ஹத்துருசிங்க மாயாஜால வித்தைக்காரர் அல்ல – திசரவின் விளக்கம்

3789

இலங்கை அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளராக வந்துள்ள சந்திக்க ஹத்துருசிங்கவுக்கு, வந்த உடனே அற்புதங்களை செய்ய அவர் மயாஜால வித்தைக்கார் அல்ல. எனவே அணியை நெறிப்படுத்த அவருக்கு இன்னும் கால அவகாசம் தேவை என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் திசர  பெரேரா தெரிவித்தார்

சகீப் அல் ஹஸனின் சகலதுறை ஆட்டத்தினால் இலங்கைக்கு படுதோல்வி

பங்களாதேஷில் நடைபெற்று வரும் முக்கோண ஒரு நாள் தொடரில் இலங்கை…

கடந்த 2, 3 வருடங்களாக இலங்கை கிரிக்கெட் அணி, சர்வதேச அரங்கில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றமை அனைவரும் அறிந்த விடயம். அதிலும் குறிப்பாக கடந்த வருடம் மாத்திரம் இலங்கை அணி பங்குபற்றிய 29 ஒரு நாள் போட்டிகளில் 23 போட்டிகளில் தோல்வியை சந்தித்து வரலாற்றில் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில் இவையனைத்துக்கும் விமோசனம் கிட்டாதா என்று காத்துக்கொண்டிருந்த இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மலர்ந்துள்ள 2018ஆம் ஆண்டிலாவது சந்தோஷமான செய்தி கிட்டுமா என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்காமல் போய்விட்டது.

அதிலும் குறிப்பாக, புதிய பயிற்றுவிப்பாளர், புதிய தலைவர் என பலதரப்பட்ட எதிர்பார்ப்புக்களுடன் பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ள இலங்கை அணியால் இதுவரை எந்தவொரு வெற்றியையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்நிலையில், பங்களாதேஷ் அணிக்கெதிராக நடைபெற்ற முக்கோணத் தொடரின் மூன்றாவது ஒரு நாள் போட்டியில் 163 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்த இலங்கை அணி, இப்போட்டித் தொடரில் 2ஆவது தொடர் தோல்வியையும் சந்தித்தது.

நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளிலும் பந்துவீச்சு, துடுப்பாட்டம் என அசத்தி இத்தொடரில் இலங்கை அணி சார்பாக அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராகவும், இத்தொடரில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரராகவும் வலம் வருகின்ற முன்னாள் தலைவரான திசர பெரேரா, இலங்கை அணியின் தொடர் தோல்விகளுக்கு புதிய பயிற்றுவிப்பாளரான சந்திக்க ஹத்துருசிங்க பொறுப்பல்ல எனவும், துடுப்பாட்ட வீரர்களின் அசமந்தப் போக்குதான் தோல்விக்குக் காரணம் எனவும் தெரிவித்தார்.

2017 இல் இருந்து இலங்கை அணி மீண்டு வர மஹேல ஜயவர்தன ஆதரவு

இலங்கை தேசிய அணியின் தலைமை மற்றும் முகாமைத்துவ நிலைகளை…

பங்களாதேஷ் அணியுடனான போட்டியின் பிறகு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு திசர பெரேரா கருத்து வெளியிடுகையில், ”இந்தப் போட்டியிலும் எமது துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக விளையாடாததே தோல்விக்கு முக்கிய காரணம். ஜிம்பாப்வே அணியுடனான முதல் போட்டியில் நாம் சிறப்பாக விளையாடியிருந்தோம். அந்தப் போட்டியின் இறுதி நேரத்தில் மோசமாக விளையாடியதால் தோல்வியை சந்திக்க நேரிட்டது. ஆனாலும் பங்களாதேஷ் அணியுடன் நடைபெற்ற போட்டியிலும் அதே போன்ற நிலைமைக்கு எமக்கு முகங்கொடுக்க நேரிட்டதால் போட்டியை கோட்டை விட்டோம். இதற்கு துடுப்பாட்ட வீரர்கள் தமது பொறுப்பை சரியாக நிறைவேற்றவில்லை.  

இந்த ஆடுகளத்தில் 320 ஓட்டங்களை துரத்திச் செல்வது என்பது கடினமான இலக்கு அல்ல. நாம் பங்களாதேஷ் அணிக்கெதிராக திட்டமொன்றுடன் களமிறங்கியிருந்தோம். நாம் பவுண்சர் பந்துகளைத் தான் அதிகம் வீசியிருந்தோம். அது எமக்கு வெற்றி அளித்தது. அதேநேரம் ஒரு சந்தர்ப்பத்தில் பங்களாதேஷ் அணி 350 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ளும் நிலையில் இருந்தது. அதிலும் குறிப்பாக தமீம் இக்பால் மற்றும் சகிப் அல் ஹசன் சிறப்பாக விளையாடியிருந்தார்கள். ஆனாலும் எமது பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயற்பட்டு அதை 320 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தியிருந்தமை பாராட்டத்தக்கது” என்றார்.

இந்நிலையில், அஞ்செலோ மெதிவ்ஸ் உபாதை காரணமாக அணியில் இடம்பெறாமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், மெதிவ்ஸ்தான் எமது துடுப்பாட்ட வரிசையில் உள்ள மிகவும் அனுபவமிக்க வீரர். ஆனாலும் ஏன் அவர் தொடர்ந்து உபாதைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றார் என்பது புரியாத புதிராகவே உள்ளது. அவர் அணியில் இடம்பெறாமை மிகப் பெரிய இழப்பாகும் எனத தெரிவித்தார்.

இளையோர் உலகக் கிண்ணத்திலிருந்து இலங்கை அணி வெளியேற்றம்

19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான்…

இதேவேளை, ஹத்துருசிங்கவின் மீள் வருகை குறித்து திசர பெரேரா கருத்து தெரிவிக்கையில், உலகின் தலைசிறந்த பயிற்றுவிப்பாளர்களில் சந்திக ஹத்துருசிங்க விளங்குகிறார். அதற்கு மாற்றுக் கருத்தே கிடையாது. எனவே புதிய பயிற்றுவிப்பாளராக சந்திக ஹத்துருசிங்க எமது அணிக்கு கிடைத்திருப்பது மிகப் பெரிய சாதகத்தைக் கொடுத்துள்ளது.

நான் இலங்கை அணியில் 2011 – 2012 காலப்பகுதியில் விளையாடிய போது ஏற்கனவே அவருடன் பணியாற்றி உள்ளேன். அவர் இப்போது இலங்கை அணிக்கு வந்திருக்கிறார். அவ்வாறு வந்த உடனே யாராலும் எந்த அற்புதங்களையும் செய்துவிட முடியாது. அவர் மயாஜால வித்தைக்காரரும் அல்ல. எனவே அணியை நெறிப்படுத்த அவருக்கு இன்னும் கால அவகாசம் தேவை. எனவே எஞ்சியுள்ள போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெறுவோம் எனத் தெரிவித்தார்.