வீண் போனது டில்ஷான் – தரங்கவின் அதிரடி இணைப்பாட்டம்

670

இந்திய மஹாராஜாஸ் (India Mahajaras) மற்றும் ஆசிய லயன்ஸ் (Asia Lions) அணிகள் இடையிலான லெஜன்ட்ஸ் லீக் T20 தொடரின் நேற்றைய போட்டியில், இந்திய மஹராஜாஸ் அணி 10 விக்கெட்டுக்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

திலகரட்ன டில்சானின் அணிக்கு வெற்றி

கட்டாரின் டோஹா நகரில் ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட லெஜன்ட்ஸ் லீக் T20 தொடர் நடைபெற்று வருகின்றது. அதன்படி இந்த தொடரின் ஐந்தாவது போட்டியில் திலகரட்ன டில்சானின் ஆசிய லயன்ஸ் அணியும், கௌதம் கம்பீரின் இந்திய மஹாராஜாஸ் அணியும் மோதின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய மஹாராஜாஸ் அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை ஆசிய லயன்ஸ் அணிக்கு வழங்கியது.

இதன்படி ஆசிய லயன்ஸ் அணிக்கு உபுல் தரங்க மற்றும் திலகரட்ன டில்ஷான் ஜோடி சிறந்த ஆரம்பத்தினை வழங்கியது. இரண்டு வீரர்களும் அணியின் முதல் விக்கெட்டுக்காக 73 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்ததோடு முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்த திலகரட்ன டில்சான் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பௌண்டரி அடங்கலாக 32 ஓட்டங்கள் பெற்றார்.

எனினும் களத்தில் இருந்த உபுல் தரங்க அரைச்சதம் விளாச ஆசிய லயன்ஸ் அணியானது 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 157 ஓட்டங்கள் எடுத்தது. ஆசிய லயன்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் உபுல் தரங்க 48 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 69 ஓட்டங்கள் பெற்றார்.

இதேநேரம் இந்திய மஹாராஜாஸ் அணியின் பந்துவீச்சில் சுரேஷ் ரெய்னா 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஷெவோன் டேனியல் தலைமையில் UAE செல்லும் இலங்கை U19 அணி!

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 158 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இந்திய மஹாராஜாஸ் அணி போட்டியின் வெற்றி இலக்கை வெறும் 12.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 159 ஓட்டங்களுடன் அடைந்தது.

இந்திய மஹாராஜாஸ் அணியின் துடுப்பாட்டத்தில் அதன் வெற்றியை உறுதி செய்ய காரணமாகவிருந்த ரொபின் உத்தப்பா இறுதி வரை ஆட்டமிழக்காது வெறும் 39 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 11 பௌண்டரிகள் அடங்கலாக 88 ஓட்டங்கள் பெற்றார். மறுமுனையில் கௌதம் கம்பீர் 36 பந்துகளுக்கு 12 பௌண்டரிகள் உடன் 61 ஓட்டங்கள் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய மஹாராஜாஸ் அணியின் ரொபின் உத்தப்பா தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

ஆசிய லயன்ஸ் – 157/5 (20) உபுல் தரங்க 69(48), திலகரட்ன டில்ஷான் 32(27), சுரேஷ் ரெய்னா 16/2(2)

இந்திய மஹாராஜாஸ் – 159/0 (12.3) ரொபின் உத்தப்பா 88(39)*, கௌதம் கம்பீர் 61(36)*

முடிவு – இந்திய மஹாராஜாஸ் 10 விக்கெட்டுக்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<