பொதுநலவாய தொடருக்கான தேசிய மெய்வல்லுனர் குழாமில் அஷ்ரப் 

613

இவ்வருடத்திற்கான பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான இலங்கை மெய்வல்லுனர் குழாம் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.  

பொதுநலவாய போட்டிகளுக்கான இலங்கை வீரர்கள் எண்ணிக்கை குறைப்பு

அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் எதிர்வரும் ஏப்ரல் மாதம்…

இந்நிலையில், இதற்கான இலங்கை மெய்வல்லுனர் அணியை தெரிவு செய்வதற்கான இறுதி தகுதிகாண் போட்டிகள் கடந்த 27ஆம் திகதி தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்றது. இதன்போது திறமைகளை வெளிப்படுத்தி, குறித்த போட்டித் தொடருக்கான அடைவு மட்டங்களைப் பூர்த்தி செய்த வீரர்களுக்கு மாத்திரம் குறித்த தொடரில் பங்கேற்பதற்கான வாய்ப்பை பெற்றுக்கொடுக்க இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, குறித்த விளையாட்டு விழாவில் மெய்வல்லுனர் போட்டிகளுக்காக தகுதியைப் பெற்றுக்கொண்ட 12 பேர் கொண்ட இலங்கை மெய்வல்லுனர் குழாமை இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் இன்று(03) அறிவித்துள்ளது.

இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள மெய்வல்லுனர் குழாமில் 8 வீரர்களும், 4 வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளனர். அவர்களுள் பெரும்பாலானவர்கள் குறித்த விளையாட்டு விழாவில் முதற்தடவையாக பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சுமார் ஒரு தசாப்தமாக கிழக்கு மாகாணத்தைப் பிரிநிதித்துவப்படுத்தி சர்வதேச மற்றும் உள்ளூர் மெய்வல்லுனர் போட்டிகளில் 100, 200 மீற்றர் மற்றும் 4x100 அஞ்சலோட்டப் போட்டிகளில் பங்குபற்றி வருகின்ற பொத்துவிலைச் சேர்ந்த .எல்.எம் அஷ்ரப் முதற்தடவையாக பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொண்டார்.

குறித்த தகுதிகாண் போட்டிகளில் ஆண்களுக்கான 4x100 அஞ்லோட்ட அணிக்கான வீரர்களைத் தெரிவுசெய்வதற்கான 100 மீற்றர் போ ட்டிகள் 2 கட்டங்களாக நடைபெற்றன.

2017இல் தேசிய மட்டத்தில் ஜொலித்த வடக்கு, கிழக்கு மெய்வல்லுனர் நட்சத்திரங்கள்

இவ்வருடத்தை பொறுத்தமட்டில் தேசிய மெய்வல்லுனர் குழாமிற்கான…

இதன் முதல் சுற்றில் கலந்துகொண்ட அஷ்ரப், போட்டித் தூரத்தை 10.65 செக்கன்களில் நிறைவுசெய்து 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டு இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றார். இதனையடுத்து நடைபெற்ற இறுதி தகுதிகாண் போட்டியில் கலந்துகொண்ட அஷ்ரப், போட்டித் தூரத்தை 10.62 செக்கன்களில் நிறைவுசெய்து 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதன்படி, பொதுநலவாய நாடுகள் விளையாட்டு விழாவின் 4X100 அஞ்சலோட்டப் போட்டிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை தேசிய குழாமில் இடம்பெற்றுள்ள அஷ்ரப், பொதுநலவாய நாடுகள் விளையாட்டு விழாவில் முதற்தடவையாக களமிறங்கவுள்ளார்.

முன்னதாக கடந்த வருட முற்பகுதியில் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் குழாமிற்கான தகுதிகாண் போட்டிகளில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்ட அஷ்ரப், 10.68 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து முதலாவது இடத்தைப் பெற்றுக்கெண்டார்.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் போட்டிக்கான இரண்டாவது தகுதிகாண் போட்டியில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் கலந்துகொண்டு, குறித்த போட்டித் தூரத்தை 10.58 செக்கன்களில் ஓடி முடித்து 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதன் பிரதிபலனாக இந்தியாவில் கடந்த வருடம் ஜுலை மாதம் நடைபெற்ற 22ஆவது ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளில் ஆண்களுக்கான 4X100 மீற்றர் அஞ்சலோட்ட இலங்கை குழாமிலும் அவர் இடம்பிடிதிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில், கிழக்கு மண்ணுக்கு மாத்திரமல்லாது, இலங்கையிலுள்ள சிறுபாண்மை இன மக்களின் அடையாளமாக மெய்வல்லுனர் அரங்கில் அண்மைக்காலமாக ஜொலித்துக்கொண்டிருக்கின்ற அஷ்ரப், பல்வேறு கஷ்டங்களுக்கும், பொருளாதார நெருக்கடிகளுக்கும் மத்தியில் மெய்வல்லுனர் அரங்கை வெற்றிகொண்ட வீரராக மாறி இன்று உலகின் 2ஆவது ஒலிம்பிக் விழா என வர்ணிக்கப்படுகின்ற பொதுநலவாய நாடுகள் விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாணத்தைப் பிரிதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றவுள்ள முதல் வீரராகவும் வரலாற்றில் இடம்பெறவுள்ளார்.

