இலங்கை A அணிக்காக சதமடித்து அசத்திய சதீர

Australia A Tour of Sri Lanka 2022

357

இலங்கை A கிரிக்கெட் அணிக்கெதிராக ஹம்பாந்தோட்டையில் நடைபெற்று வந்த நான்கு நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் சகலதுறையிலும் பிரகாசித்த அவுஸ்திரேலிய A கிரிக்கெட் 68 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.

இந்தப் போட்டியின் கடைசி நாளான இன்று (17) தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை A அணிக்காக சதீர சமரவிக்ரம சதமடித்தும், மினோத் பானுக அரைச்சதம் அடித்தும் கைகொடுத்தாலும் இலங்கை அணி தோல்வியைத் தழுவியது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய A அணி, இலங்கை A அணியுடன் 2 ஒருநாள் மற்றும், நான்கு நாட்கள் கொண்ட 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி வருகின்றது.

முன்னதாக கொழும்பில் நடைபெற்ற ஒருநாள் தொடர் 1க்கு 1 என சமநிலையில் நிறைவடைந்தது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான நான்கு நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி கடந்த 14ஆம் திகதி ஹம்பாந்தொட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் ஆரம்பமாகியது.

இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய A அணி, ஜோஷ் பிலிப், (94), நெதன் மெக்அண்ட்ரூ (92) மற்றும் ஆரோன் ஹார்டி (62) ஆகியோரது அரைச் சதங்களின் உதவியுடன் முதல் இன்னிங்ஸுக்காக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 379 ஓட்டங்களை எடுத்தது.

இலங்கை A அணியின் பந்துவீச்சு சார்பில் டில்ஷான் மதுஷங்க 64 ஓட்டங்களுக்கு 4  விக்கெட்டுக்களையும், சுமிந்த லக்ஷான் மற்றும் லக்ஷித மானசிங்க ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகள் வீதமும் வீழ்த்தியிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை A அணி, நுவனிந்து பெர்னாண்டோ (86), லஹிரு உதார (50) ஆகிய இருவரினதும் அரைச் சதங்களின் உதவியுடன் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 274 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அவுஸ்திரேலிய A அணியின் பந்துவீச்சு சார்பில் டோட் மெர்பி 4 விக்கெட்டுகளையும், மார்க் ஸ்டெக்கெட்டி 3 விக்கெட்டுகளையும், மெட் குஹ்னெமன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

இதனையடுத்து 105 ஓட்டங்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய A அணி, ஜோஷ் பிலிப் (69) மற்றும் நிக் மெட்டின்சன் (59) ஆகிய இருவரும் பெற்றுக்கொண்ட அரைச் சதங்களின் உதவியுடன் 5 விக்கெட் இழப்பிற்கு 221 ஓட்டங்களை எடுத்து ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்;டது.

இதன்படி, 318 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை A அணி, அவுஸ்திரேலிய ஏ அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 72 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 249 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 68 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

இலங்கை A அணிக்காக அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய சதீர சமரவிக்ரம, 146 பந்துகளில் 9 பௌண்ரிகளுடன் 105 ஓட்டங்களையும், மினோத் பானுக 87 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர்.

அவுஸ்திரேலிய A அணியின் பந்துவீச்சில் தன்வீர் சங்க 4 விக்கெட்டுகளையும், நெதன் மெக்அண்ட்ரூ மற்றும் ஆரோன் ஹார்டி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

இரு அணிகளுக்கும் இடையிலான உத்தயோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் 2ஆவது போட்டி 24ஆம் திகதி ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

அவுஸ்திரேலிய A அணி – 379/10 (88.1) – ஜோஷ் பிலிப், 94, நெதன் மெக்அண்ட்ரூ 92, ஆரோன் ஹார்டி 62, மார்க் ஸ்டெக்கெட்டி 47, டில்ஷான் மதுஷங்க 4/64, சுமிந்த லக்ஷான் 3/59, லக்ஷித மானசிங்க 3/115

இலங்கை A அணி – 274/10 (79.1) – நுவனிந்து பெர்னாண்டோ 86, லஹிரு உதார 50, லக்ஷித மானசிங்க 35, பபசர வதுகே 30, டோட் மெர்பி 4/67, மார்க் ஸ்டெக்கெட்டி 3/51, மெட் குஹ்னெமன் 2/41

அவுஸ்திரேலிய A அணி – 221/5 (46) – ஜோஷ் பிலிப் 69, நிக் மெட்டின்சன் 59, மார்கஸ் ஹரிஸ் 32, லக்ஷித மானசிங்க 2/83

இலங்கை A அணி – 249/10 (72) – சதீர சமரவிக்ரம 105, மினோத் பானுக 87, சுமிந்த லக்ஷான் 23, தன்வீர் சங்கா 4/56, நெதன் மெக்அண்ட்ரூ 3/31, ஆரோன் ஹார்டி 3/35

முடிவு – அவுஸ்திரேலிய A அணி 68 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<