ஆறு அறிமுக வீரர்களுடன் பங்களாதேஷை வீழ்த்திய இலங்கை U19 அணி

Sri Lanka U19 vs Bangladesh U19 2021

192

சுற்றுலா பங்களாதேஷ் U19 அணிக்கு எதிராக தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் இளையோர் ஒருநாள் போட்டியில், இலங்கை U19 அணி 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை U19 அணியின் தலைவர் துனித் வெல்லாலகே, முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார்.

>> T20 உலகக் கிண்ணத்தில் இந்தியாவை தோற்கடிப்போம்: பாபர் அசாம்

அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணிக்கு, பங்களாதேஷ் U19 பந்துவீச்சாளர்கள் கடும் அச்சுறுத்தல்களை கொடுத்தனர். 32 ஓட்டங்களுக்கு இலங்கை U19 அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும், அடுத்து களமிறங்கிய பவன் பத்திராஜ மிகச்சிறந்த இன்னிங்ஸ் ஒன்றை ஆடி, அரைச்சதம் கடந்தார்.

பவன் பத்திராஜவின் அரைச்சதம், சதீஷ ராஜபக்ஷக, ரவீன் டி சில்வா, துனித் வெல்லாலகே ஆகியோரின் பங்களிப்பு மற்றும் யசிரு ரொட்ரிகோவின் வேகமான ஓட்டக்குவிப்பின் மூலமாக 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 228 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பவன் பத்திராஜ 67 ஓட்டங்களையும், சதீஷ ராஜபக்ஷ 28 ஓட்டங்களையும், ரவீன் டி சில்வா 29 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுக்க, யசிரு ரொட்ரிகோ 15 பந்துகளில் 25 ஓட்டங்களை குவித்தார். பங்களாதேஷ் U19 அணியின் சார்பில், ரிபொன் மொண்டல் 3 விக்கெட்டுகளையும், அஷிகூர் ரஷமான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் U19 அணி சார்பில், அய்க் மொல்லாஹ் தனியாளாக போராடி ஓட்டங்களை குவித்த போதும், ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் சரியாக சோபிக்க தவறிய காரணத்தால், பங்களாதேஷ்  U19 அணி 46.2 ஓவர்கள் நிறைவில் 186 ஓட்டங்களை மாத்திரம் பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

>> இலங்கை – பப்புவா நியூ கினியா அணிகளுக்கு இடையிலான பயிற்சிப்போட்டியின் Highlights

அய்க் மொல்லாஹ் அதிகபட்சமாக 86 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, அரிபுல் இஸ்லாம் 38 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இவர்களை தவிர்த்து இப்திகார் ஹுசைன் 16 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் ஒற்றையிலக்க ஓட்டங்களுடன் பெவிலியன் திரும்பியிருந்தனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் டிரவீன் மெதிவ்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்த, ஷெவோன் டெனியல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்படி, இலங்கை U19 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. எனவே, இலங்கை U19 அணி, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இதேவேளை, இலங்கை U19 அணியை பொருத்தவரை, ஜீவக ஷெஷேன், பவன் பதிராஜ, சதீஷ் ஜயவர்தன, சதீஷ ராஜபக்ஷ, ஷெவோன் டேனியல் மற்றும் டிரவீன் மெதிவ்ஸ் ஆகிய வீரர்கள், இளையோர் ஒருநாள் போட்டிகளுக்கு இன்றைய தினம் அறிமுகமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<

>> View Full Scorecard – Sri Lanka U19 vs Bangladesh U19