புதுமுக வீரர்களுடனான பங்களாதேஷ் குழாம் அறிவிப்பு

71
Bangladesh Cricket

பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் முத்தரப்பு T20I தொடரில், தங்களுடைய மூன்றாம் மற்றும் நான்காவது போட்டிகளுக்கான குழாத்தை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை இன்று (16) அறிவித்துள்ளது.

முத்தரப்பு தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தமது முதல் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்ற போதிலும், நேற்றைய (15) ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்தது. 

பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு…

இந்த நிலையில், முதலிரண்டு போட்டிகளுக்குமான குழாத்திலிருந்த நான்கு வீரர்களை பங்களாதேஷ் அணி நீக்கியுள்ளதுடன், இரண்டு புதுமுக வீரர்கள் உள்ளடங்கலாக 5 வீரர்களை குழாத்துக்குள் அழைத்துள்ளது. 

அண்மைக்காலமாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயற்பட்டு வரும், ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மொஹமட் நயீப் மற்றும் துடுப்பாட்ட சகலதுறை வீரர் அமினுல் இஸ்லாம் பிப்லெப் ஆகியோர் புதிதாக தேசிய அணியில் இணைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 2 டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்களாதேஷ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ள நஜ்முல் ஹுசைன் செண்டோ முதன்முறையாக T20I குழாத்துக்குள் அழைக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு புது முகங்களுக்கு மத்தியில் பங்களாதேஷ் அணிக்கு கடந்த காலங்களில் பலம் சேர்த்திருந்த வேகப் பந்துவீச்சாளர்களான சபியுல் இஸ்லாம் மற்றும் ரூபல் ஹுசைன் ஆகியோர் மீண்டும் அணிக்குள் அழைக்கப்பட்டுள்ளனர். 

“உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயற்பட்டு வரும் மொஹமட் நயீப், சர்வதேச போட்டிகளின் அழுத்தத்துக்கு எவ்வாறு முகங்கொடுக்கிறார் என்பதை அவதானிக்கும் முகமாக அவர் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்” என பங்களாதேஷ் அணியின் தேர்வுக்குழு தலைவர் மின்னாஜுல் அபேதின் தெரிவித்துள்ளார். 

முத்தரப்பு டி20 தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு முதல் வெற்றி

பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு…

அத்துடன், இடதுகை சுழல் பந்துவீச்சாளர் ஒருவர் தேவை என பயிற்றுவிப்பாளர் கோரியதற்கமைய, அமினுல் இஸ்லாம் பிப்லெப் அணியில் இணைக்கப்பட்டுள்ளார் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதேவேளை, கடந்த இரண்டு போட்டிகளுக்குமான குழாத்தில் இணைக்கப்பட்டிருந்த சௌமிய சர்கார், மெஹிதி ஹசன், அபு ஹய்டர் மற்றும் யேசின் அரபாட் ஆகியோர் குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

பங்களாதேஷ் அணி தங்களுடைய அடுத்த போட்டியில் ஜிம்பாப்வே அணியை எதிர்வரும் 18ம் திகதி எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் குழாம்

சகிப் அல் ஹசன் (தலைவர்), முஷ்பிகுர் ரஹீம், மஹமதுல்லாஹ், சபீர் ரஹ்மான், மொஸ்டாக் ஹுசைன், லிடன் டாஸ், அபிப் ஹுசைன், தைஜுல் இஸ்லாம், முஷ்தபிசூர் ரஹ்மான், மொஹமட் சய்புதீன், மொஹமட் நயீப் சய்க், அமினுல் இஸ்லாம், நஜ்முல் இஸ்லாம் 

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<