அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் பளுதூக்கல் போட்டியில் இன்று பெறப்பட்ட வெள்ளிப் பதக்கத்துடன் இலங்கை அணி, ஹட்ரிக் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளது.
21ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நேற்று முன்தினம் ஆரம்பமாகியது. போட்டித் தொடரின் 2ஆவது நாளான இன்று நடைபெற்ற ஆண்களுக்கான பளுதூக்கல் 69 கிலோகிராம் எடைப்பிரிவில் இலங்கையின் இந்திக சதுரங்க திசாநாயக்க வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியதுடன், பொதுநலவாய விளையாட்டு விழாவில் தனது முதலாவது பதக்கத்தையும் வென்றார்.
பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு தேசிய சாதனையுடன் பதக்கம்
பொதுநலவாய விளையாட்டு விழாவின் முதல் நாளான..
14 வீரர்கள் பங்கேற்ற இந்தப் பிரிவில் ஸ்னெச் முறையில் தனது முதல் இரண்டு முயற்சிகளிலும் முறையே 132 மற்றும் 137 கிலோகிராம் எடையைத் தூக்கியிருந்த இந்திக சதுரங்க, 3ஆவது முயற்சியில் 139 கிலோகிராம் எடையைத் தூக்குவதில் தோல்வியடைந்தார். எனினும், ஸ்னெச் பிரிவின் இறுதியில் அவர் முதலிடத்தைப் பெற்றிருந்தார்.
இதனையடுத்து கிளீன் அண்ட் ஜேர்க் முறையில் முதல் முயற்சியில் 160 கிலோகிராம் நிறையைத் தூக்கியிருந்த இந்திக சதுரங்க, கடைசி இரண்டு முயற்சியிலும் 163 கிலோகிராம் எடையைத் தூக்குவதில் தோல்வியடைந்திருந்தார். இதனால் தங்கப் பதக்கம் வெல்லும் வாய்பை 2 கிலோகிராம் வித்தியாசத்தில் அவர் இழந்தார்.
இதன்படி, மொத்தமாக 297 கிலோகிராம் எடையைத் தூக்கிய இந்திக சதுரங்க வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
குறித்த பிரிவில், இலங்கை வீரர் இந்திக சதுரங்கவை விட இரண்டு கிலோகிராம் கூடுதலாக, 299 கிலோகிராம் எடையைத் தூக்கிய வேல்ஸ் நாட்டைச் சேர்ந்த கரெத் இவென்ஸ் தங்கப் பதக்கம் வென்றார்.
இதேவேளை, 295 கிலோகிராம் எடையைத் தூக்கிய 18 வயதுடைய இந்தியாவின் தீபக் லாதர் குறித்த பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
பளுதூக்கலில் இலங்கைக்கு மற்றுமொரு பதக்கம்
பொதுநலவாய விளையாட்டு விழாவின் முதல் நாளான…
முன்னதாக 2010 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்கேற்றிருந்த 27 வயதான இந்திக சதுரங்க திஸாநாயக்க, கடந்த செப்டெம்பர் மாதம் அவுஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெற்ற பொதுநலவாய மற்றும் ஓஷியானா பளுதூக்கல் போட்டித் தொடரில் ஆண்களுக்கான 69 கிலோகிராம் எடைப் பிரிவில் 289 கிலோகிராம் எடையைத் தூக்கி 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று காலை நடைபெற்ற பெண்களுக்கான பளுதூக்கலில் 53 கிலோகிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட இலங்கையின் சமரி வர்ணகுலசூரிய, 172 கிலோ கிராம் எடையைத் தூக்கி தேசிய சாதனை படைத்தாலும், வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இறுதி நேரத்தில் துரதிஷ்டவசமாக தவறவிட்டார்.
குறித்த போட்டியில், ஸ்னெச் முறையில் 78 கிலோ கிராம் எடையைத் தூக்கிய அவர், கிளீன் அண்ட் ஜேர்க் முறையில் முதல் முயற்சியில் 94 கிலோகிராம் எடையைத் தூக்கினார். எனினும், 2ஆவது மற்றும் 3ஆவது முயற்சிகளில் 99 மற்றும் 104 கிலோகிராம் எடையைத் தூக்கி தோல்வியைத் தழுவிய சமரிக்கு, தேசிய சாதனையுடன் 4ஆவது இடத்தை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.

இதில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை சத்துரங்க லக்மால் வென்றிருந்தார். ஆண்களுக்கான 56 கிலோகிராம் எடைப் பிரிவில் பங்குபற்றி அவர், மொத்தமாக 248 கிலோகிராம் எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கத்தை வென்றார். ஸ்னெச் முறையில் 114 கிலோகிராம் எடையை தனது முயற்சியில் தூக்கியிருந்த சத்துரங்க லக்மால், கிளீன் அண்ட் ஜேர்க் முறையில் 134 கிலோகிராமை தூக்கியிருந்தார்.
விளையாட்டு வீரர்களின் திடீர் உயிரிழப்புகளுக்கு காரணம் என்ன?
விளையாட்டுகள் உலகளாவிய ரீதியில்…
இதனைத்தொடர்ந்து, பெண்களுக்கான 48 கிலோகிராம் பிரிவில் கலந்துகொண்ட இலங்கையின் தினூஷா ஹன்சனி கோமஸ், மொத்தமாக 155 கிலோகிராம் எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.

இப்போட்டியில் மலேஷியாவைச் சேர்ந்த மொஹமட் அஸ்னில்(288 கிலோ எடை) தங்கப் பதக்கத்தையும், பப்புவா நியூகினியாவின் மொரியா பாரு மற்றும் பாகிஸ்தானின் தல்ஹா தாலிப் ஆகியோர் முறையே வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
இதன்படி, இதுவரை நடைபெற்ற போட்டிகளின் முடிவில் இலங்கை அணி ஒரு வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 12ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.





