இதேவேளை, குறித்த தகுதிகாண் போட்டியில் 10.29 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்த சுரன்ஞய சில்வா முதலிடத்தைப் பெற்று, 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் தேசிய மட்டத்தில் சிறந்த காலத்தைப் பதிவுசெய்த வீரராகவும் மாறினார். அதேநேரம் 2016 இந்தியாவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஹிமாஷ ஏஷானுக்கு 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. அவர் குறித்த போட்டியை 10.32 செக்கன்களில் நிறைவு செய்ததுடன், மற்றுமொரு 100 மீற்றர் தேசிய சம்பியனான செஹான் அம்பேபிட்டிய, 10.56 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டார்.

இதன்படி, கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியாவின் குவஹாட்டியில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் 4x100 அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கைக்கு தங்கம் வென்று கொடுத்த அணிதான் இம்முறை பொதுநலவாய நாடுகள் விளையாட்டு விழாவிலும் இலங்கையைப் பிரிதிநிதித்துவப்படுத்தவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

குறித்த தகுதிகாண் போட்டியில் உயரம் பாய்தல் போட்டியில் கலந்துகொண்ட மஞ்சுள குமார (2.24 மீற்றர்), ஈட்டி எறிதலில் கலந்துகொண்ட சம்பத் ரணசிங்க (81.22 மீற்றர்) மற்றும் தில்ஹானி லேகம்கே(58.42 மீற்றர்) ஆகியோரும் பொதுநலவாய போட்டிகளுக்கான அடைவுமட்டத்தினைப் பூர்த்தி செய்து நேரடியாக தகுதியினைப் பெற்றுக்கொண்டனர்.

அத்துடன், அண்மைக்காலமாக பெண்களுக்கான 800 மீறறர் ஓட்டப்போட்டிகளில் ஆசிய மட்டத்தில் பதக்கங்களை வென்று வருகின்ற வீராங்கனைகளாக நிமாலி லியனாரச்சி மற்றும் கயன்திகா அபேரத்ன ஆகியோரும் இம்முறை போட்டித் தொடரில் இலங்கை அணியைப் பிரிதிநிதித்துவப்படுத்தவுள்ளனர்.

இதேநேரம், இலங்கையின் தேசிய மரதன் ஒட்ட சம்பியனான ஹிருனி விஜயரத்ன, அமெரிக்காவின் டெக்ஸாஸில் கடந்த மாதம் நடைபெற்ற ஹியுஸ்டன் மரதன் ஓட்டப் போட்டியில் தனது சிறந்து காலத்தைப் பதிவுசெய்து 8ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். குறித்த போட்டியை 2 மணித்தியாலம் 36 நிமி. 35 செக்கன்களில் நிறைவுசெய்து புதிய தேசிய சாதனை படைத்த ஹிருனி, பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்பை முன்னதாகவே உறுதிசெய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மெய்வல்லுனர் குழாமிற்கு தகுதிபெற்ற வீரர்கள்

மஞ்சுள குமார புஷ்பகுமார (உயரம் பாய்தல்)

பிரசாத் விமலசிறி (நீளம் பாய்தல்)  

சம்பத் ரணசிங்க (ஈட்டி எறிதல்)

வினோஜ் சுரஞ்சய டி சில்வா, ஹிமாஷ ஏஷான், செஹான் அம்பேபிட்டிய, அஷ்ரப் லதீப், சுமேஷ் விக்ரமசிங்க (4X100 அஞ்சலோட்டம்)

ஹிருனி விஜேரத்ன (மரதன்)   

நிமாலி லியனாரச்சி (800 மீற்றர்)

கயன்திகா அபேரத்ன (800 மீற்றர்)

நதீஸா தில்ஹானி லேகம்கே (ஈட்டி எறிதல்)