மாகாண கால்பந்து தொடர் சம்பியனாக மட்டக்களப்பு மாவட்ட அணிகள்

157

கிழக்கு மாகாண மாவட்ட அணிகள் இடையில் ஒழுங்கு செய்யப்பட்ட கால்பந்து தொடரில் ஆண்கள், பெண்கள் என இரண்டு பிரிவுகளிலும் மட்டக்களப்பு மாவட்டம் சம்பியன் பட்டம் வென்றிருக்கின்றது.    

இந்த கால்பந்து தொடரில் பெண்களுக்கான இறுதிப் போட்டி  ஞாயிற்றுக்கிழமையும் (21), ஆண்களுக்கான இறுதிப்போட்டி திங்கட்கிழமையும் (22) மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றிருந்தன.

பார்சிலோனா கழகத்துடன் இணையும் கிரீஸ்மன்

உலகக் கிண்ண வெற்றி வீரரான பிரான்ஸின் அன்டோயின்……

பெண்கள் பிரிவு – மட்டக்களப்பு எதிர் திருகோணமலை 

கிழக்கு மாகாண மாவட்டங்களில் பெண்கள் பிரிவு கால்பந்து சம்பியனை தீர்மானிக்கும் இறுதி ஆட்டத்தில், மட்டக்களப்பு மாவட்ட மகளிர் கால்பந்து அணியும் திருகோணமலை மகளிர் கால்பந்து அணியும் மோதின. 

போட்டியின் ஒருபாதி 30 நிமிடங்களாக அமைந்த இந்த மோதலில், மட்டக்களப்பு மாவட்ட மகளிர் கால்பந்து அணி தொடக்கம் முதலே திறமையினை வெளிப்படுத்தியது.

பின்னர் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அணிக்காக, P. வசந்தினி முதல் கோலினை 19ஆவது நிமிடத்தில் பெற்றார். அத்தோடு, மீண்டும் வசந்தினி போட்டியின் 23ஆவது நிமிடத்தில் இன்னுமொரு கோலைப் பெற்றார். 

இதனால், மட்டக்களப்பு மாவட்ட மகளிர் கால்பந்து அணி போட்டியின் முதல்பாதி நிறைவுக்கு வரும் போது 2-0 என்ற கோல்கள் கணக்கில்  முன்னிலை பெற்றது. 

மறுமுனையில் பல முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் திருகோணமலை மாவட்ட மகளிர் கால்பந்து அணியினால் போட்டியின் முதல் பாதியில் கோல்கள் எதனையும் பெற முடியவில்லை.

முதல் பாதி:  மட்டக்களப்பு 2 – 0 திருகோணமலை

தொடர்ந்து போட்டியின் இரண்டாம் பாதியிலும் மட்டக்களப்பு மாவட்ட அணியின் ஆதிக்கமே நீடித்தது. மட்டக்களப்பு மாவட்ட அணிக்காக இன்னுமொரு கோலினை வசந்தினி போட்டியின் 40ஆவது நிமிடத்தில் பெற்றார். எனினும், திருகோணமலை அணியினரால் ஒரு கோலைக் கூட போட்டியில் பெற முடியாமல் போயிருந்தது. 

அதன்படி, 3-0 என்ற கோல்கள் கணக்கில் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் கால்பந்து அணி திருகோணமலை மாவட்ட மகளிர் கால்பந்து அணியை தோற்கடித்து மாகாண சம்பியனாக நாமம் சூடியது. 

முழு நேரம்: மட்டக்களப்பு 3- 0 திருகோணமலை

கோல் பெற்றவர்கள்

மட்டக்களப்பு மாவட்டம் – P. வசந்தினி 19”, 23” & 40”


ஆண்கள் பிரிவு – மட்டக்களப்பு எதிர் திருகோணமலை

கிழக்கு மாகாண ஆண்கள் பிரிவு கால்பந்து சம்பியனை தீர்மானிக்கும், போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட ஆடவர் கால்பந்து அணியும், திருகோணமலை மாவட்ட ஆடவர் கால்பந்து அணியும் மோதின.

போட்டியில் ஆரம்பம் முதலே இரு அணிகளும் சமபலத்தினை காட்டியிருந்தன. எனினும், தொடர்ந்து முன்னேறிய ஆட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட கால்பந்து அணியின் ஆதிக்கம் வெளிப்படத் தொடங்கியது. 

பின்னர், போட்டியின் முதல் கோலை முதல் பாதியின் 37ஆவது நிமிடத்தில் VTM. அனஸ் பெற்று போட்டியின் கோல்கள் நுழைவாயிலை திறந்து வைத்தார்.

அனஸ் மூலம் பெறப்பட்ட கோலை அடுத்து வேறு கோல்கள் எதுவும் பெறப்படாத நிலையில் போட்டியின் முதல் பாதி, மட்டக்களப்பு  மாவட்ட அணியின் முன்னிலையோடு நிறைவுக்கு வந்தது.  

முதல் பாதி: மட்டக்களப்பு 1 – 0  திருகோணமலை

போட்டியின் இரண்டாம் பாதி ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே, மட்டக்களப்பு மாவட்ட அணிக்காக மற்றுமொரு கோல் பெறப்பட்டது. இந்த கோலினை டார்லோஸ் பர்தலோட் பெற்றார். 

இதனை அடுத்து, இரு அணிகளும் கோல்கள் பெற தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொண்டன. இந்நிலையில், திருகோணமலை அணியின் முயற்சிக்கு வெற்றி கிடைத்தது. திருகோணமலை அணிக்காக முதல் கோலினை போட்டியின் 82ஆவது நிமிடத்தில் A. றஷான் பெற்றுக்கொடுத்தார்.    

இதன் பின்னர், திருகோணமலை அணி மேலதிக கோல் ஒன்றை பெற்று போட்டியினை சமப்படுத்த எதிர்பார்த்தும் அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது. 

உலகக் கிண்ண தகுதி காண் இரண்டாம் சுற்றில் இலங்கை H குழுவில்

எதிர்வரும் 2022ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பிஃபா உலகக்……

இதனால், போட்டியின் வெற்றியாளர்களாக ஏற்கனவே இரண்டு கோல்கள் பெற்றுக் கொண்ட மட்டக்களப்பு மாவட்ட கால்பந்து அணியினர் மாறினர். மேலும் இந்த வெற்றியுடன் மட்டக்களப்பு ஆடவர் கால்பந்து அணி கிழக்கு மாகாண சம்பியனாக நாமம் சூடியது.  

முழு நேரம்: மட்டக்களப்பு 2 – 1 திருகோணமலை

கோல் பெற்றவர்கள்

மட்டக்களப்பு மாவட்டம் – VTM. அனஸ் 37”, டார்லோஸ் பர்தலோட் 48”

திருகோணமலை மாவட்டம் –  A. றஷான் 82”

>>மேலும் பல கால்பந்து செய்திகளை படிக்க<<