2௦ வருடங்களின் பின்னர் மீண்டும் BRC சிக்ஸர்ஸ் கிரிக்கெட் போட்டிகள்

992
BRC Sixes 2016 - Press Conference

இலங்கையில் உள்ள கிரிக்கெட் விளையாட்டு கழகங்களுக்கு இடையிலான ஆறு வீரர்கள் கொண்ட சிக்ஸர்ஸ் போட்டிகளின் முன்னோடியான BRC சிக்ஸர்ஸ் போட்டிகள் 2 வருடங்களுக்கு பின்னர், மீண்டும் நவம்பர் மாதம் 12ஆம் மற்றும் 13ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. எனவே இதன் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வுகள் BRC வளாகத்தில் நடைபெற்றன.

BRC சிக்ஸர்ஸ் 1969ஆம் ஆண்டு முதல்முறையாக ஆரம்பிக்கப்பட்டு, அன்று முதல் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து ரசிக்கும் ஒரு கிரிக்கெட் போட்டியாக உருவேடுத்திருந்தது.  BRC விளையாட்டு கழகம் ஆரம்பிக்கப்பட்டு 1௦௦ ஆண்டுகள் பூர்த்தியான நிலையில் இறுதியாக 1996ஆம் ஆண்டு நடைபெற்ற BRC சிக்ஸர்ஸ் போட்டியில் தீபால் மதுரப்பெரும தலைமையிலான BRC அணி சம்பியன் ஆனது.

இம்முறை நடைபெறும் BRC சிக்ஸர்ஸ் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் BRC கிரிக்கெட் மைதானம் மற்றும் கோல்ட்ஸ் மைதானம் என்பவற்றில் நடைபெறவுள்ளதோடு, நாட்டில் உள்ள 16 பிரதான கிரிக்கெட் விளையாட்டு கழக அணிகள் இதில் பங்குபற்றி சிறப்பிக்கவுள்ளனர். இப்போட்டிகளின் முதல் நாள் குழுமட்ட போட்டிகளும், இரண்டாம் நாளில் தெரிவு செய்யப்பட்ட எட்டு அணிகள் விளையாடும் நொக்அவுட் போட்டிகளிலும் இடம்பெற உள்ளன.

பங்குபற்றவுள்ள 16 கிரிக்கெட் கழகங்கள்

BRC, SSC, NCC, CCC, தமிழ் யூனியன் A&AC, மூர்ஸ் விளையாட்டுக் கழகம், கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம், இலங்கை இராணுவ விளையாட்டு கழகம், இலங்கை துறைமுக அதிகாரசபை விளையாட்டு கழகம், புளூம்பீல்ட் விளையாட்டு கழகம், படுரேலிய விளையாட்டு கழகம், சிலாபம் மரியன்ஸ் கழகம், றாகம விளையாட்டு கழகம், காலி விளையாட்டு கழகம், சராசின் விளையாட்டு கழகம், கடற்படை விளையட்டு கழகம்.

இந்த போட்டியின் கவர்ச்சியான அம்சமாக சம்பியன் பட்டதை வெல்லும் அணிக்கு ஒரு மில்லியன் ரூபாவும், அதே நேரம் இரண்டாம் இடத்தை பெறும் அணிக்கு 25௦,௦௦௦ ரூபாவும் வழங்கப்படவுள்ளது.

இப்போட்டிகளுக்கு அனுசரணையாக BRC கழக உறுப்பினர்கள், இலங்கை முன்னணி தொலைத் தொடர்பு சேவை வழங்குனரான டயலொக் ஆசியாட்டா பி.எல்.சி ஆகியோர் இருப்பதோடு, விசன் கேர் மற்றும் லிட்ரோ காஸ் இணை அனுசரணையாளர்களாக ஆதரவு வழங்குகின்றனர்.

குறிப்பிட்ட ஆரம்ப நிகழ்ச்சியின் போது டயலொக் ஆசியாட்டா பி.எல்.சி யின் மொபைல் தொலைத்தொடர்பு மற்றும் வணிக தலைவர் அசங்க பிரியதர்ஷன தமது அனுசரணைக்குரிய காசோலையை வழங்கினார்.

குறிப்பிட்ட போட்டிகளின்போது வழமையான போட்டி விதிகள் கடைபிடிக்கப்படும். சிறப்பு விதியாக, தனிப்பட்ட வீரர் ஒருவர் 31 ஓட்டங்களுக்கு மேல் பெற்றுக்கொள்ளும் பட்சத்தில் அவர் ஓய்வு பெற வேண்டும். அதே சமயம் 31 ஓட்டங்களுக்கு முன்னர் காயம் தவிர்ந்த ஏனைய காரணங்களுக்காக ஓய்வு பெற முடியாது. மேலும், 6 ஓவர்களுக்கு முன்னதாக சகல விக்கேட்டுக்களும் இழக்கப்படும் பட்சத்தில் மீண்டும் குறிப்பிட்ட வீரர் துடுப்பாட வரலாம்.

இப்போட்டிகளின் போது வைட் மற்றும் நோ போல் வீசப்பட்டால் எதிரணிக்கு இரண்டு ஓட்டங்கள் வழங்கப்படும். அதேநேரம், மீண்டும் பந்து வீச வேண்டும். மேலும் அனைத்து வீரர்களும் வெள்ளை சீருடை அணிந்திருத்தல் வேண்டும். அத்துடன், இப்போட்டிகளுக்காக சிவப்பு நிற பந்தே உபயோகிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.