FA கிண்ண நடப்புச் சம்பியனான ராணுவப்படையை 2-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் 2016ஆம் ஆண்டுக்காக டயலொக் சம்பியன்ஸ் லீக்கின் புள்ளிப் பட்டியலில் தொடர்ந்தும் முதலிடத்தை தக்க வைத்தது கொழும்பு கால்பந்துக் கழக அணி.

கொழும்பு கால்பந்துக் கழகம் இறுதியாக நடந்த இரண்டு போட்டிகளையும் அபாரமான முறையில் வெற்றியீட்டி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் காணப்பட்டது.

ராணுவப்படை விளையாட்டுக் கழகம் ரினௌன் கழகத்தை 3-0 என வெற்றியீட்டியது. எனினும், விதிமுறைக்கு முரணாக ஆசிக்குர் ரஹ்மானை அந்தப் போட்டியில் களமிறக்கியதால், ராணுவப்படை அணியின் வெற்றி கால்பந்து சம்மேளனத்தினால் ரினௌன் அணிக்கு வழங்கப்பட்டது. இதன் காரணமாக பெற்ற 3 புள்ளிகளை இழந்து மொத்தமாக 4 புள்ளிகளுடன் இக்கட்டான சூழ்நிலையை ராணுவப்படை அணி சந்தித்திருந்தது.

இந்நிலையில் களனிய விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியின் ஆரம்பம் முதலே டயலொக் சம்பியன்ஸ் லீக்கின் நடப்புச் சம்பியன் அணியான கொழும்பு கால்பந்துக் கழகம் சிறப்பான ஆட்டத்தை முன்னெடுத்தது.

அவ்வணியின் மோமஸ் யாப்போ ஆரம்பத்திலேயே இரு வாய்ப்புகளை அணிக்கு உருவாக்கிக் கொடுத்தார். இந்நிலையில், ராணுவப்படை அணி தமது வழமையான விளையாட்டை வெளிப்படுத்த முடியாமல் தவித்தது.

எனினும் மொஹமட் இஸ்ஸடீன் ராணுவப்படை அணி சார்பாக கோல் ஒன்றினைப் போட, அது ஓப் சைட் என நிராகரிக்கப்பட்டது.

போட்டியின் 22ஆவது நிமிடத்தில் கொழும்பு அணி வீரர் நாகுர் மீராவை ராணுவப்படை அணியின் கோல் காப்பாளர் குமார சிறிசேன தவறான முறையில் வீழ்த்தியதால், நடுவரால் நேரடியாக சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு மைதானத்தில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.

அதன் மூலம் கிடைக்கப்பெற்ற ப்ரி கிக் வாய்ப்பை மோமாஸ் யாப்போ கோலாக்கினார்.

Photos: Colombo FC v Army SC | Super 8 | DCL16

பத்து பேருக்கு மட்டுப்படுத்தப்பட்ட ராணுவப்படை அணிக்கு ப்ரி கிக் வாய்ப்பொன்று கிடைக்கப்பெற்றது. எனினும், சஜித் குமார அடித்த பந்து கோலிலிருந்து மயிரிழையில் வெளியேறியது.

முதல் பாதியில் முன்னிலை பெற்றிருந்த நிலையில், அனாவசியமாக ராணுவப்படை வீரர் சஜித் குமாரவை முகத்தில் குத்தியதனால் கொழும்பு கழகத்தின் கோல் காப்பாளர் மொஹமட் இம்ரானுக்கும் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது.

சென்ற போட்டியைப் போன்றே இந்தப் போட்டியிலும் நட்சத்திர வீரர் சர்வான் ஜோஹர், போட்டியின் இடையில் உள்நுழைந்தார். ரௌமிக்கு பதிலாக சர்வான் உள்நுழைந்தார்.

இரு அணிகளும் பத்து பேருக்கு மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் முதல் பாதி முடிவடைந்தது.

முதல் பாதியின் இறுதி நேரத்தில் இலகுவான கோல் வாய்ப்பை கொழும்பு கால்பந்து அணி வீரர் டேவிட் ஒசாஜி தவறவிட்டார்.

