அறிமுக போட்டியில் முச்சதம் விளாசி பீகார் வீரர் உலக சாதனை

243
BCCI

ரஞ்சி கிண்ண கிரிக்கெட் போட்டியில் பீகார் அணிக்காக அறிமுக வீரராக களமிறங்கிய சகிபுல் கனி முச்சதம் விளாசி புதிய உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.

இந்தியாவின் முதல்தர கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான ரஞ்சி கிண்ண கிரிக்கெட் தொடர் நேற்று (17) ஆரம்பமாகியது. மொத்தம் 38 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்று விளையாடுகின்றன.

இந்த நிலையில், பிளேட் குழுவில் பீகார் – மிசோரம் இடையிலான போட்டி கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பீகார் அணி, துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

இதில் பீகார் அணியின் மத்திய வரிசை வீரராகக் களமிறங்கிய 22 வயது அறிமுக வீரரான சகிபுல் கனி முச்சதம் விளாசி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

இப்போட்டியில் 405 பந்துகளில் 56 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 341 ஓட்டங்களை அவர் குவித்துள்ளார், இதன்மூலம் முதல்தர கிரிக்கெட்டின் அறிமுக போட்டியில் முச்சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை சகிபுல் கனி படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த அஜய் ரொஹெரா, 2018/19 பருவகாலத்தில் நடைபெற்ற ரஞ்சி கிண்ண கிரிக்கெட் போட்டியில் 267 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டதே ரஞ்சி கிண்ணத்தில் வீரரொருவர் பெற்றுக்கொண்ட அதிகபட்ச ஓட்டங்களாக பதிவாகியது. இந்த நிலையில், தற்போது அந்த சாதனையையும் அவர் முறியடித்துள்ளார்.

அதுமாத்திரமின்றி, இதே போட்டியில் மற்றொரு பீகார் வீரரான பபுல் குமார் இரட்டைச் சதம் அடித்தார். இதில் சகிபுல் கனியும் பபுல் குமாரும் 4ஆவது விக்கெட்டுக்காக 500 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

எனினும், சகிபுல் கனி மற்றும் பபுல் குமார் ஆகியோரது அபார ஆட்டத்தின் உதவியால் பீகார் அணி, முதல் இன்னிங்ஸுக்காக 5 விக்கெட் இழப்பிற்கு 686 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

இதனையடுத்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த மிசோரம் அணி, இன்றைய 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 40 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதனிடையே, ரஞ்சி கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது நாளான நேற்று நடைபெற்ற போட்டிகளில் சவுராஷ்ட்ரா அணிக்கெதிரான போட்டியில் மும்பை அணிக்காக விளையாடி வரும் அஜிங்கியா ரஹானே சதமடித்து அசத்தினார்.

அதேபோல, டெல்லி அணிக்காக விளையாடி வரும் இந்திய 19 வயதின்கீழ் அணித்தலைவர் யாஷ் துல், தமிழ்நாடு அணிக்கெதிராக சதமடித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<