இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டிக்கான கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் ஆடுகளம் சராசரிக்கு குறைவானது என ஐசிசி அறிவித்துள்ளது.
சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் கடந்த 21ம் திகதி ஆரம்பமானது. இந்தப்போட்டியின், ஆடுகளமானது அதிகமாக துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக இருந்தது.
ஒரே போட்டியில் பல சாதனைகளை முறியடித்த திமுத் கருணாரத்ன
குறிப்பாக முதல் டெஸ்ட் போட்டியில், இரண்டு அணிகளாலும் ஒட்டுமொத்தமாக 1289 ஓட்டங்கள் குவிக்கப்பட்டதுடன், 17 விக்கெட்டுகள் மாத்திரமே வீழ்த்தப்பட்டன. இந்தப்போட்டிக்கான ஆடுகளத்தில் விக்கெட்டுகளை கைப்பற்றுவதற்கான சராசரி 75.82 ஆக அதிகரித்திருந்தது.
இதனை அவதானித்த இந்தப்போட்டிக்கான ஐசிசியின் போட்டி மத்தியஸ்தர் ரன்ஜன் மடுகல்ல, ஐசிசியின் ஆடுகளம் மற்றும் மைதானத்துக்கான தன்மைக்கான விதிமுறைக்கு அமைய, பல்லேகலை மைதானத்தின் ஆடுகளம் “சராசரிக்கும் குறைவான” மதிப்பை கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
அத்துடன், பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் இந்தப்போட்டிக்கான ஆடுகளமானது ஐந்து நாட்களாக எவ்வித மாற்றங்களுக்கும் உள்ளாகவில்லை. முற்றுமுழுதாக துடுப்பாட்ட வீரர்களுக்கு மாத்திரமே சாதகமாக இருந்தது. எனவே, ஐசிசியின் விதிமுறையின் படி, இந்தப்போட்டிக்கான ஆடுகளத்துக்கு ஒரு தரக்குறைப்பு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.
ஐசிசியின் விதிமுறையின் படி, பல்லேகலை மைதானத்துக்கு வழங்கப்பட்டுள்ள தரக்குறைப்பு புள்ளி, தொடர்ந்தும் ஐந்து வருடங்களுக்கு செல்லுபடியாகும். குறித்த காலப்பகுதியில் ஒரு மைதானத்தின் ஆடுகளம் 5 தரக்குறைப்பு புள்ளிகளை பெறும் பட்சத்தில், 12 மாதங்களுக்கு எந்தவித சர்வதேச போட்டிகளை நடத்த முடியாதபடி, சர்வதேச கிரிக்கெட் சபை தடை விதிக்கும்.
அதேநேரம், ஒரு மைதானத்தின் ஆடுகளம் 10 இற்கும் அதிகமான தரமிறக்கல் புள்ளிகளை பெறும் பட்சத்தில், 24 மாதங்களுக்கு எந்தவொரு சர்வதேச போட்டிகளையும் நடத்த முடியாதபடி, தடைவிதிக்கப்படும்.
சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சமனிலையடைந்துள்ள நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (29) இதே மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<