அவிஷ்க குணவர்தனவின் இடத்தை நிரப்ப வரும் சமிந்த வாஸ்

319

இலங்கை அணியின் முன்னாள் பந்துவீச்சாளரான சமிந்த வாஸ், அடுத்த மாதம் தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை வளர்ந்துவரும் (Emerging) கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயற்பட்டு வந்த அவிஷ்க குணவர்தன ஐ.சி.சி. இன் ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுக்கள் காரணமாக குறித்த பதவியிலிருந்து நீக்கப்பட்டதனை அடுத்தே, சமிந்த வாஸிற்கு இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஐசிசியின் குற்றச்சாட்டுகளை மறுக்கும் அவிஷ்க குணர்தன

எமிரேட்ஸ் கிரிக்கெட் சபையின் (ECB)…

இலங்கை அணிக்காக 111 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள வாஸ் அவற்றில் 355 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருப்பதோடு 400 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 400 விக்கெட்டுக்களை சாய்த்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சமிந்த வாஸ், இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மாறிய விடயம் இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்ட அறிக்கை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

”அடுத்ததாக இடம்பெறவுள்ள தென்னாபிரிக்க சுற்றுப் பயணத்தில் இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக சமிந்த வாஸ் செயற்படவுள்ளார்.”

இலங்கை கிரிக்கெட் அணி, கடந்த காலங்களில் பல வெற்றிகளை பெற காரணமாக இருந்த சமிந்த வாஸ் ஒரு பயிற்சியாளராகவும் பரந்த அனுபவத்தினை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து இரண்டு வருடங்களுக்கு இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பணிபுரிந்த சமிந்த வாஸ், அதன் பின்னர் அயர்லாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் குழாத்திலும் இடம்பெற்றிருந்தார்.

தொடர்ந்து 2016 ஆம் ஆண்டில் இலங்கை அணியின் பந்துவீச்சு ஆலோசகராக சில  நாட்கள் கடமை புரிந்த சமிந்த வாஸ், 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சம்பக்க ராமநாயக்கவிற்கு பதிலாக மீண்டும் இலங்கை அணியின் தற்காலிக பந்துவீச்சு பயிற்சியாளராக ஒரு தொடரில் மாத்திரம் செயற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இது மட்டுமல்லாது கடந்த இரண்டு வருடங்களாக இலங்கை கனிஷ்ட கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் சமிந்த வாஸ் பல இளம் வீரர்களை ஊக்கப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக மாறியது தொடர்பில் ThePapare.com இடம் கருத்து தெரிவித்த சமிந்த வாஸ், இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

”இதுவரையிலும் எனக்கு கிடைத்த மிகப் பெரிய சவாலாக இதனை கருதுகின்றேன், (ஏனெனில்) நான் பந்துவீச்சு பயிற்றுவிப்பில் மட்டுமே நிபுணத்துவம் பெற்றிருக்கின்றேன். நான் இளம் வீரர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதில் உறுதியுடன் உள்ளேன்.”

கேள்விக்குறியான மொஹமட் ஆமீரின் உலகக் கிண்ண வாய்ப்பு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின்…

இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி, எதிர்வரும் ஜூன் மாதம் 26 ஆம் திகதி இலங்கையில் இருந்து தென்னாபிரிக்கா புறப்பட்டு அங்கே ஐந்து ஒரு நாள் போட்டிகளிலும், நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டிகள் இரண்டிலும் விளையாடுகின்றது.

இதேநேரம் ஐ.சி.சி. இன் ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டிருக்கும் அவிஷ்க குணவர்தன சட்டத்தரணி கிரிஷ்மல் வர்ணசூரிய உடன் இணைந்து கடந்த திங்கட்கிழமை (13) கொழும்பு SSC மைதான கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தன் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்திற்கும் மறுப்புத் தெரிவிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<