அவுஸ்திரேலியாவின் சிறந்த கிரிக்கெட் வீரராக பெட் கம்மின்ஸ்

136
(Photo by ISHARA S. KODIKARA / AFP)

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை (CA) தங்களது கிரிக்கெட் வீரர்களை கெளரவிக்கும் முகமாக ஒவ்வொரு ஆண்டும் ஏற்பாடு செய்யும் விருது வழங்கும் விழா இந்த ஆண்டும் (2019) மிகவும் கோலாகலமாக நடைபெற்று முடிந்திருக்கின்றது.

இந்த ஆண்டுக்கான விழாவில் கடந்த ஆண்டு கிரிக்கெட் போட்டிகளில் ஜொலித்த அவுஸ்திரேலிய வீர, வீராங்கனைகள் பல்வேறு சிறப்பு விருதுகளுடன் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.  

“எமது துடுப்பாட்ட வீரர்களால் ஓட்டங்களை குவிக்க முடியும்” – திமுத் நம்பிக்கை

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக இன்று (13) ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் தொடரில், இலங்கை…

இந்த விழாவில் அவுஸ்திரேலிய அணியின் கடந்த ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரருக்கான அலன் போடர் விருதினை பந்துவீச்சு சகலதுறை வீரர் பெட் கம்மின்ஸ் வென்றார்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அண்மைய டெஸ்ட் வெற்றிகளுக்கு முக்கிய காரணமான கம்மின்ஸ், அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு கொடுக்கப்படும் விருதுகளில் உயர் கெளரவம் பொருந்தியதாக உள்ள அலன் போடர் விருதினை வென்றது இதுவே முதல் தடவையாகும்.

பெட் கம்மின்ஸ் இந்த விருது கொடுப்பதற்காக வாக்கெடுப்பு நடாத்தப்பட்ட காலப்பகுதியில் அவுஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 44 விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு, இரண்டு அரைச்சதங்களையும் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் கடந்த ஆண்டின் அவுஸ்திரேலிய அணியின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான பெலின்டா கிளார்க் விருதினை  விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீராங்கனை அலிஸா ஹீலி வென்றார்.

அலிஸா ஹீலி சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்குரிய விருது மட்டுமல்லாது அவுஸ்திரேலியாவினுடைய ஒரு நாள் போட்டிகளுக்கான சிறந்த வீராங்கனை விருதினையும், T20 போட்டிகளுக்கான சிறந்த வீராங்கனை விருதினையும் வென்று சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணிக்காக  ஆறு ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய அலிஸா 54.83 என்ற துடுப்பாட்ட சராசரியுடன் 329 ஓட்டங்களை குவித்திருந்ததோடு, T20 போட்டிகளில் 56.25 என்ற துடுப்பாட்ட சராசரியுடன் 225 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த விருது வழங்கும் விழாவில் கடந்த ஆண்டுக்கான அவுஸ்திரேலியாவின் சிறந்த ஒரு நாள் போட்டி வீரராக மார்கஸ் ஸ்டோனிஸ் தெரிவானர்.

இளம் சகலதுறை வீரரான மார்கஸ் ஸ்டோனிஸ் அவுஸ்த்திரேலிய அணிக்காக மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் அண்மைக்காலமாக ஜொலித்து வருவதுடன் தனது தொடர்ச்சியான சிறப்பாட்டத்திற்காக இலங்கை அணியுடனான தொடரின் போது அவுஸ்திரேலிய டெஸ்ட் குழாத்திலும் இடம் பிடித்திருந்தார்.

>>தொடர் தோல்வியால் டெஸ்ட் தரவரிசையில் இங்கிலாந்துக்கு பாரிய பின்னடைவு

அதேவேளை இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் இணைக்கப்பட்டு அவுஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் போட்டிகள் எதிலும் ஆடாமல் போன விக்டோரிய பிராந்திய வீரர் வில் புகோவோஸ்கி சிறந்த இளம் கிரிக்கெட் வீரருக்கான “டொன் பிரட்மன்” விருதினை வென்றார். இதேநேரம் சிறந்த இளம் கிரிக்கெட் வீராங்கனைக்கான பெட்டி வில்சன் விருது, ஜோர்ஜியா வேர்ஹமிற்கு கொடுக்கப்பட்டது.

அவுஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளுக்கு மேல் சாய்த்த ஆறாவது வீரராக வரலாறு படைத்து அவுஸ்திரேலிய அணிக்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர்கள் தரவரிசையில் ஆறாம் இடத்தில் இருக்கும் சுழல் பந்துவீச்சாளர் நதன் லயன் கடந்த ஆண்டிற்கான அவுஸ்திரேலிய அணியின் சிறந்த டெஸ்ட் வீரராக தெரிவாகினார்.

இதேநேரம் துடுப்பாட்ட சகலதுறை வீரரான கிளேன் மெக்ஸ்வேல், கடந்த ஆண்டுக்கான அவுஸ்திரேலிய அணியின் சிறந்த T20 வீரர் விருதினை பெற்றுக் கொண்டார்.

கடந்த ஆண்டிற்கான அவுஸ்திரேலியாவின் உள்ளூர் போட்டிகளின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர் மெத்திவ் வேட் பெற, ஹீத்தர் கிரஹம் சிறந்த உள்ளூர் கிரிக்கெட் வீராங்கனைக்கான விருதை வென்றார்.

பந்து சேதப்படுத்தல் சர்ச்சையில் சிக்கிய அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோருக்கு 2014ஆம் ஆண்டிற்கு பின்னர் இந்த விருது வழங்கும் விழாவில் விருதுகள் எதுவும் வழங்கப்படவில்லை.

இந்த விருது வழங்கும் விழாவில் கௌரவிக்கப்பட்ட வீர, வீராங்கனைகள் கடந்த ஆண்டில் நடைபெற்றிருந்த கிரிக்கெட் போட்டிகளில் வெளிப்படுத்திய திறமைகளுக்கு  கொடுக்கப்பட்ட விசேட வாக்குகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<