நாடு திரும்பும் டில்ஷான்; இலங்கை அணியில் இணையும் பினுர

ICC T20 World Cup 2022

214

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்ற T20 உலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கை அணியில் இருந்து உபாதை காரணமாக வேகப் பந்துவீச்சாளர் டில்ஷான் மதுஷங்க விலகியுள்ளார்.

இதனையடுத்து, அவருக்குப் பதிலாக மாற்றீடு வீரராக பினுர பெர்னாண்டோவை இணைத்துக் கொள்ள இலங்கை கிரிக்கெட் முகாமைத்துவம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நமீபியா அணிக்கெதிரான போட்டிக்கு முன் சனிக்கிழமை (15) நடைபெற்ற இலங்கை அணியின் இறுதிப் பயிற்சியின் போது நான்கு பந்துகளை மட்டுமே வீசிய பின்னர், மதுஷங்க தனது இடுப்புப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வலி காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறியுள்ளார்,

இதனையடுத்து உடனடியாக மருத்துவர்களின் மேற்பார்வையின் கீழ் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு MRI பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது அவருக்கு தொடையை அண்மித்த பகுதியில் உபாதை ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் சில வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அண்மையில் நிறைவுக்கு வந்த ஆசியக் கிண்ணத் தொடரில் அறிமுகத்தைப் பெற்றுக் கொண்ட 20 வயதான இடது கை வேகப் பந்துவீச்சாளரான டில்ஷான் மதுசங்க, குறித்த தொடரில் சிறப்பாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இதன்காரணமாக T20 உலகக் கிண்ணத்துக்கான 15 பேர் கொண்ட இலங்கை குழாத்திலும் இடம்பிடித்தார்.

எனினும், நமீபியாவுடனான முதல் போட்டிக்கு முன்னர் இவ்வாறு துரதிஷ்டவசமாக அவர் உபாதைக்கு முகங்கொடுத்து T20 உலகக் கிண்ணத்திலிருந்து முழுமையாக விலகியிருப்பது இலங்கை அணிக்கு மிகப் பெரிய பின்னடைவைக் கொடுத்துள்ளது.

இந்த நிலையில் டில்ஷான் மதுசங்கவுக்குப் பதிலாக மாற்றீடு வீராக மேலதிக வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்த பினுர பெர்னாண்டோவை இணைத்துக் கொள்ள இலங்கை கிரிக்கெட் முகாமைத்துவம் நடவடிக்கை எடுத்துள்ளது. T20 உலகக் கிண்ண தொடருக்கான தொழில்நுட்பக் குழு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

இதன்படி, பினுர பெர்னாண்டோ நாட்டிலிருந்து உடனடியாக புறப்பட்டு அணியுடன் விரைவில் இணைந்து கொள்வார் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

27 வயதான இடதுகை மித வேகப் பந்துவீச்சாளரான பினுர பெர்னாண்டோ, இதுவரை 9 T20i போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இறுதியாக அவர், கடந்த பெப்ரவரி மாதம் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற T20i தொடரில் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<