இலங்கை இளையோருடனான ஒருநாள் தொடரை வென்றது பங்களாதேஷ்

Bangladesh U19 Tour Of Sri Lanka 2025

15
Bangladesh U19 Tour Of Sri Lanka 2025

இலங்கை மற்றும் பங்களாதேஷ் 19 வயதின்கீழ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் ஆறாவது மற்றும் கடைசி போட்டி மழையால் கைவிடப்பட்டதை அடுத்து 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை பங்களாதேஷ் அணி 3–2 என கைப்பற்றியது. 

இலங்கை மற்றும் பங்களாதேஷ் 19 வயதின்கீழ் அணிகளுக்கு இடையிலான 6ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று (08) கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 39.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 188 ஓட்டங்களை எடுத்திருந்தபோது, மழை குறுக்கிட்டது 

அணித்தலைவர் அசிசுல் ஹக்கீம் 94 ஓட்டங்களையும், ரிஷாத் ஹொசைன் 48 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர். இலங்கை அணியின் பந்துவீச்சில், தரூஷ நவோத்யா, குகதாஸ் மாதுலன் மற்றும் ஹிமல் ரவிஹன்ச ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். 

இந்த தொடரின் முதல் போட்டியில் இலங்கை 19 வயதின்கீழ் அணி வெற்றி பெற்ற பிறகு, பங்களாதேஷ் 19 வயதின்கீழ் அணி இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது போட்டிகளில் வெற்றி பெற்றியீட்டி முன்னிலை பெற்றது. எனினும் கடந்த திங்கட்கிழமை கொழும்பு, SSC மைதானத்தில் நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 27 ஓட்டங்களால் போராடி வென்றது. 

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற 6ஆவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்தது, ஆனால் மழை காரணமாக போட்டி கைவிடப்பட பங்களாதேஷ் 19 வயதின்கீழ் அணி ஒருநாள் தொடரை வென்றது. 

இதன் மூலம் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை மண்ணில் ஒருநாள் தொடரொன்றை வென்று பங்களாதேஷ் 19 வயதின்கீழ் அணி வரலாறு படைத்தது. இறுதியாக 2015ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3க்கு 2 என்ற கணக்கில் ஹசன் மிராஸ் தலைமையிலான பங்களாதேஷ் 19 வயதின்கீழ் அணி கைப்பற்றியது. இந்த தொடரில் இலங்கை 19 வயதின்கீழ் அணியின் தலைவராக சரித் அசலங்க செயல்பட்டமை குறிப்பிடத்தக்கது  

இதேவேளை, இந்த தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக பங்களாதேஷ் 19 வயதின்கீழ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சவாத் அப்ரார் (6 இன்னிங்ஸ்களில் 302 ஓட்டங்கள்) இடம்பிடித்ததுடன், அதே அணியின் வேகப் பந்துவீச்சாளர் அல் ஃபஹாத் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய (4 இன்னிங்ஸ்களில் 12 விக்கெட்டுகள்) வீரராக மாறினார். 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<