சிறந்த பதிலடி கொடுக்கும் மேற்கிந்திய அணி

213
WI vs Ind Day 2
AFP/Getty Images

இந்திய – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி செயின்ட் லூசியாவில் உள்ள கிராஸ் தீவின் டேரன் சமி தேசிய மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஜேசன் ஹோல்டர் முதலில் பந்து வீசுவதற்குத் தீர்மானம் செய்தார். இதன் படி முதலில் ஆடிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கட்டுகள் இழப்பிற்கு 234 ஓட்டங்களை  சேர்த்து இருந்தது.

ரவி அஸ்வினும், சஹாவும் களத்தில் இருந்தனர். இரண்டாம் நாளான நேற்று இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 265 பந்துகளில் அஸ்வின் சதம் அடித்தார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் அடித்த 4ஆவது சதம் இதுவாகும். அஸ்வினைத் தொடர்ந்து சஹாவும் 223 பந்துகளில் சதம் அடித்தார். இருப்பினும் 104 ஓட்டங்களோடு  சாகா ஆட்டமிழக்க, அஸ்வின் 118 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் விக்கட்டைப் பறிகொடுத்தார்.

ஜடேஜா 6 ஓட்டங்களோடு  ஆட்டமிழந்தார்.  இஷாந்த் சர்மா, புவனேஷ் குமார் ஓட்ட கணக்கை துவக்காமல் விக்கட்டைப் பறிகொடுத்தனர். இதனால் இந்திய அணி 353 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அனைத்து விக்கட்டுகளையும் பறிகொடுத்தது.

மேற்கிந்திய தீவுகள் தரப்பில் ஜோசப் மற்றும் கமின்ஸ் இருவரும் தலா 3 விக்கட்டுகளை வீழ்த்த கேபிரியல் சேஸ் ஆகியோர் 2 விக்கட்டுகள் வீதம் கைப்பற்றி இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் அணி தமது இனிங்ஸை ஆரம்பித்தது. அந்த அணியின் கே.சி.பிராத்வெயிட், ஜான்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜான்சன் 23 ஓட்டங்களோடு ஆட்டம் இழந்தார். பின்னர் கே.சி.பிராத்வெயிட்டும், பிராவோவும் ஜோடி சேர்ந்தனர். 141 பந்துகளில் பிராத்வெயிட் அரைச்சதம் அடித்தார்.

பின் 2ஆம் நாள் ஆட்ட நேர இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி  47 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கட் இழப்பிற்கு 107 ஓட்டங்களை எடுத்தது. கே.சி.பிராத்வெயிட் ஆட்டம் இழக்காமல் 53 ஓட்டங்களோடும், பிராவோ ஆட்டம் இழக்காமல் 18 ஓட்டங்களோடும் களத்தில் இருந்தனர். தற்போது வரை மேற்கிந்திய தீவுகள் அணி 246 ஓட்டங்கள் இந்தியாவை விட பின்தங்கியுள்ளது.

போட்டியின் சுருக்கம்

இந்தியா – 353
ரவி அஷ்வின் 118, சஹா 104, லோகேஷ் ராஹுல் 50, அஜின்கியா ரஹானே 35
அல்சாரி ஜோசப் 69/3, கமின்ஸ் 54/3, ரோஸ்டன் சேஸ் 70/2

மேற்கிந்திய தீவுகள் 107/1
கே.சி.பிராத்வெயிட் 53*, டெரன் பிராவோ 18*

மேற்கிந்திய தீவுகள் அணி 246 ஓட்டங்கள் பின்னிலையில்