இலங்கையுடன் மோதும் தென்னாபிரிக்கா, இங்கிலாந்து குழாம்கள் அறிவிப்பு

ICC World Test Championship

192

இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கான இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க குழாம்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடர் இம்மாதம் 26ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் காகிஸோ ரபாடா உபாதை காரணமாக தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருடன், சகலதுறை வீரர் டுவைன் ப்ரிட்டோரியர்ஸும் குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இலங்கை – தென்னாபிரிக்கா தொடர் நடைபெறுவது உறுதி

அதேநேரம், இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தலைவராக குயிண்டன் டி கொக் நியமிக்கப்பட்டுள்ளதுடன், தென்னாபிரிக்க குழாத்தில் மூன்று புதுமுக வீரர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். மித வேகப்பந்துவீச்சாளர் க்ளெண்டன் மேட், விக்கெட் காப்பாளர் கைல் வெர்ரெய்ன் மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சரேல் எர்வி ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

புதுமுக வீரர்களுடன், தென்னாபிரிக்க அணியில் வழமையான இடத்தை பிடித்துக்கொள்ளும் முன்னாள் தலைவர் பெப் டு ப்ளெசிஸ், தெம்பா பௌவுமா, எய்டன் மர்க்கரம், ரஸ்ஸி வென் டெர் டஸன் மற்றும் டீன் எல்கர் ஆகிய அனுப துடுப்பாட்ட வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

சுழல் பந்துவீச்சை பலப்படுத்தும் முகமாக கேஷவ் மஹாராஜ் இணைக்கப்பட்டுள்ளதுடன், வேகப் பந்துவீச்சை என்ரிச் நோக்கியா மற்றும் லுங்கி என்கிடி வழிடத்தவுள்ளனர்.

தென்னாபிரிக்க டெஸ்ட் குழாம்

குயிண்டன் டி கொக் (தலைவர்), தெம்பா பௌவுமா, எய்டன் மர்க்கரம், பெப் டு ப்ளெசிஸ், பியூரன் ஹென்ரிக்ஸ், டீன் எல்கர், கேஷவ் மஹாராஜ்,  லுங்கி என்கிடி, ரஸ்ஸி வென் டெர் டஸன், சரேல் எர்வி, என்ரிச் நோக்கியா, க்ளெண்டன் மேட், வியான் முல்டர், கீகன் பெடர்சன், கைல் வெர்ரெய்ன்

இதேவேளை, இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான தொடரிலிருந்து, இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ஜொப்ரா ஆர்ச்சர் மற்றும் முன்னணி சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து கிரிக்கெட் சபை, இலங்கை அணிக்கு எதிராக விளையாடவுள்ள இங்கிலாந்து குழாத்தை இன்றைய தினம் அறிவித்துள்ளது. 16 வீரர்கள் குறித்த குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய 7 வீரர்கள் மேலதிக வீரர்களாக இணைக்கப்பட்டுள்ளனர்.

அறிவிக்கப்பட்டுள்ள டெஸ்ட் குழாத்தில் இங்கிலாந்து அணியின் முன்னணி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான ரோரி பேர்ன்ஸினுடைய மனைவி குழந்தை பிரசவிக்கவுள்ள நிலையில் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அந்த அணியின் மற்றுமொரு துடுப்பாட்ட வீரரான ஒல்லி போப்பும் உபாதை காரணமாக நீக்கப்பட்டுள்ளார்.

2021 ஜனவரி ஆரம்பத்தில் ஹம்பாந்தோட்டை வரும் இங்கிலாந்து அணி

இந்தநிலையில், ஜொனி பெயார்ஸ்டோவ் மீண்டும் டெஸ்ட் குழாத்துக்குள் வரவழைக்கப்பட்டுள்ளதுடன், இலங்கையில் தன்னுடைய கன்னி டெஸ்ட் போட்டியில் சதமடித்த பென் போக்ஸ் மீண்டும் டெஸ்ட் குழாத்தில் இடம்பிடித்துள்ளார்.

சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக அமையும் இலங்கை ஆடுகளங்களில் கடந்தமுறை சிறப்பாக செயற்பட்ட ஜெக் லீச், மொயீன் அலியுடன் சுழல் பந்துவீச்சை பலப்படுத்தவுள்ளதுடன், அந்த அணியின் மற்றுமொரு முன்னணி சுழல் பந்துவீச்சாளராக வலம் வரும் டொம் பெஸ் இலங்கை தொடருக்கான குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார். 

இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சை தொடர்ந்தும் ஜேம்ஸ் எண்டர்சன் மற்றும் ஸ்டுவர்ஸ் ப்ரோட் வழிடத்தவுள்ளதுடன், மார்க் வூட், க்ரிஸ் வோர்கஸ் செம் கரன் ஆகியோரும் முதன்மை வேகப் பந்துவீச்சாளர்களாக இணைக்கப்பட்டுள்ளனர்.

துடுப்பாட்டத்தை பொருத்தவரை அணித் தலைவர் ஜோ ரூட், டொம் சிப்லி, ஜோஸ் பட்லர், ஜெக் க்ரெவ்லி ஆகியோருடன், புதுமுக வீரர் டேன் லோவ்ரன்ஸ் ஆகியோர் பலப்படுத்தவுள்ளனர்.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் ஜனவரி 14ம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், இரண்டாவது டெஸ்ட் 22ம் திகதி நடைபெறவுள்ளது. குறித்த இரண்டு போட்டிகளும் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து குழாம்

ஜோ ரூட் (தலைவர்), மொயீன் அலி, ஜேம்ஸ் எண்டர்சன், ஜொனி பெயார்ஸ்டோவ், டொம் பெஸ், ஸ்டுவர்ட் ப்ரோட், ஜோஸ் பட்லர், ஜெக் க்ரெவ்லி, செம் கரன், பென் போக்ஸ், டேன் லோவ்ரன்ஸ், ஜெக் லீச், டொம் சிப்லி, ஒல்லி ஸ்டோன், க்ரிஸ் வோக்ஸ்,  மார்க் வூட்

  • மேலதிக வீரர்கள் – ஜேம்ஸ் பார்சி, மெசொன் க்ரேன், சகீப் மொஹ்மட், க்ரைக் ஓவர்டன், மெதிவ் பார்கின்சன், ஒல்லி ரொபின்சன், அமர் விர்டி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<