டி20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறியது பாகிஸ்தான்

411
India World T20 Cricket Pakistan Australia
Aaron Finch and Shoaib Malik shake hands after the match, Australia v Pakistan, World T20 2016, Group 2, Mohali, March 25, 2016 ©Associated Press

6ஆவது 20க்கு இருபது உலகக் கிண்ணக் கிரிக்கட் தொடர்  விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ள நிலையில்  இன்று வெள்ளிக்கிழமை நடைபெறும் இரண்டு முக்கியமான போட்டிகளின் முதல் போட்டியில் ஷஹிட் அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்த உலகக் கிண்ணக் கிரிக்கட் தொடரில்அரையிறுதிக்கு முன்னேற  கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான அவுஸ்திரேலியா அணியை  மொஹாலியில் அமைந்துள்ள பிண்டரா மைதானத்தில் சந்தித்தது.

துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான பிண்டரா மைதானத்தில் தீர்மானமிக்க நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.

இன்றைய போட்டியில் விளையாடிய அணி விபரங்கள்,

பாகிஸ்தான் அணி:

ஷஹிட் அப்ரிடி (தலைவர்), அஹமத் ஷேசாத், சர்ஜீல் கான், காலித் லதீப், உமர் அக்மல், சொஹைப் மலிக், சர்ப்ராஸ் அஹமத், இமாத் வசீம், வஹாப் ரியாஸ், மொஹமத் ஆமீர், மொஹமத் சமி

அவுஸ்திரேலியா அணி:

ஸ்டீவ் ஸ்மித் (தலைவர்), உஸ்மான் கவாஜா, ஷேன் வொட்சன், அரொன் பிஞ்ச், டேவிட் வொர்னர், க்லென் மெக்ஸ்வல், ஜேம்ஸ் போல்க்னர், பீடர் நெவில் , ஜொஸ் ஹெசல்வூட் , எடம்  Zசம்பா , நேதன் கோல்ட்டர் நைல்

நடுவர்கள் மெரைஸ் எரஸ்மஸ் மற்றும் குமார் தர்மசேன

இதன்படி அவுஸ்திரேலிய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட  வீரர்களாக அரொன் பிஞ்ச் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியோர் களமிறங்கினார்கள். முதல் விக்கட்டுக்காக 28 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் கவாஜா 16 பந்துகளில் 21 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து அதிரடி ஆட்டக் காரர் டேவிட் வோர்னர் 9 ஓட்டங்களோடு ஏமாற்றம் அளிக்க அரொன் பிஞ்ச் 15 ஓட்டங்களை  எடுத்திருந்த நிலையில் இமாத் வசிம் வீசிய பந்து வீச்சில் போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழக்க அவுஸ்திரேலிய அணி 57 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளைப் பறிகொடுத்து சற்று நெருக்கடியான நிலையில் காணப்பட்டது.

இதனை அடுத்து க்லென் மெக்ஸ்வெல் மற்றும் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் ஜோடி அணியை நெருக்கடியில் இருந்து மீட்டனர். வேகமாகத் துடுப்பாடிய க்லென் மெக்ஸ்வெல் 18 பந்துகளில் 30 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.  இதனை அடுத்து நேற்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ஷேன் வொட்சன் களம் இறங்கினார். ஷேன் வொட்சன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர்  பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்து ஓட்டங்களைக்  குவித்தனர். இதனால் அவுஸ்திரேலியாவின் ஓட்டங்கள்  வேகமாக உயர்ந்தது. 5ஆவது விக்கட்டுக்காக வீழ்த்தப்படாத  இணைப்பாட்டமாக இவர்கள் இருவரும் 38 பந்துகளில் 74 ஓட்டங்களைப்  பகிர 20 ஓவர்கள் முடிவில்  அவுஸ்திரேலியா அணி 4 விக்கட்டுகளை இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றது.

