சுற்றுலா பங்களாதேஷ் 17 வயதின்கீழ் கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை அணிகள் இடையிலான இரண்டாவது மூன்று நாட்கள் கொண்ட போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று (07) நிறைவடைந்தது.
>>அதிர்ச்சி தோல்வியுடன் 19 வயதின்கீழ் ஆசியக் கிண்ணத் தொடரில் இருந்து வெளியேறிய இலங்கை
இரண்டாம் நாள் ஆட்ட நிறைவில் பங்களாதேஷ் இளம் வீரர்கள் இலங்கையின் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்துக்கு பதில் வழங்கும் விதமாக தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
காலியில் நேற்று (06) ஆரம்பமான இந்தப் போட்டியில் இலங்கை வீரர்கள் நாணய சுழற்சியில் வென்று தமது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தினை ஆரம்பித்த நிலையில், இலங்கை சார்பில் இளம் வீரரான ரெஹான் பீரிஸ் 18 பெளண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக அபார சதம் விளாசி 138 ஓட்டங்களை எடுத்தார். இதனால் இலங்கை முதல் இன்னிங்ஸில் 84.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 304 ஓட்டங்கள் பெற்றது.
பங்களாதேஷ் பந்துவீச்சில் அப்துர் ரஹீம் 53 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைச் சாய்க்க, அஹ்சானுல் ஹக் 47 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை எடுத்தார்.
பின்னர் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடங்கிய பங்களாதேஷ் அணியானது இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது 62.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 231 ஓட்டங்கள் பெற்றது.
பங்களாதேஷ் 17 வயதின்கீழ் அணியின் துடுப்பாட்டத்தில் அட்ரிட்டோ கோஷ் 87 ஓட்டங்களையும், ரிதோய் ஹூசைன் 55 ஓட்டங்களையும் பெற்றார். இலங்கைப் பந்துவீச்சில் கித்ம விதானபதிரன 2 விக்கெட்டுக்களை சுருட்டினார்.
போட்டியின் சுருக்கம்
இலங்கை U17 – 304 (84.5) ரெஹான் பீரிஸ் 139, அப்துர் ரஹீம் 5/53
பங்களாதேஷ் U17 – 231/5 (62.5) அட்ரிட்டோ கோஷ் 87, ரிதோய் ஹூசைன் 55, கித்ம விதானபதிரன 2/35
இரண்டாம் நாள் நிறைவு