இலங்கை அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த ஆஸி.

367

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான இன்று அவுஸ்திரேலிய அணி 196/3 ஓட்டங்களை குவித்து இலங்கை அணிக்கு 516 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

அவுஸ்திரேலிய டெஸ்ட் போட்டியில் தொடர்ந்தும் விளையாட முடியும் – திமுத் கருணாரத்ன

அவுஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின்….

கென்பெராவின் மனூகா ஓவலில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 534 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடை நிறுத்திய நிலையில், இலங்கை அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 215 ஓட்டங்களுக்கு சுருண்டது. பின்னர் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 196 ஓட்டங்களை குவித்து இலங்கை அணிக்கு 516 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இன்று முதல் இன்னிங்ஸிற்காக களமிறங்கிய இலங்கை அணிக்கு நேர்த்தியான இணைப்பாட்டத்தை தனன்ஜய டி சில்வா மற்றும் குசல் பெரேரா ஆகியோர் வழங்கியிருந்தனர். எனினும், துரதிஷ்டசவமாக உபாதைக்கு முகங்கொடுக்க நேரிட்ட குசல் பெரேரா 29 ஓட்டங்களுடன் வெளியேறினார். அணியின் 53வது ஓவரை ஜெய் ரிச்சட்சன் வீச, குசல் பெரேராவின் ஹெல்மட் பகுதியில், பந்து இரண்டு தடவைகள் தாக்கியது. இதன் போது உபாதைக்குள்ளான குசல் பெரேரா களத்திலிருந்து வெளியேறினார்.  இவரது வெளியேற்றத்துக்கு பின்னர் தடுமாறிய இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க ஆரம்பித்தது.

Photos: Sri Lanka Vs Australia 2nd Test – Day 3

எனினும் நேற்றைய தினம் பௌன்சர் பந்து தாக்கியதில் கடுமையான உபாதைக்கு உள்ளான திமுத் கருணாரத்ன இன்றைய தினம் களமிறங்கி தனது அரைச் சதத்தை கடந்தார். இதற்கிடையில் தனன்ஜய டி சில்வா மிச்சல் ஸ்டார்க்கின் பந்துவீச்சில் துரதிஷ்டவசமாக 25 ஓட்டங்களுடன் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து திமுத் கருணாரத்ன 59 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

இவர்களின் ஆட்டமிழப்புகளை தொடர்ந்து தடுமாறிய இலங்கை அணிக்கு டிக்வெல்ல மாத்திரம் 25 ஓட்டங்களை வேகமாக பெற்றுக்கொடுக்க, ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். இதன்படி குசல் பெரேரா மீண்டும் துடுப்பெடுத்தாட களமிறங்காக நிலையில், இலங்கை அணி 215 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பந்துவீச்சில்  மிச்சல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளையும், நெதன் லையன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

திமுத் கருணாரத்னவின் மோசமான உபாதையால் இலங்கைக்கு பின்னடைவு

கென்பெராவின் – மனூகா ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும்….

இதன் பின்னர் 319 ஓட்டங்கள் முன்னிலையில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணியின், ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் 25 ஓட்டங்களுடன் வெளியேற்றப்பட்டனர். முதல் இன்னிங்ஸில்  சதம் கடந்த ஜோ பேர்ன்ஸ் மற்றும் மார்கஸ் ஹெரிஸ் ஆகியோர் ஆட்டமிழந்து வெளியேற, அடுத்து வந்த மெர்னஸ் லெபுச்செங் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். எனினும் இதன் பின்னர் ஜோடி சேர்ந்த ட்ராவிஷ் ஹெட் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியோர் இலங்கை அணியின் பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ஓட்டங்களை குவித்தனர்.

இவர்கள் இருவரும் நான்காவது விக்கெடுக்காக 159 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொள்ள அவுஸ்திரேலிய அணி 196 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை ஆட்டத்தை இடைநிறுத்தி, வெற்றி இலக்காக 516 ஓட்டங்களை நிர்ணயித்தது. துடுப்பாட்டத்தில் உஸ்மான் கவாஜா சதம் கடந்து 101 ஓட்டங்களையும், ட்ராவிஷ் ஹெட் 59 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் கசுன் ராஜித 2 விக்கெட்டுகளையும், விஷ்வ பெர்னாண்டோ ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

பின்னர் இமாலய வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி ஆட்டநேர நிறைவில் விக்கெட்டிழப்பின்றி 17 ஓட்டங்களை பெற்றுள்ளது. இன்னும் இலங்கை அணி வெற்றி பெறுவதற்கு 499 ஓட்டங்களை பெற வேண்டும்.

போட்டி சுருக்கம்