19 வயதுக்கு உட்பட்ட பாடசாலை கால்பந்து அணிகளுக்கு இடையிலான கொத்மலே கிண்ணத்தின் இறுதிக் கட்டப் போட்டிகள் யாழ்ப்பாணத்தில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது அங்கு நிலவும் அமைதியின்மையான சூழ்நிலை இந்தப் போட்டிகளுக்கு பாதிப்பாக அமையும் என்ற ஒரு அச்ச நிலைமை ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் மிக முக்கிய கால்பந்து சுற்றுப் போட்டிகளில் ஒன்றான 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலை கால்பந்து அணிகளுக்கு இடையிலான கொத்மலே கிண்ணத்தின் 2 அரையிறுதிப் போட்டிகள், 3ஆம் இடத்திற்கான போட்டி மற்றும் இறுதிப் போட்டி என்பவற்றை எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் மற்றும் 5ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் துறையப்பா விளையாட்டரங்கில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதில் ஒரு அரையிறுதிப் போட்டியில், கொத்மலே கிண்ண நடப்புச் சம்பியன் யாழ்ப்பாணம் ஹென்ரியரசர் கல்லூரியும், கொழும்பு ஸாஹிராக் கல்லூரியும் மோதவுள்ளது. அதேபோன்று, வென்னப்புவ புனித ஜோசப் வாஸ் கல்லூரி, யாழ்ப்பாணம் பத்திரிசியார் கல்லூரியை மற்றைய அரையிறுதியில் சந்திக்கின்றது.

எனவே, யாழ்ப்பாணத்தின் இரண்டு அணிகள் அரையிறுதியில் விளையாடுதல் மற்றும் 30 வருடகால கொடிய யுத்தத்தின் பின்னர் மிக முக்கிய கால்பந்து சுற்றொன்று, யாழ்ப்பாணத்தில் இடம்பெறுதல் என்பன யாழ் கால்பந்து வரலாற்றில் இடம்பெறும் ஒரு முக்கிய சரித்திரமாகவே உள்ளது. எனவே இதுகுறித்த எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் அதிகரித்துள்ளது.

கொத்மலே சம்பியன்சிப் கால்பந்து சுற்றின் இறுதிக் கட்டப் போட்டிகள் யாழில்

இவ்வாறான ஒரு நிலைமையில், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தனர். கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வடக்கில் உள்ள கடைகள் மூடப்பட்டமை, பல்கலை மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை புறக்கணித்துள்ளமை மற்றும் வடக்கில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் என்பவற்றால் அங்கு ஒரு அமைதியின்மையான நிலைமை நீடித்து வருகின்றது.

குறிப்பாக இந்த சம்பவம் இடம்பெற்று இரண்டு நாட்களின் பின்னர், யாழில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் மீது இனந்தெரியாத நபர்களால் வாள்வெட்டு சம்பவம் ஒன்றும் இடம்பெற்றது. எனவே தற்பொழுது வடக்கின் பாதுகாப்பு நிலைமை குறித்து ஒரு சந்தேகமும் அச்சமும் நிலவுகின்றது.

எனவே, இவ்வாறான ஒரு நிலைமையில் யாழ்ப்பாணத்திற்கு போட்டிகளுக்கு செல்வது சாத்தியமான ஒரு விடயம் அல்ல என்று மேல் மாகாணத்தைச் சேர்ந்த கொழும்பு ஸாஹிரா மற்றும் ஜோசப் வாஸ் கல்லூரி தரப்பினர் தெரிவிக்கின்றனர். தமது வீரர்கள் யாழ்ப்பாணம் செல்வது பாதுகாப்பு பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று குறித்த பாடசாலையின் நிர்வாகம், அணியின் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் வீரர்களின் பெற்றோர் குறிப்பிடுகின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் கொழும்பு ஸாஹிரா கல்லூரி அணியின் பயிற்றுவிப்பாளர் மொஹமட் ரூமி ThePapare.com இற்கு பிரத்யேகமான கருத்து தெரிவிக்கையில், நாம் குறித்த போட்டிகளுக்கு ஏற்றவாறு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். எனினும் தற்போது அங்குள்ள நிலைமைகளுடன் ஒப்பிடும்பொழுது ஒரு அச்சம் நிலவுகின்றது. யாழ்ப்பாணத்தில் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றால், அமைதியின்மையில் இருந்து விடுபடுவதற்கு குறைந்தது ஒரு மாதமாவது எடுக்கும் என்றார்.

எனினும் போட்டி ஏற்பாட்டாளர்கள், அரங்கில் தாம் பாதுகாப்பை முழுமையாக பலப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து புனித ஜோசப் வாஸ் கல்லூரி அணியின் பயிற்றுவிப்பாளர் ப்ரான்க் கொஸ்டா ThePapare.com இடம் கருத்து தெரிவிக்கையில்,

”ஏற்பாட்டாளர்கள் தாம் பாதுகாப்பு வழங்குவதாக சொல்லலாம். எனினும் ஏதாவது ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? உயிரிழப்புகள் ஏற்பட்டால் அதற்கு குறித்த தரப்பு பொறுப்பு கூறுமா? எனவே இத்தொடரின் இறுதிக் கட்டப் போட்டிகள் கொழும்பிற்கு மாற்றப்பட வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

மேலும் இறுதியாக தாம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது பெற்ற அனுபவம் குறித்து அவர் தெரிவிக்கையில், ”கடந்த வருடம் நாம் 17 வயதின் கீழ்ப்பட்டோருக்கான போட்டிகளுக்காக அங்கு சென்றபோது, மைதானத்தை சுற்றி சுமார் 3,000 பேர் இருந்திருப்பார்கள். அவர்கள் மைதானத்தில் நடந்த கொண்ட முறைமையை விபரிக்க முடியாது. அவ்வளவு மோசமாக இருந்தது. அவர்களின் செயற்பாடுகளால் போட்டியை 3-4 முறை நிறுத்த வேண்டிய நிலை நடுவருக்கு நேரிட்டது” என்றார்.

இந்நிலையில், யாழில் நிலவும் சூழ்நிலையை அவதானித்து, அங்கு போட்டிகளை நடாத்தும் நிலைப்பாட்டிலேயே இலங்கை கால்பந்து சம்மேளனமும் இருக்கின்றது.

இந்த விடயம் குறித்து இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் பலெத்ர அன்டனி ThePapare.com இடம் தெரிவிக்கையில், ”எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு யாழ்ப்பாணத்தில் நிலவும் சூழ்நிலைகளை நாம் அவதானிப்போம். அதன் பின்னர் இறுதி முடிவொன்றை எடுப்போம். அதேவேளை, சம்மேளனத்தின் சிரேஷ்ட அதிகாரியும், துணைத் தலைவருமாகிய D.I.G K.P.P. பதிரன, இந்தப் போட்டிகளுக்கான பாதுகாப்பை உயர்ந்த அளவு அதிகரிப்போம் என்று உறுதியளித்துள்ளார்” என்று தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும், தற்பொழுதுள்ள நிலைமைகளையும் கருத்தில் கொண்டு, எந்தவித பாதிப்புக்களும் ஏற்படாதவாறு, கொத்மலே கிண்ண இறுதிக் கட்டப் போட்டிகளை விரைவில் நடாத்தி முடிக்க வேண்டும் என்பதையே ThePapare.com உம் தெரிவிக்கின்றது.

இது தொடர்பில் உங்கள் கருத்தை கீழே பதிவிடுங்கள்