சுற்றுலா பங்களாதேஷ் – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநிறைவில் இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடி வரும் பங்களாதேஷ் அணியானது சிறந்த நிலையில் காணப்படுகின்றது.
போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநிறைவில் நேற்று (19) இலங்கை அணியானது முதல் இன்னிங்ஸில் 93 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து 368 ஓட்டங்கள் பெற்றிருந்தது. களத்தில் ஆட்டமிழக்காது நின்ற கமிந்து மெண்டிஸ் 37 ஓட்டங்கள் பெற்றிருக்க, தனன்ஞய டி சில்வா 17 ஓட்டங்களுடன் இருந்தார்.
இலங்கை பங்களாதேஷினை விட 127 ஓட்டங்கள் பின்தங்கியிருக்க இன்று (20) போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் தமது துடுப்பாட்டத்தினைத் தொடர்ந்தது. போட்டி ஆரம்பித்து சிறிது நேரத்தில் அணித்தலைவர் தனன்ஞய டி சில்வா 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அதன் பின்னர் குசல் மெண்டிஸ் 05 ஓட்டங்களுடன் ஏமாற்றினார்.
அதனையடுத்து களத்தில் இருந்த கமிந்து மெண்டிஸ் – மிலான் ரத்நாயக்கவுடன் இணைந்து இலங்கை அணிக்கு நான்காம் நாளின் மதிய போசண இடைவேளை வரை நம்பிக்கை வழங்கினார்.
மதிய போசணத்தினை அடுத்து இலங்கை வீரர்கள் மிலான் ரத்நாயக்கவின் விக்கெட்டினை அவர் 39 ஓட்டங்கள் பெற்ற நிலையில் பறிகொடுத்தனர். அத்துடன் இலங்கையின் இறுதி நம்பிக்கை இணைப்பாட்டமும் 84 ஓட்டங்களுடன் முடிவடைந்தது.
தொடர்ந்து கமிந்து மெண்டிஸ் தன்னுடைய 5ஆவது டெஸ்ட் அரைச்சதத்துடன் 87 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்க, இறுதியில் இலங்கை அணியானது 131.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 485 ஓட்டங்களுடன் முதல் இன்னிங்ஸை நிறைவு செய்து கொண்டது.
பங்களாதேஷ் பந்துவீச்சில் நயீம் ஹஸன் 5 விக்கெட்டுக்களைச் சாய்க்க, ஹசன் மஹ்மூட் 3 விக்கெட்டுக்களைச் சுருட்டியிருந்தார். இலங்கையின் முதல் இன்னிங்ஸை அடுத்து 10 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த பங்களாதேஷ் அணியானது ஆட்டநேர நிறைவில் 177 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்படுகின்றது. பங்களாதேஷ் அணிக்கு நம்பிக்கை வழங்கிய அதன் துடுப்பாட்டத்தில் ஷட்மான் இஸ்லாம் 76 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
அதேவேளை களத்தில் ஆட்டமிழக்காதிருக்கும் பங்களாதேஷ் தலைவர் ஷன்டோ 56 ஓட்டங்கள் பெற்றிருக்க, முஷ்பிகுர் ரஹீம் 22 ஓட்டங்களுடன் உள்ளமை குறிப்பிடத்தக்கது.