பாகிஸ்தான் சென்று மீண்டும் கிரிக்கெட் விளையாடவுள்ள சங்கக்கார

103

குமார் சங்கக்கார தலைமையிலான மெர்லிபோன் கிரிக்கெட் கழகம் (MCC) 2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது.

இதில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான குமார் சங்கக்கார அந்த அணியின் தலைவராக செயற்படவுள்ளமை சிறப்பம்சமாகும்

கடந்த 2009ஆம் ஆண்டு லாகூரில் வைத்து இலங்கை கிரிக்கெட் அணி மீது மேற்கொள்ளப்ப்டட தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானில் எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் போட்டியும் நடைபெறவில்லை.

இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் அணி சுமார் 10 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு சென்று 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்ற இந்த தருணத்தில் மெர்லிபோன் கிரிக்கெட் கழகமும் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது.

இதுதொடர்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் அனுப்பி வைக்கப்பட்ட அழைப்பினை மெர்லிபோன் கிரிக்கெட் கழகம் ஏற்றுக்கொண்டுள்ளதுடன், எதிர்வரும் பெப்ரவரி மாதம் அங்கு சென்று விளையாடுவதற்கான சம்மதத்தை தெரிவித்துள்ளது.

இதேநேரம், 2009ஆம் ஆண்டு இலங்கை அணிக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு முகங்கொடுத்து காயத்துக்குள்ள வீரர்களின் ஒருவரான குமார் சங்கக்கார பாகிஸ்தானுக்கான சுற்றுப்பயணம் தொடர்பில் கருத்து வெளியிடுகையில்,

“பாகிஸ்தான் போன்றதொரு நாடொன்றில் கிரிக்கெட் விளையாட்டை மீண்டும் ஆரம்பிப்பதற்கு என்னால் முடிந்த உதவியை செய்ய கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது. அதேபோல 2009இல் இலங்கை அணி மீது மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது

எனவே, மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் தலைவராக பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேசப் போட்டிகள் நடைபெறுவதற்கான ஒத்துழைப்பினை வழங்குவதற்கு எனக்கு நல்லதொரு வாய்ப்பு கிடைத்துள்ளது” என தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த போட்டித் தொடர் நடைபெறுகின்ற தினங்கள் அங்குள்ள பாதுகாப்பு நிலைமைகள் குறித்து முழமையாக ஆராய்ந்த பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் தலைமை நிர்வாகியும் செயலாளருமான லெவெண்டர் கூறுகையில், “பாகிஸ்தானில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஒரு தசாப்த காலமாக தங்கள் நாட்டில் கிரிக்கெட் விளையாடுவதைப் பார்க்க காத்திருந்தனர்.

மேலும், இந்த சுற்றுப்பயணம் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக ஒரு வலுவான பாதுகாப்புத் திட்டத்தை முன்னெடுக்க நாங்கள் பிசிபியுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம்” என்று அவர் கூறினார்.

இதேநேரம், இந்த கிரிக்கெட் விஜயம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைமை நிர்வாகி வசிம் கான் கருத்து வெளியிடுகையில், “மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் இந்த முடிவானது கிரிக்கெட் விளையாடுவதற்கு ஏனைய நாடுகளைப் போல பாகிஸ்தான் பாதுகாப்பானது என்பதற்கு மேலும் சான்றாகும்” என்றார்.

இதன்படி, மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் அனைத்து போட்டிகளும் லாகூரில் உள்ள அட்ச்சன் கல்லூரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<