ஜிம்பாப்வேயை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பங்களாதேஷ்

170
©ICC Twitter

பங்களாதேஷில் நடைபெற்று வரும் முத்தரப்பு T20 தொடரில் இன்று (18) நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு என சகலதுறையிலும் பிரகாசித்த பங்களாதேஷ் அணி 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

செட்டொகிரமில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி மஹமதுல்லாஹ் மற்றும் முஷ்பிகூர் ரஹீமின் சிறந்த இணைப்பாட்டம் மற்றும் லிடன் தாஸின் ஆரம்பம் என்பவற்றின் உதவியுடன் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

புதுமுக வீரர்களுடனான பங்களாதேஷ் குழாம் அறிவிப்பு

பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு…..

ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய லிடன் தாஸ் 22 பந்துகளில் 38 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, T20 போட்டிகளில் அறிமுகமாகியிருந்த நஜ்முல் ஹுசைன் செண்டோ 11 ஓட்டங்களுடன் ஏமாற்றினார். எனினும் 78 ஓட்ட இணைப்பாட்டத்தை பெற்றுக்கொடுத்து, முஷ்பிகூர் ரஹீம் மற்றும் மற்றும் மஹமதுல்லாஹ் ஆகியோர் ஓட்ட எண்ணிக்கைக்கு வலுவளிக்க, ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

அணி சார்பாக 5 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரி அடங்கலாக மஹமதுல்லாஹ்  62 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுக்க, முஷ்பிகூர் ரஹீம் 32 ஓட்டங்களை பெற்றார். ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சில், கெயல் ஜார்விஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், க்ரிஸ் எம்போபு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜிம்பாப்வே அணியின் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் தடுமாறிய நிலையில், அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் 136 ஓட்டங்களுக்கு  சகல விக்கெட்டுகளையும் இழந்து, 39 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

ஜிம்பாப்வே அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க, அந்த அணி ஒரு கட்டத்தில் 66 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

எனினும், மத்தியவரிசையில் களமிறங்கி, அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு ரிச்மண்ட் முதும்பாமி வலுச்சேர்க்க, கெயல் ஜார்விஸ் அவருக்கு பங்களிப்பை வழங்கினார். இவர்கள் இருவரும், 8 ஆவது விக்கெட்டுக்காக அரைச்சத இணைப்பாட்டத்தை கடந்த போதும், ஜிம்பாப்வே அணியால் போட்டியின் வெற்றி இலக்கை அடையமுடியவில்லை.

ரிச்மண்ட் முதும்பாமி சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 54 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுக்க, அவருக்கு அடுத்தபடியாக, கெயல் ஜார்விஸ் 27 ஓட்டங்களையும், அணித் தலைவர் ஹெமில்டன் மசகட்ஸா 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பங்களாதேஷ் அணி சார்பில் சபியுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளை வீழ்த்த, அறிமுக வீரர் அமினுல் இஸ்லாம் மற்றும் முஷ்தபிசூர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை பகிர்ந்தனர்.

இதன்படி, முத்தரப்பு தொடரில் இந்த வெற்றியுடன் இரண்டாவது வெற்றியை பெற்றுள்ள பங்களாதேஷ் மற்றும் தங்களுடைய இரண்டு போட்டிகளிலும் வெற்றியை தக்கவைத்திருக்கும் ஆப்கானிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் மோதவுள்ளன. இதில்,  தாங்கள் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்த ஜிம்பாப்வே அணி இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்துள்ளது.

பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு…….

இதேவேளை, முத்தரப்பு தொடரின் அடுத்த போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் எதிர்வரும் 20 ஆம் திகதி பலப்பரீட்சை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டி சுருக்கம்

பங்களாதேஷ் – 175/7 (20) – மஹமதுல்லாஹ் 62, முஷ்பிகூர் ரஹீம் 32, கெயல் ஜார்விஸ் 32/3, க்ரிஸ் எம்போபு 42/2 

ஜிம்பாப்வே – 136 (20) – ரிச்மண்ட் முதும்பாமி 54, கெயல் ஜார்விஸ் 27, ஹெமில்டன் மசகட்ஷா 25, சபியுல் இஸ்லாம் 36/3, அமினுல் இஸ்லாம் 18/2

முடிவு – பங்களாதேஷ் அணி 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<