முதல் பாதி: கொழும்பு கால்பந்துக் கழகம் 01 – 00 ராணுவப்படை விளையாட்டுக் கழகம்

முதலாம் பாதியைப் போன்றே இரண்டாவது பாதியும் அதிரடியான முறையில் ஆரம்பிக்கப்பட்டது.

இரண்டாவது பாதியில் ராணுவப்படை விளையாட்டுக் கழகம் போட்டியை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த போதும், கொழும்பு கழகம் கவுண்டர் அட்டாக் முறை மூலம் விளையாடியது.

இரு அணிகளுக்கும் பல வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் பலமான களத்தடுப்பாளர்கள் போட்டியில் கோல் செல்லாமல் காத்து வந்தனர். குறிப்பாக கொழும்பு அணியின் களத்தடுப்பாளர்கள் தமது பணியை மிகச் சிறப்பாக செய்தனர்.

எனினும், 71ஆவது நிமிடத்தில் ராணுவப்படை அணிக்கு கோணர் உதை வாய்ப்பொன்று கிடைத்தது. இதன்போது, உதைந்த பந்து கொழும்பு தரப்பின் பின்களத்தில் இருந்து மைதானத்தின் நடுப்பகுதியை நோக்கி வர, பந்தை நேராக கோலுக்குள் உதைந்த பண்டார வரக்காகொட ராணுவப்படை அணிக்கான முதல் கோலைப் பெற்றுக்கொடுத்தார்.  

அதன் பின்பு போட்டி மேலும் விறுவிறுப்பானது. இரு தரப்பும் தலா 10 வீரர்களுடனும், தலா ஒரு கோலுடனும் இருக்கையில், வெற்றி கோலுக்கான மோதல் மிகவும் சூடு பிடித்தது.

இரு அணிகளும் மாறி மாறி சிறப்பாட்டத்தை வெளிப்படுத்த, போட்டியை பார்த்து ரசித்துக்கொண்டிருந்த அனைவருக்கும் யாரும் கோல் ஒன்றை எந்நேரமும் போடலாம் என்ற விறுவிறுப்பும், எதிர்பார்ப்பும் உருவானது.

மோமாஸ் யாப்போ மற்றும் இஸ்ஸடீன் இருவருக்கும் வாய்ப்புகள் கிடைக்க அவர்கள் அவற்றை தவற விட்டனர்.

போட்டியின் 83ஆவது நிமிடத்தில் பெனால்டி பகுதிக்கு வெளியே இருந்து சர்வான் அடித்த உதை கோல் காப்பாளரை தாண்டி கம்பங்களுக்குள் செல்ல, அது கோலாக மாறியது.

அதனைத் தொடர்ந்தும் ஒரு கோல் பின்னடைவில் இருந்த ராணுவப்படை அணி கோல் அடிக்கப் போராடினாலும் களத்தடுப்பாளர்கள் அவற்றை லாவகமாகத் தடுத்தனர்.

பல வாய்ப்புகளை ராணுவப்படை உருவாக்கினாலும் அவர்களால் கோல் பெற முடியாமையால் போட்டி கொழும்பு அணிக்கு சாதகமாக முடிவடைந்தது.

முழு நேரம்: கொழும்பு கால்பந்துக் கழகம் 01 – 00 ராணுவப்படை விளையாட்டுக் கழகம்  

ThePapare.com இன் ஆட்ட நாயகன்நிரான் கனிஷ்க (கொழும்பு கால்பந்துக் கழகம்)

கோல் பெற்றவர்கள்
கொழும்பு கால்பந்துக் கழகம் – மோமாஸ் யாப்போ 25′, சர்வான் ஜோஹர் 83′
ராணுவப்படை விளையாட்டுக் கழகம் – பண்டார வரக்காகொட 71′

மஞ்சள் அட்டை
ராணுவப்படை விளையாட்டுக் கழகம் – மதுஷான் டி சில்வா 56′

சிவப்பு அட்டை
கொழும்பு கால்பந்துக் கழகம் – மொஹமட் இம்ரான் 34′
ராணுவப்படை விளையாட்டுக் கழகம் – குமார சிறிசேன 22’