கனிஷ்ட உலக கபடி சம்பியன்ஷிப்புக்கு 3 நிந்தவூர் வீரர்கள் தெரிவு

363

ஈரானில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள 2ஆவது கனிஷ்ட உலக கபடி சம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கை குழாத்தில் கிழக்கு மாகாணம் – நிந்தவூரைச் சேர்ந்த மூன்று வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், இலங்கை பாடசாலை கபடி சம்மேளனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள 20 பேர் கொண்ட குழாத்தில் மேலும் 3 தமிழ் பேசும் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

சர்வதேச கபடி சம்மேளனமும், ஈரான் கபடி சம்மேளனமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள 2ஆவது கனிஷ்ட உலக கபடி சம்பியன்ஷிப் தொடர் அடுத்த மாதம் 26ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 5ஆம் திகதி வரை ஈரானில் நடைபெறவுள்ளது.

15 நாடுகள் பங்குபற்றவுள்ள இம்முறை கனிஷ்ட உலக கபடி சம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கை குழாத்தை தேர்வு செய்வதற்கான விசேட தெரிவுப் போட்டி கடந்த 21ஆம் திகதி அநுராதபுரத்தில் நடைபெற்றது.

இதில், கடந்த ஆண்டு நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா 20 வயதுக்குட்பட்டோருக்கான கபடி போட்டித் தொடரில் பங்குபற்றிய அணிகளைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் அந்தத் தொடரில் வெற்றியீட்டிய அணிகளைச் சேர்ந்த வீரர்களுக்கு மாத்திரம் இந்த தெரிவுப் போட்டிக்காக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதேபோல, கடந்த ஆண்டு இலங்கை பாடசாலை கபடி சங்கம் மற்றும் இலங்கை கபடி சம்மேளனத்தினால் தேசிய ரீதியில் நடத்தப்பட்ட கபடி போட்டிகளில் பங்குபற்றி வெற்றிகளைப் பெற்றுக்கொண்ட அணிகளைச் சேர்ந்த வீரர்களும் இந்த தெரிவுப் போட்டியில் பங்குபற்றியிருந்தனர்.

இதன்படி, குறித்த தெரிவுப் போட்டியில் கலந்துகொண்டு திறமைகளை வெளிப்படுத்திய நிந்தவூரைச் சேர்ந்த 3 வீரர்கள் அடுத்த மாதம் நடைபெறவுள்ள 2ஆவது கனிஷ்ட உலக கபடி சம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கை கனிஷ்ட கபடி அணிக்கு தெரிவாகியுள்ளனர்.

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை மற்றும் நிந்தவூர் அல்- மதீனா மகா வித்தியாலயம் ஆகிய இரண்டு பாடசாலைகளில் இருந்தும் பங்குகொண்ட 5 மாணவர்களில் ஆர்.முஹம்மட் சாதிர், எம்.ஏ.எம் ஷிமாக், எம்.எஸ்.எம் அன்ஷாப் ஆகிய மூன்று மாணவர்களும் 20 பேர் கொண்ட குறித்த குழாத்திற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், அறிவிக்கப்பட்டுள்ள குழாத்தில் இறுதிப் பன்னிரெண்டு பேர் கொண்ட அணியில் ஷிமாக் மற்றும் அன்ஷாப் ஆகிய இருவரும் மாத்திரம் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சர்வேதேச கபடி நடுவரும், தேசிய மட்ட கபடி பயிற்றுவிப்பாளருமான மொஹமட் இஸ்மத் இந்த மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கி வருவதுடன் இலங்கை தேசிய கபடி அணிக்காக விளையாடி வருகின்ற நிந்தவூரைச் சேர்ந்த அஸ்லம் சஜாவிடமும் இந்த மாணவர்கள் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை சிறப்பம்சமாகும்.

இதனிடையே, 2ஆவது கனிஷ்ட உலக கபடி சம்பியன்ஷிப் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள 20 பேர் கொண்ட இலங்கை குழாத்தில் மேலும் 3 தமிழ் பேசும் வீரர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

எம்.எப்.எம் அசாம் (அல் நசார் தேசிய பாடசாலை), வை. கிரூஷான் (கிளிநொச்சி மத்திய கல்லூரி) மற்றும் ஏ. தனுச்சன் (மட்டக்களப்பு மைலாம்பாவெலி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயம்) ஆகிய 3 வீரர்களும் இலங்கை கனிஷ்ட கபடி குழாத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<