ஏப்ரல் மாதத்துக்கான ICC இன் சிறந்த வீரரானார் பாபர் அசாம்

ICC Men's Player of the Month award - April

159
Getty Image
 

ஏப்ரல் மாதத்திற்கான சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ICC இன்) சிறந்த வீரராகப் பாகிஸ்தான் கிரிக்கெட் அணித் தலைவர் பாபர் அசாம் தேர்வு செய்யப்பட்டுள்ளார் 

கடந்த ஜனவரி மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் சர்வதேச அளவில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை தேர்ந்தெடுத்து ICC விருது வழங்கி வருகிறது

இதன்படி, ஜனவரி மாதம் முதல் 3 மாதங்கள் தொடர்ந்து இந்திய வீரர்கள் இந்த விருதினை பெற்றுக்கொண்டனர். இந்த நிலையில பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அசாமுக்கு ஏப்ரல் மாதத்திற்கான விருது தற்போது கிடைத்துள்ளது.

ICC இன் மாதத்தின் சிறந்த வீரர் விருதுக்கு பாகிஸ்தான் வீரர்கள் பரிந்துரை

ஏப்ரல் மாதம் நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் திறமைகளை வெளிப்படுத்தியதன் மூலம் பாபர் அசாம் இந்த விருதினை தட்டிச்சென்றுள்ளார்.  

அத்துடன், இந்தத் தொடரில் இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லியின் இரண்டு முக்கிய சாதனைகளையும் அவர் தகர்த்துள்ளார்.

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான T20 கிரிக்கெட் தொடரில் ஓட்ட மழை பொழிந்ததன் மூலம் பாபர் அசாம், T20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 2000 ஓட்டங்களைக் (52 இன்னிங்ஸ்கள்) கடந்த முதல் வீரராக இடம்பிடித்தார்.

இதற்குமுன் இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி 56 இன்னிங்ஸ்களில் 200 ஓட்டங்களைக் கடந்ததுதான் அதிவேக சாதனையாக இருந்தது.

அதேபோல, தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாபர் அசாம் 103 ஓட்டங்களை விளாசினார். இரண்டாவது போட்டியில் 31 ஓட்டங்களை மட்டுமே அவரால் எடுக்க முடிந்தது

கோஹ்லியின் சாதனையை முறியடித்தார் பாபர் அசாம்

மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 91 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம், ஐசிசி ஒருநாள் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் விராட் கோஹ்லியை இரண்டாவது இடத்திற்குத் தள்ளினார். கோஹ்லி 2017ஆம் ஆண்டு முதல் முதலிடத்தைத் தக்கவைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, அவுஸ்திரேலிய வீராங்கனை ஆலிசா ஹீலி ஏப்ரல் மாதத்திற்கான ICC இன் சிறந்த வீராங்கனைக்கான விருதை வென்றுள்ளார்

நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் 155 ஓட்டங்களை எடுத்ததன்மூலம் ஹீலிக்கு இந்த விருது கிடைத்துள்ளது. இந்தத் தொடரின் அதிக ஓட்டங்களைக் குவித்தவர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<