இலங்கையில் T20 போட்டிகளில் விளையாட தயாராகும் பங்களாதேஷ்

1043
International Cricket

இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருடன், மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடர் ஒன்றையும் விளையாடுவதற்கான பேச்சுவார்த்தைகளில் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை ஈடுபட்டுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக ஆயத்தமாவதற்கான பணிகளை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை மேற்கொண்டு வருகின்றது. அதன் முதல் கட்டமாக பங்களாதேஷ் குழாம், பி.சி.பி. (BCB) உயர் செயற்திறன் மிக்க குழாமுடன் பயிற்சி போட்டிகளில் ஆடுவதற்கும் தயாராகி வருகின்றது.

உலகின் சிறந்த தலைவர் டோனியா? பொண்டிங்கா? அப்ரிடியின் பதில்

கடந்த மாதம் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்களாதேஷ் அணி விளையாடவிருந்த போதும், கொவிட்-19 வைரஸ் காரணமாக, குறித்த தொடர் ஒருமனதாக இரண்டு கிரிக்கெட் சபைகளாலும் பிற்போடப்பட்டது.

ஆனாலும், கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் பின்னர் இலங்கைக்கு எதிரான தொடருடன், கிரிக்கெட்டை மீள ஆரம்பிக்கும், நோக்கத்தை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்த தொடரை மீண்டும் ஆரம்பிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் செயற்பாட்டு தலைவர் அக்ரம் கான், “தொடரை மீண்டும் அட்டவணைப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளில், பங்களாதேஷ் மற்றும் இலங்கை கிரிக்கெட் சபைகள் ஈடுபட்டு வருகின்றன. இது தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என நம்புகிறேன். 

ஆரம்பத்தில் நாம் ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு தீர்மானித்திருந்தோம். ஆனால், T20 உலகக் கிண்ணம் பிற்போடப்பட்டுள்ள நிலையில், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளையும் விளையாடுவதற்கான கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றோம்” என்றார்.

BCB
2019 ஆம் ஆண்டு இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இருதரப்பு ஒருநாள் தொடர்

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி கடந்த ஜூலை மாதத்தில், மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான தொடருக்காக இலங்கை வர தீர்மானித்திருந்தது. அதுமாத்திரமன்றி அவர்களுடைய உயர் செயற்திறன் மிக்க குழாமும் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு, 2 நான்கு நாள் போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாட காத்திருந்தது. ஆனால், கொவிட்-19 வைரஸ் காரணமாக தொடர்கள் பிற்போடப்பட்டன.

“இலங்கை அணிக்கு எதிரான தொடர் செப்டம்பர் – ஒக்டோபர் அல்லது ஒக்டோபர் – டிசம்பர் மாதங்களில் நடக்க வாய்ப்புள்ளது. ஆனாலும், தொடர் உறுதியாவதற்கு முதல் எமக்கு பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தவேண்டிய தேவை உள்ளது. 

தனிமைப்படுத்தல் காலங்கள் குறைவாக்கப்படலாம். நாம் சுற்றுப் பயணம் மேற்கொள்வதற்கு முன்னரும், மீண்டும் நாட்டுக்கு திரும்பும் போதும், கொவிட்-19 பரிசோதனைகளை மேற்கொள்வோம். கொவிட்-19 அறிகுறி வீரர்களுக்கு இல்லாவிடின், அந்த அறிக்கையை நாம் 6 மணித்தியாலங்களுக்குள் பெறமுடியும் என எதிர்பார்க்கிறோம். அதன் மூலம் எங்களுடைய நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும்” என அக்ரம் கான் மேலும் சுட்டிக்காட்டினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க