கோஹ்லியின் சாதனையை முறியடித்தார் பாபர் அசாம்

120

சர்வதேச T20 கிரிக்கெட் போட்டிகளில் குறைந்த இன்னிங்ஸில் 2,000  ஓட்டங்களைக் கடந்த வீரராக பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அசாம் புதிய சாதனை படைத்தார்.

பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் கொண்ட T20 தொடரில் இரு அணிகளும்
1-1 என சமநிலை வகித்தன.

இந்த நிலையில், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஹராரேயில் நேற்று நடைபெற்ற மூன்றாவதும், கடைசியுமான T20 கிரிக்கெட் போட்டியின்போது இந்த சாதனைக்குரிய மைல்கல்லை பாபர் அசாம் எட்டினார்.

IPL இல் புதிய வரலாறு படைத்தார் விராத் கோஹ்லி

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றதுடன், அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபர் அசாம் 52 ஓட்டங்களைப் பெற்றார்.

அத்துடன், இந்தப் போட்டியில் பாபர் அசாம் 17 ஓட்டங்களை எடுத்தபோது T20 போட்டிகளில் 2,000 ஓட்டங்கள் மைல்கல்லை எட்டினார். இது அவருக்கு 52ஆவது T20 இன்னிங்ஸ் ஆகும். இதன்மூலம் T20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 2,000 ஓட்டங்களைக் கடந்த வீர்ர என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

இதற்கு முன் விராட் கோஹ்லி 56 இன்னிங்ஸில் 2,000 ஓட்டங்கள் மைல்கல்லை எட்டி முதலிடத்தில் இருந்தார். தற்போது பாபர் அசாம் அதை முறியடித்துள்ளார்.

T20 போட்டிகளில் KL ராகுல் புதிய சாதனை

இதனிடையே, அவுஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச் 62 இன்னிங்ஸிலும், நியூசிலாந்தின் பிரெண்டன் மெக்கல்லம் 66 இன்னிங்ஸிலும், மார்ட்டின் கப்தில் 68 இன்னிங்ஸிலும் 2,000 ஓட்டங்களைக் கடந்துள்ளனர்.

இதுஇவ்வாறிருக்க, சர்வதேச T20 கிரிக்கெட் போட்டிகளில் 2,000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்த 11ஆவது வீரராகவும் பாபர் அசாம் இடம்பிடித்தார்

முன்னதாக, பாகிஸ்தான் வீரர்களான சொஹைப் மலிக், மொஹமட் ஹபீஸ் ஆகிய இருவரும் இந்த மைல்கல்லை எட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சர்வதேச T20 கிரிக்கெட் போட்டிகளைப் பொறுத்தமட்டில் விராத் கோஹ்லி மாத்திரம் தான் இப்போதைக்கு 3,000 ஓட்டங்களைக் கடந்துள்ள வீரராவார்.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<