பாக். அணியின் பயிற்சியாளர் பதவிக்கு மிஸ்பா உல் ஹக் விண்ணப்பம்

221
©Getty

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான மிஸ்பா உல் ஹக், அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது.  

இதனையடுத்து கடந்த இரண்டு வருடங்களாக அவர் வகித்து வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் குழு உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக நேற்று (26) அறிவித்துள்ளார்

இவ்வருடம் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளில் லீக் சுற்றோடு பாகிஸ்தான் அணி வெளியேறியதை அடுத்து அனைத்து பயிற்சியாளர்களின் ஒப்பந்தத்தையும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இரத்து செய்தது

இதனையடுத்து புதிய பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பங்களை அந்நாட்டு கிரிக்கெட் சபை கடந்த 9ஆம் திகதி கோரியிருந்ததுடன், நேற்றைய தினம் (26) அதற்கான இறுதித் திகதி எனவும் அறிவிக்கப்ட்டது

இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் குழுவின் உறுப்பினராகவும், பாகிஸ்தான் வீரர்களுக்காக லாஹூரில் தற்போது நடைபெற்று வருகின்ற விசேட பயிற்சி முகாமின் ஒருங்கிணைப்பாளராகவும் செயற்பட்டு வந்த மிஸ்பா உல் ஹக், நேற்றைய தினம் (26)  தனது இராஜினமா கடிதத்தை அந்நாட்டு கிரிக்கெட் சபையின் பணிப்பாளர் ஜாகிர் கானிடம் கையளித்தார்.

இதுதொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்த மிஸ்பா உல் ஹக், பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளரின் பதவிக்கு நான் விண்ணப்பிக்கிறேன். எனினும், போட்டி மிகவும் கடினமாக இருக்கும் என்பதை நான் அறிவேன். மேலும் இந்தப் பதவிக்கு தகுதி வாய்ந்த மிகவும் திறமையான நபர்கள் விண்ணப்பித்துள்ளதால் மிகவும் சவாலாக இருக்கும் என நம்புகிறேன்

இளையோர் ஆசியக் கிண்ணத் தொடர் இலங்கையில்!

19 வயதுக்குட்பட்டோருக்கான இளையோர் ……

மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியைப் பயிற்றுவிப்பது அனைவரின் கனவு என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். அதேபோல இது மூன்று வகையான போட்டிகளுக்கும் கணக்கிடப்படுவதால் அதற்கேற்ப ஆற்றலையும் நாம் கொண்டிருக்க வேண்டும்” என தெரிவித்தார்.

இதன்படி, இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் மற்றும் டி-20 தொடர் ஆரம்பமாவதற்கு முன் பயிற்சியாளர்கள் குறித்த இறுதி முடிவை அறிவிப்பதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை எதிர்பார்த்துள்ளது

இதேநேரம், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளரும், முன்னாள் பயிற்சியாளருமான வக்கார் யூனிஸ், பந்துவீச்சுப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

அத்துடன், பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு வெளிநாடுகளைச் சேர்ந்த எந்தவொரு முன்னணி பயிற்சியாளர்களும் இதுவரை விண்ணப்பிக்காத நிலையில், அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான டீன் ஜோன்ஸ் மாத்திரம் இப்பதவிக்கு விண்ணப்பித்துள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

கடந்த 2017ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடரோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற மிஸ்பா உல் ஹக், அதன்பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் சபையுடன் இணைந்து பயிற்சியாளர்களுக்கான பாடநெறிகளிலும், செயலமர்வுகளிலும் பங்கெடுத்து வந்தார்.  

இதனையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் கடந்த 2017ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட மொசின் கான் தலைமையிலான கிரிக்கெட் குழுவிலும் இடம்பிடித்திருந்தார்

பாகிஸ்தான் வீரருக்கு பதிலாக ஒப்பந்தம் செய்யப்பட்ட முரளி விஜய்

இந்திய அணியின் டெஸ்ட் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக ….

வருடமொன்றுக்கு மூன்று தடவைகள் கூடுகின்ற இந்தக் குழுவானது பாகிஸ்தானின் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள், ஆடுகளங்கள், பயன்படுத்தப்படும் பந்துகள், பயிற்சியாளர்களின் செயல்பாடுகள், வீரர்களின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை தயார் செய்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு வழங்கி வந்தமை சிறப்பம்சமாகும்

இதேவேளை, பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் கடந்த சில தினங்களுக்கு முன் 2019/20ஆம் ஆண்டுக்காக நடைபெறவுள்ள உள்ளூர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள உள்ளூர் கழகங்களை மதிப்பாய்வு செய்வதற்கான சுயாதீன குழுவிலும் மிஸ்பா உல் ஹக்கை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<