ஐசிசி T20I உலகக் கிண்ணம் நடைபெறுவதில் சிக்கலா?

63
T20 World Cup
@GettyImages

அவுஸ்திரேலியாவில் விதிக்கப்பட்டு வரும் பயணத்தடை காரணமாக, அந்நாட்டில் நடைபெறவுள்ள ஐசிசி T20I உலகக் கிண்ணம் மற்றும் இந்திய அணிக்கு எதிரான தொடர் என்பவற்றை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

வெளிநாட்டு அணிகளை நாட்டுக்கு அழைத்து வருவதில் சவாலை அவுஸ்திரேலியா எதிர்கொண்டுள்ள போதும், ஐசிசி T20I உலகக் கிண்ணம் போன்ற தொடரை ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் நடத்தினாலும், அது வலுவான விடயமாக அமையும் என அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் ரிச்சர்ட் கொல்பெக் தெரிவித்துள்ளார்.

சங்கக்காரவின் தலைமைப் பதவியை நீடிக்கவுள்ள MCC

கிரிக்கெட்டின் சட்டவிதிகளை உருவாக்கும் இங்கிலாந்தின் மெர்லிபோன் கிரிக்கெட்..

கொவிட்-19 வைரஸ் காரணமாக அவுஸ்திரேலியாவில் தொடர்ச்சியாக பயணத்தடை அமுலில் உள்ளது. இவ்வாறான நிலையில், அங்கு நடைபெறவுள்ள இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இருதரப்பு தொடர் மற்றும் ஐசிசி T20I உலகக் கிண்ணம் போன்ற தொடர்கள் நடத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன், அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையும் சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டத்தை எதிர்கொண்டுள்ளது. 

“நான் இந்தியா – அவுஸ்திரேலிய தொடர் நடைபெறுவதை விரும்புவது மாத்திரமின்றி உலகக் கிண்ணம் நடைபெற வேண்டும் எனவும் விரும்புகிறேன். அதில், அணிகளை அழைத்துவருவதில் குறைந்த சிக்கல்கள் இல்லாவிடினும், ரசிகர்கள் கூடுவது அவ்வளவு இலகுவாக இருக்காது. இது தொடர்பிலான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன” என கொல்பெக் குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர், “இவ்வாறான தொடரொன்றின் போது இருக்கும் ரசிகர்களின் ஆதரவு மைதானத்தில் எப்படி இருக்கும் என்பது தொடர்பில் எமக்கு தெரியும். எனவே, விளையாட்டு மற்றும் வீரர்களின் ஆதரவுடன் இதற்கான செயற்திட்டம் ஒன்றினை நாம் அமைக்க வேண்டும். அதிலும் தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு செயற்பாடு போன்ற விடயங்களில் ஆதரவு வழங்குவது முக்கியமான விடயமாகும். இவ்வாறான விடயங்களை சரியாக நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் தொடரை நடத்த முடியும்” என்றார்.

இதேவேளை, அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் அலென் போர்டர் ரசிகர்கள் இல்லாமல் உலகக் கிண்ணம் போன்ற தொடர்களை நடத்துவதென்பது நம்பிக்கையை இழக்கச் செய்யும் செயற்பாடு என தெரிவித்திருந்ததுடன், க்ளேன் மெக்ஸ்வல் உள்ளிட்ட சில அவுஸ்திரேலிய வீரர்களும் இதனை தெரிவித்திருந்தனர்.

மீண்டும் இங்கிலாந்து அணியில் விளையாடுவாரா அலெக்ஸ் ஹேல்ஸ்?

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக செயற்பட்டு வந்த..

சர்வதேச கிரிக்கெட் வாரியம் ஐசிசி T20I உலகக் கிண்ணத்துக்கான நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றது. எனினும், உலகக் கிண்ணம் நடத்தப்படுமா? இல்லையா? என்பது தொடர்பிலான அறிவிப்பை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிடும் எனவும் குறிப்பிட்டுள்ளது. 

எனினும், அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தற்போது நட்டத்துக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதால், இந்திய தொடருக்கான பயணத்தடையை நீக்க பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றது. எனினும், உலகக் கிண்ண தொடரில் பங்கேற்கவுள்ள அணிகளுக்கான பயணத்தடையை நீக்குவது தொடர்பில் கவனமாக இருக்க வேண்டும் என கொல்பெக் சுட்டிக்காட்டியுள்ளார்.

“கிரிக்கெட் தொடருக்கான பயணத்தடையை நீக்குவதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன், தற்போது தொடர் ஒன்றை நடத்துவதற்கான  திருத்தங்களை எவ்வாறு அமைப்பது என்பது தொடர்பிலான கலந்துரையாடல்களும் நடைபெற்று வருகின்றன. நாம் கிரிக்கெட்டினை முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச் செல்வதற்காக பல்வேறு திட்டங்களை இனிவரும் காலங்களில் வகுக்க வேண்டும்” என மேலும் சுட்டிக்காட்டியிருந்தார். 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<