அவுஸ்திரேலிய அணியின் சார்பில் அதிக பட்சமாக தலைவர் ஸ்டீவ் ஸ்மித் ஆட்டம் இழக்காமல் 43 பந்துகளில் 7 பவுண்டரிகள் அடங்கலாக 61 ஓட்டங்களையும், ஷேன் வொட்சன்   ஆட்டம் இழக்காமல் 21 பந்துகளில் 4 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 44 ஓட்டங்களையும் பெற்றார்கள். பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் வஹாப் ரியாஸ் மற்றும் இமாத் வசிம்ஆகியோர்  தலா 2 விக்கட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

194 ஓட்டங்களைப் பெற்றால் அரையிறுதிகுச் செல்லும் வாய்ப்பைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற வெற்றி இலக்குடன் பாகிஸ்தான் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடிகளான அஹமத் ஷேசாத் மற்றும் சர்ஜீல் கான் ஆகியோர் களம் இறங்கினர். பாகிஸ்தான் இனிங்சில் வீசப்பட்ட  3ஆவது ஓவரில் அஹமத் ஷேசாத் 1 ஓட்டத்தோடு ஆட்டம் இழந்து பெரும் அதிர்ச்சியளித்தார். கடந்த நியுசிலாந்து அணியுடனான போட்டியில் 47 ஓட்டங்களைப் பெற்ற  சர்ஜீல் கான் இன்றைய போட்டியிலும் அன்று போன்றே அதிரடியாக ஆடி 19 பந்துகளில் 30  ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். அதன் பிறகு களமிறங்கிய  உமர் அக்மல்  காலித் லத்தீபோடு இணைந்து சிறப்பாக விளையாடி ஒட்டங்களைப் பெற்றனர். இந்த நிலையில் பந்து வீச அழைக்கப்பட்ட எடம்  Zசம்பா அவுஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு அச்சுறுத்தலாக அமைந்த இந்த இணைப்பாட்டத்தை பிரித்து அதிரடியாக விளையாடிய உமர் அக்மலை 30 ஓட்டங்களோடு போல்டாக்கினார். அடுத்து களமிறங்கியலா லாஎன்று வர்ணிக்கப்படும் பாகிஸ்தான் அணியின் தலைவர் அப்ரிடி இரண்டு சிக்ஸர்களை  அடித்துவிட்டு 14 ஓட்டங்களோடு  எடம்  Zசம்பாவின் பந்து வீச்சில் ஸ்டம்ப் முறையில் ஆட்டம் இழந்தார். இவரது விக்கட்டை தொடர்ந்து பாக்ஸ்தான் அணியின் வெற்றி வாய்ப்பு மங்கத் தொடங்கியது. அதனையடுத்து  களமிறங்கிய வீரர்கள் வேகமாக ஓட்டங்களைக் குவிக்கத் தவறியதால் பாகிஸ்தான் அணி வீரர்களால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கட்டுகளை இழந்து 172 ஓட்டங்களை  மட்டுமே பெற முடிந்தது.. இதனால் அவுஸ்திரேலிய அணி 21 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியின் சார்பில் அதி கூடிய ஓட்டங்களாக காலித் லதிப் 46 ஓட்டங்களைப் பெற இறுதி நேரத்தில் வந்து வெற்றிக்காகப் போராடிய சுஹைப் மாலிக் ஆட்டம் இழக்காமல் 40 ஓட்டங்களைப் பெற்றார். அவுஸ்திரேலியா அணியின் பந்து வீச்சில் ஜேம்ஸ் போல்க்னர் மிக மிக அருமையாகப் பந்து வீசி ஓட்டங்களை கட்டுபடுத்தி 4 ஒவர்களில் 27 ஓட்டங்களுக்கு 5 விகக்ட்டுகளை சாய்த்தார்.

இந்த போட்டியின் ஆட்டநாயகன்  விருது  சிறப்பாகப் பந்து வீசிய ஜேம்ஸ் போல்க்னரிற்கு வழங்கப்பட்டது. குழு இரண்டில் ஏற்கனவே நியுசிலாந்து அணி அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகி உள்ள நிலையில் பாகிஸ்தான் அணி  டி20 உலகக் கிண்ணத் தொடரில் இருந்து வெளியேறி உள்ளது. இக்குழுவில் 2ஆவதாக அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவாகும் தீர்மானமிக்க போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையில் நடைபெற உள்ளது.