டெஸ்ட் சகலதுறை தரப்படுத்தலில் முதலிடத்திற்கு முன்னேறிய ஸ்டோக்ஸ்

158
GettyImages

சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய (ICC) டெஸ்ட் வீரர்களுக்கான புதிய தரப்படுத்தல் இன்று (21) வெளியிடப்பட்டுள்ள நிலையில், சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் இங்கிலாந்து அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளதுடன் டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசையிலும் முன்னேறியுள்ளார். 

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு பின்னர் நடைபெறுகின்ற முதலாவது சர்வதேச தொடராக சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றுபோட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்சமயம் நடைபெற்று வருகிறது. கடந்த 8ஆம் திகதி ஆரம்பமான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட்டுகளினால் இங்கிலாந்து அணியை சொந்த மண்ணில் வீழ்த்தியது. 

பென் ஸ்டோக்ஸின் அசத்தலுடன் டெஸ்ட் தொடரை சமநிலை செய்த இங்கிலாந்து 

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை (16) இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமாகி நேற்று (20) நிறைவுக்கு வந்தது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி இறுதி மணித்தியாலத்தில் 113 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு பென் ஸ்டோக்ஸ் முக்கிய கதாப்பாத்திரம் வகித்தார். முதல் இன்னிங்ஸில் நிதானமாக துடுப்பெடுத்தாடிய பென் ஸ்டோக்ஸ் மிக சிறந்த இன்னிங்ஸ் ஒன்றை ஆடி 176 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.  

பின்னர் முதல் இன்னிங்ஸ் பந்துவீச்சில் 29 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். அடுத்து இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாட களமிறங்கியபோது வழமையாக மத்திய வரிசையில் களமிறங்கும் பென் ஸ்டோக்ஸ் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி இங்கிலாந்து அணி ஆட்டத்தை இடைநிறுத்தும் வரை ஆட்டமிழக்காது அதிரடியாக 57 பந்துகளில் 78 ஓட்டங்களை குவித்தார். 

பின்னர் 312 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு மேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பெடுத்தாடும் போது பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸ் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவ்வாறு துடுப்பாட்டம், பந்துவீச்சு என இரு துறைகளிலும் தனி மனிதனாக அசத்திய பென் ஸ்டோக்ஸ் போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச்சென்றார். 

இதன் மூலம் டெஸ்ட் வீரர்களுக்கான புதிய தரவரிசையில் பென் ஸ்டோக்ஸ் சகலதுறை மற்றும் துடுப்பாட்டம் ஆகிய இரு துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளார். இதில் குறிப்பாக டெஸ்ட் சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் முதலிடம் வகித்த மேற்கிந்திய தீவுகளின் அணித்தலைவர் ஜேசன் ஹோல்டரை பின்தள்ளி 497 தரவரிசை புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இது பென் ஸ்டோக்ஸ் பெற்றுக்கொள்ளும் வாழ்நாள் அதிகூடிய டெஸ்ட் சகலதுறை தரவரிசை புள்ளியுமாகும். இதேவேளை, இப்போட்டியில் ஜேசன் ஹோல்டரும் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

T20 உலகக் கிண்ணம் ஒத்திவைப்பு: ஐ.சி.சி அறிவிப்பு

துடுப்பாட்டத்தில் இரு இன்னிங்ஸ்களிலும் ஒரு சதம், ஒரு அரைச்சத்துடன் மொத்தமாக 254 ஓட்டங்களை குவித்த பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் 6 நிலைகள் உயர்ந்து 827 தரவரிசை புள்ளிகளுடன் மூன்றாமிடத்திற்கு முன்னேறியுள்ளார். இவர் அவுஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஸ்ஸேனுடன் இணைந்து காணப்படுகின்றார். குறித்த தரவரிசையில் அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 911 தரவரிசை புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கின்றார். 

டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட், இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் என மொத்தமாக 6 விக்கெட்டுக்களை பதம்பார்த்த இங்கிலாந்து வேகப் ந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் ப்ரோட் 4 நிலைகள் உயர்ந்து முதல் பத்திற்குள் நுழைந்துள்ளார். அவர் 768 தரவரிசை புள்ளிகளுடன் பத்தாமிடத்தில் காணப்படுகின்றார்.  

இதேவேளை மேற்கிந்திய தீவுகள் அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர் குறித்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சில் பிரகாசிக்க தவறியதன் காரணமாக, பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் இரண்டாமிடத்திலிருந்து மூன்றாமிடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க