடைந்திருக்கின்றது.

ஆசிய கால்பந்து சம்மேளன கிண்ணத்தின் ஆரம்ப தகுதிகாண் போட்டியில் முன்னதாக பூட்டானின் ட்ரான்ஸ்போர்ட் யுனைடட் அணியினை 9-2 என்ற மொத்த கோல்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த கொழும்பு கால்பந்து கழக அணி குறித்த வெற்றி மூலம் பிளே ஓப் சுற்றுக்கு தகுதிபெற்று, இந்திய சுப்பர் லீக்  (ISL) தொடரின் நடப்பு சம்பியனான சென்னையின் கால்பந்து கழக அணியினை இந்த தகுதிகாண் பிளே ஓப் சுற்றின் முதல் போட்டியில் எதிர் கொண்டிருந்தது.

சென்னையின் சவாலை எதிர்கொள்ள கொழும்பு கால்பந்து கழகம் தயார்

சென்னையின் கால்பந்து கழக அணியினர் பிரேசில், அவுஸ்திரேலியா என பலம் வாய்ந்த கால்பந்து அணிகளின் வீரர்களை கொண்டிருந்த காரணத்தினால் போட்டியின் முதல் பாதியில் அவர்களது ஆதிக்கமே இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. எனினும், போட்டியின் முதல் பாதியில் கொழும்பு  கால்பந்து கழக அணியின் ஆதிக்கமே நிலவியது.

போட்டி ஆரம்பித்து சிறிது நிமிடத்திலேயே கொழும்பு கால்பந்து கழகம்  கோணர் வாய்ப்பு ஒன்றை பெற்றது. எனினும், இந்த வாய்ப்பு மூலம் கொழும்பு அணியினரால் கோல்கள் எதுவும் பெறப்படவில்லை.

தொடர்ந்து மெதுவாக முன்னேறிய ஆட்டத்தில் கொழும்பு அணி வீரர்  ஐசாக் அட்டேவுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருந்த போதிலும் அதனை அவர் தவறவிட்டிருந்தார்.

இதன் பின்னர் போட்டியின் 30 ஆவது நிமிடத்தில் மொமஸ் யாப்போவினால் மீண்டும் கொழும்பு கால்பந்து கழகத்திற்கு நீண்ட உதை ஒன்றின் மூலம் கோல் பெறும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. எனினும், அந்த வாய்ப்பை சென்னையின் கால்பந்து கழக கோல் காப்பாளர் கரண்ஜித் சிங் தடுத்தார்.

பின்னர் போட்டியின் 40 ஆவது நிமிடத்தில் மொமஸ் யப்போ கோல் பெறுவதற்கான இன்னுமொரு முயற்சியினையும் மேற்கொண்டார். எனினும், குறித்த கோலிற்கான முயற்சியும் சென்னையின் கால்பந்து கழக கோல்காப்பாளரினால் தடுக்கப்பட்டது.

இதனை அடுத்து இரு அணிகளும் கோல்கள் எதுவும் பெறாத நிலையில் போட்டியின் முதல் பாதி நிறைவுக்கு வந்தது.

முதல் பாதி: கொழும்பு கால்பந்து கழகம் 0 – 0 சென்னையின் கால்பந்து கழகம்

போட்டியின் இரண்டாம் பகுதியினை இரண்டு அணிகளும் உற்சாகத்துடன் ஆரம்பித்திருந்தன. இதனை அடுத்து தொடர்ந்து முன்னேறிய போட்டியில் மொமஸ் யப்போ கோலுக்கான ஒரு முயற்சியினை மீண்டும் ஒரு தடவை நீண்ட உதை ஒன்றின் மூலம் மேற்கொண்ட போதிலும் அது கைகூடியிருக்கவில்லை.

மறுமுனையில் சென்னையின் கால்பந்து கழக அணி வீரர்களும் கோல் பெறுவதற்கான முயற்சிகளை குறைவாகவே மேற்கொண்டிருந்தனர்.

இதேவேளை பிரதியீட்டு வீரராக களம் நுழைந்த சர்வான் ஜோஹார் போட்டியின் 72 ஆவது மற்றும் 74 ஆவது நிமிடங்களில் கொழும்பு அணிக்காக சில முயற்சிகளை மேற்கொண்டு கோல் பெற முயற்சித்தார். எனினும், அவை அனைத்தும் வீணாக போட்டி எந்த கோல்களும் பெறப்படாத நிலையில் முடிவுற்றது.

முழு நேரம்: கொழும்பு கால்பந்து கழகம் 0 – 0 சென்னையின் கால்பந்து கழகம்

போட்டியின் ஆட்டநாயகன் – சரித்த ரத்னாயக்க (கொழும்பு கால்பந்து கழகம்)

போட்டியின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய சென்னையின் கால்பந்து கழக அணி முகாமையாளர் ஜோன் கிரகரி இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

கொழும்பு கழகத்துடன் மோதப்போகும் சென்னையின் குழாம் அறிவிப்பு

“எல்லாமே எதிர்பார்த்தபடியே இடம்பெற்றிருக்கின்றது. இன்று நம்பிக்கையுடன் ஆடிய கொழும்பு அணியுடன் விளையாடுவது கடினமாக இருக்கும் என நாங்கள் எதிர்பார்த்தோம். கோல்களற்ற போட்டி முடிவை பார்க்கும் போதும் மகிழ்ச்சியாக உள்ளது. போட்டி இடம்பெற்ற மைதானம் கொழும்பு அணிக்கு சாதகமாக இருந்தது. ஆனால், பொதுவாக நாங்கள் விளையாடும் மைதானம் வேறுவகையானது“

“இப்படியான தொடர்களில் ஆடுவது எங்களது வீரர்களுக்கு சற்று வித்தியாசமான அனுபவம், இந்த சுற்று 180 நிமிடங்களுடன் இரண்டு கட்டங்களை கொண்டிருக்கின்றது. 90 நிமிடங்களை கொண்டது அல்ல. அதன்படி நாங்கள் இந்தியாவில் இடம்பெறும் போட்டியினை விட்டுக்கொடுக்கும் எண்ணத்தில் இல்லை“ என்றார்.

கொழும்பு கால்பந்து கழகம் மற்றும் சென்னையின் கால்பந்து கழகம் இடையிலான இந்த தகுதிகாண் பிளே ஓப் சுற்றின் இரண்டாம் கட்ட போட்டி எதிர்வரும் 13 ஆம் திகதி இந்தியாவின் அஹமதாபாதில் இடம்பெறவுள்ளது.

அதேநேரம் இப்போட்டி பற்றி கருத்து வெளியிட்ட கொழும்பு கால்பந்து கழகத்தின் பயிற்சியாளர் ருவான் குமார, “சென்னையின் கால்பந்து கழகத்திற்கு எதிராக நல்ல சவாலை கொடுத்திருந்தோம். நாங்கள் அவர்களிடம் இருந்து இன்னும் சவால்களை எதிர்பார்த்தோம். ஆனால் அவர்கள் குறைவாகவே முயற்சி செய்திருந்தனர். நாங்கள் அவர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கவில்லை. அவர்களிடம் நல்ல வீரர்கள் இருந்த போதிலும் எங்கள் வீரர்கள் குறித்த அனுபவமிக்க வீரர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடினர்” எனத் தெரிவித்திருந்தார்.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<