2022இன் ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீரராக பாபர் அசாம்

47

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐசிசி) 2022ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரருக்கான சேர் கார்பீல்ட் சோபர்ஸ் விருது மற்றும் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருது ஆகிய 2 விருதுகளையும் பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அசாம் வென்றுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவை ஓவ்வொரு ஆண்டும் சர்வதேச போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து, அவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்து வருகிறது. டெஸ்ட், ஒருநாள், T20I என மூன்று வகை கிரிக்கெட்டிலும் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களுக்கு பல்வேறு பிரிவுகளுக்காக விருதுகள் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில், 2022ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் 2022ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் ஆகிய 2 விருதுகளையும் பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அசாம் தட்டிச் சென்றுள்ளார்.

கடந்த ஆண்டில் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள், T20I) சேர்த்து 44 போட்டிகளில் ஆடிய அவர் 8 சதங்கள், 17 அரைச் சதங்கள் உட்பட 2,598 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதன் மூலம் கடந்த ஆண்டில் 2 ஆயிரம் ஓட்டங்களுக்கு மேல் குவித்த ஒரே வீரராக இடம்பிடித்த பாபர் அசாமுக்கு ஐசிசியினால் 2022ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 2018 மற்றும் 2019 என தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் விராத் கோஹ்லி வென்ற நிலையில், தற்போது 2021 மற்றும் 2022 ஆகிய 2 ஆண்டுகளுக்கான ஐசிசியின் சிறந்த வீரர் விருதை பாபர் அசாம் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

அத்துடன் அவர் 2022ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐசிசியின் ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் உள்ள 28 வயதான பாபர் அசாம், 2022இல் 9 ஒருநாள் போட்டிகளில் ஆடி 3 சதங்கள் மற்றும் 5 அரைச் சதங்களைப் பெற்று 679 ஓட்டங்களைக் குவித்தார்.

இதன் மூலம் ஐசிசியின் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதை தொடர்ச்சியாக 2ஆவது தடவையாக அவர் பெற்றுக் கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். ஏற்கனவே 2021ஆம் ஆண்டிலும் பாபர் அசாம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதை பெற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதுமாத்திரமின்றி, கடந்த ஆண்டில் 26 T20I கிரிக்கெட் போட்டிகளில் ஆடிய பாபர் அசாம், ஒரு சதம், 5 அரைச் சதங்கள் அடங்களாக 735 ஓட்டங்களையும் குவித்தார். இதில் கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணியின் தலைவராக செயல்பட்டு அந்த அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் செல்வதிலும் பாபர் அசாம் முக்கிய பங்கு வகித்தார்.

இதனிடையே, கடந்த ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக இங்கிலாந்து அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜோ ரூட்டுக்குப் பிறகு இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவராக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டார். அவரது தலைமைத்துவத்தில் இங்கிலாந்து அணி ஆடிய 10 டெஸ்ட் போட்டிகளில் 9 வெற்றிகளை பெற்றுள்ளது. இதில் பாகிஸ்தான் மண்ணில் முதல் முறையாக அந்த அணியை டெஸ்ட் தொடரில் வெள்ளையடிப்புச் செய்து வரலாற்று சாதனை படைத்தது

அதுமாத்திரமின்றி, 2022ம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக ஆடி 870 ஓட்டங்களையும் குவித்தார். துடுப்பாட்டம், பந்துவீச்சு மட்டுமல்லாது கடந்த ஆண்டில் தலைவராகவும் அசத்தியதன் விளைவாக, 2022ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரருக்கான ஐசிசி விருதை பென் ஸ்டோக்ஸ் வென்றுள்ளார்.

இதேவேளை, இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவர் நாட் சிவெர் கடந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை மற்றும் சிறந்த ஒருநாள் போட்டி வீராங்கனை ஆகிய இரட்டை விருதுகளை தட்டிச் சென்றார்.

>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<