வோர்னர், ஸ்மித், பென்குரொப்ட் மீண்டும் அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியில்

476
Newsnumber.com

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் நடைபெறும் ஆஷஷ் டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு கிரிக்கெட் உலகில் பலத்த எதிர்பார்ப்பு காணப்படுகின்றது. 1882ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் திகதி அவுஸ்திரேலியாவில் முதல் முதலில் ஆரம்பிக்கப்பட்ட இத்தொடரின் கிண்ணம் சின்னதாக இருந்தாலும் அதைக்கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணம் பெரிதாக காணப்படுகின்றது. 

1882ஆம் ஆண்டு தொடக்கம் 2018 வரையான காலப்பகுதியில் இதுவரையில் 70 ஆஷஷ் தொடர்கள் நடைபெற்றுள்ளது. இதில் 33 தடவைகள் அவுஸ்திரேலிய அணியும், 32 தடவைகள் இங்கிலாந்து அணியும் தொடரை வென்று கிண்ணத்தை கைப்பற்றியுள்ளன.

இளம் வயதில் திடீர் ஓய்வை அறிவித்தார் மொஹமட் ஆமிர்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் வரிசையில…

தற்போது 71ஆவது ஆஷஷ் தொடரானது அடுத்த மாதம் (ஆகஸ்ட்) முதலாம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ளது. இறுதியாக நடைபெற்ற 2017 – 2018 ஆஷஷ் தொடரில் அவுஸ்திரேலிய அணி 4 – 0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று நடப்பு சம்பியனாக திகழ்கின்றது. 

இந்நிலையில் அடுத்து ஆரம்பமாகவுள்ள ஆஷஷ் கிண்ணத்தை கைப்பபற்றுவதற்கான முயற்சியில் இரு அணிகளும் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் குறித்த ஆஷஷ் கிண்ண தொடருக்கான அவுஸ்திரேலிய அணியின் 17 பேர் அடங்கிய குழாம் அந்நாட்டு கிரிக்கெட் சபையின் தேர்வுக்குழு தலைவர் ட்ரேவர் ஹொன்ஸினால் இன்று (26) வெளியிடப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள குழாத்தின் அடிப்படையில் அவுஸ்திரேலிய அணியின் தலைவராக தொடர்ந்தும் விக்கெட் காப்பாளர் டிம் பெய்ன் செயற்படவுள்ளார். அத்துடன் அணியின் உப தலைவர்களாக சகலதுறை வீரர் பெட் கம்மின்ஸ் மற்றும் ட்ரெவிஸ் ஹெட் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். 

கடந்த வருடம் மார்ச் மாதம் முழு உலகத்தின் கவனத்தையும் ஈர்த்த பந்து சேதப்படுத்திய விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டு விசாரணைகளின் பின்னர் முக்கிய சூத்திரதாரிகளாக அடையாளம் காணப்பட்டு தடைக்கு உள்ளாகிய அப்போதைய அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோர்னர், கெமரூன் பென்குரொப்ட் ஆகியோர் தடை நிறைவடைந்து மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளனர். 

இதில் தடையின் பின்னர் டேவிட் வோர்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் அண்மையில் நிறைவுக்கு வந்த உலகக்கிண்ண தொடரில் அவுஸ்திரேலிய அணிக்கு திரும்பிய நிலையில், கெமரூன் பென்குரொப்ட் தடையின் பின்னர் முதல் முறையாக அவுஸ்திரேலிய அணிக்கு திரும்பவுள்ளார்.  

2 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள 29 வயதுடைய பந்துவீச்சு சகலதுறை வீரர் மிச்செல் நேஸர் தொடர்ந்தும் முதல்தர போட்டிகளில் பிரகாசித்துவந்ததன் காரணமாக ஆஷஷ் தொடருக்கான குழாமில் அறிமுக வீரராக இடம்பெற்றுள்ளார். 2010ஆம் ஆண்டு முதல்தர போட்டிகளில் அறிமுகம் பெற்ற நேஸர் 45 போட்டிகளில் 138 விக்கெட்டுக்களையும், துடுப்பாட்டத்தில் 1,604 ஓட்டங்களையும் குவித்துள்ளார். 

“உலகளாவிய ரீதியில் உள்ள சிறுவர்களை ஈர்த்தவர் மாலிங்க” – தமிம்

இலங்கை அணியின் அனுபவ வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க உலகளாவிய…

டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் காணப்படும் வீரரான உபதலைவர் பெட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டாக், ஜொஸ் ஹெஸில்வூட், ஜேம்ஸ் பெட்டின்ஸன், மிச்செல் நேஸர், பீட்டர் சிடில், மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் வேகப்பந்துவீச்சாளர்கள் வரிசையில் குழாமில் இடம்பெற்றுள்ளனர்.  

அண்மையில் அவுஸ்திரேலிய A அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த வேளையில் A அணிக்காக பிரகாசித்த விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர் மெத்யூ வேட் மற்றும் மார்னஸ் லபுஸ்சக்னே ஆகியோர் 17 பேர் கொண்ட குழாமில் இடம்பெற்றுள்ளனர். 

முக்கிய சுழற்பந்துவீச்சாளர்கள் வரிசையில் நைதன் லயன் மாத்திரம் இடம்பெற்றுள்ளார். பகுதிநேர சுழற்பந்துவீச்சாளரான மார்னஸ் லபுஸ்சக்னேவும் இணைந்து சுழற்பந்துவீச்சாளர்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளார். கடந்த உலகக்கிண்ண தொடரின் இறுதி நேரத்தில் உபாதைக்குள்ளாகிய உஸ்மான் கவாஜா ஆஷஷ் குழாமில் இடம்பிடித்துள்ளார். 

அவுஸ்திரேலியாவின் 17 பேர் கொண்ட குழாம்

டிம் பெய்ன் (அணித்தலைவர்), கெமரூன் பென்குரொப்ட், பெட் கம்மின்ஸ், மார்கஸ் ஹாரிஸ், ஜொஸ் ஹெஸில்வூட், ட்ரெவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஸ்சக்னே, நைதன் லயன், மிட்செல் மார்ஸ், மிச்செல் நேஸர், ஜேம்ஸ் பெட்டின்ஸன், பீட்டர் சிடில், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டாக், மெத்யூ வேட், டேவிட் வோர்னர்

ஆஷஷ் கிண்ண தொடர் அட்டவணை

  • 1 – 5 ஆகஸ்ட் – முதலாவது டெஸ்ட் போட்டி – எஜ்பஸ்டன்
  • 14 – 18 ஆகஸ்ட் – இரண்டாவது டெஸ்ட் போட்டி – லோட்ஸ்
  • 22 – 26 ஆகஸ்ட் – மூன்றாவது டெஸ்ட் போட்டி – ஹெடிங்லி
  • 4 – 8 செப்டம்பர் – நான்காவது டெஸ்ட் போட்டி – ஓல்ட் ட்ரபெர்ட்
  • 12 – 16 செப்டம்பர் – ஐந்தாவது டெஸ்ட் போட்டி – ஓவல்

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<