2016/2017 ஆம் வருடத்திற்கான BRC சிக்ஸர்ஸ் கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் நேற்று (13) இடம்பெற்ற இறுதிப்போட்டியில் கோல்ட்ஸ் அணியை 11 ஓட்டங்களினால் தோற்கடித்த BRC அணி வெற்றியாளராக முடிசூடிக் கொண்டது. இதேவேளை, மூன்றாம் இடத்திற்கான போட்டியில் SSC கழகத்தை தோற்கடித்த சோனகர் விளையாட்டு கழகம் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.
நேற்றைய தினத்திற்கான போட்டிகள் கோல்ட்ஸ் மற்றும் சோனகர் விளையாட்டுக் கழக அணிகளுக்கிடையிலான அரையிறுதிப் போட்டியுடன் ஆரம்பமாகின. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கோல்ட்ஸ் அணி இஷான் ஜயரத்ன (25), சதீர சமரவிக்ரம (18) மற்றும் தில்ருவன் பெரேரா (15) ஆகியோரின் சிறந்த பங்களிப்புக்களுடன் 61 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
Photos: BRC Sixes 2016 – Day 2
பதிலுக்கு துடுப்பாடக் களமிறங்கிய சோனகர் விளையாட்டு கழகமானது ஷானுக துலாஜ் அதிரடியாக பெற்றுக் கொண்ட 24 ஓட்டங்களினால் வெற்றியை நெருங்கி வந்தது. எனினும், போட்டியின் நிறைவில் இலங்கை டெஸ்ட் வீரர் தில்ருவன் பெரேராவின் சிறப்பான பந்து வீச்சினால் கோல்ட்ஸ் அணி 4 ஓட்டங்களினால் வெற்றியை பெற்றுக் கொண்டது.
இரண்டாவது அரையிறுதியில் T.M. சம்பத்தின் அபாரமான சகலதுறை ஆட்டத்தினால் BRC அணி SSC அணியை 26 ஓட்டங்களினால் இலகுவாக தோற்கடித்தது. சம்பத் 26 ஓட்டங்கள் விளாச BRC அணி 65 ஓட்டங்களை குவித்ததுடன், பந்து வீச்சிலும் அசத்திய சம்பத் 2 விக்கெட்டுகளை வீழ்த்த, SSC அணியினால் 39 ஓட்டங்களையே பெற முடிந்தது. சம்பத்திற்கு சிறந்த பங்களிப்பை வழங்கிய அண்டி சொலொமன்ஸ் 3 ஓட்டங்களை மாத்திரம் வழங்கி 1 விக்கெட்டினை பதம்பார்த்தார்.
BRC, SSC, கோல்ட்ஸ் மற்றும் சோனகர் விளையாட்டுக் கழகங்கள் அரையிறுதிக்குத் தெரிவு
மூன்றாம் இடத்திற்கான போட்டியில் SSC கழகத்திற்கு அதிர்ச்சியளித்த சோனகர் விளையாட்டு கழகம், தனது அற்புத பந்து வீச்சினாலும் களத்தடுப்பினாலும் 5 ஓட்டங்களினால் வெற்றியை சுவீகரித்தது. சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தி, துடுப்பாட்டத்தில் ஆட்டமிழக்காது 16 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட லஸ்ஸன பெரேரா ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
தொடரின் இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய BRC அணி 66 என்ற வலுவான ஓட்ட எண்ணிக்கையை பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பாக அதிரடியாக ஆடிய அண்டி சொலொமன்ஸ் மற்றும் ருமேஷ் புத்திக முறையே 28 மற்றும் 22 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். பிரியமல் பெரேரா தனது ஓவரில் 10 ஓட்டங்களை வழங்கி 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
பின்னர் 67 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய கோல்ட்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 55 ஓட்டங்களையே பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் தில்ருவன் பெரேரா அதிகபட்சமாக 25 ஓட்டங்களை விளாசியதுடன் பந்து வீச்சில் அசத்திய விகும் சஞ்சய தனது ஓவரில் 5 ஓட்டங்களை மாத்திரமே வழங்கி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாக அண்டி சொலொமன்ஸ் தெரிவானார்.
முதல் அரையிறுதிப் போட்டி:
கோல்ட்ஸ் கழகம் – 61/3 (5 overs)
இஷான் ஜயரத்ன 25, சதீர சமரவிக்ரம 18, தில்ருவன் பெரேரா 15
திலின துஷார 1/10
சோனகர் விளையாட்டுக் கழகம் – 57/6 (5 overs)
ஷானுக துலாஜ் 24
தில்ருவன் பெரேரா 2/09
இரண்டாவது அரையிறுதிப் போட்டி:
BRC கழகம் – 65/5 (5 overs)
T.M. சம்பத் 26, அண்டி சொலொமன்ஸ் 24
சம்மு அஷான் 1/08
SSC – 39 (4.2 overs)
சாமர கபுகெதர 17
T.M. சம்பத் 2/02, அண்டி சொலொமன்ஸ் 1/03
மூன்றாம் இடத்திற்கான போட்டி:
சோனகர் விளையாட்டுக் கழகம் – 56/2 (5 overs)
திலின துஷார 34*, லஸ்ஸன பெரேரா 16*
தரிந்து கருணாரத்ன 1/02
SSC – 51 (5 overs)
சம்மு அஷான் 17, அதீஷ திலக்ஷன் 13
லஸ்ஸன பெரேரா 2/௦8
இறுதிப் போட்டி:
BRC – 66/2 (5 overs)
அண்டி சொலொமன்ஸ் 28*, ருமேஷ் புத்திக 22
பிரியமல் பெரேரா 1/10
கோல்ட்ஸ் – 55/4 (5 overs)
தில்ருவன் பெரேரா 25, இஷான் ஜயரத்ன 12
விகும் சஞ்சய 1/05



















