கால்பந்தை நேசித்து கிரிக்கெட்டில் ஜொலித்த அசித்த பெர்னாண்டோ

168

பாடசாலையின் இடைவெளி நேரங்களில் மாணவர்கள் பல விளையாட்டுக்களில் ஈடுபடுவது வழக்கம். அவ்வாறானதொரு பின்னணியில் தான் இந்த வீரரும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். தனது வயதைக் காட்டிலும் சிறிய உடல் பருமனைக் கொண்ட 14 வயது நிரம்பிய இந்த வீரர் மற்ற மாணவர்களைவிட மிகவும் வேகமாக பந்துவீசியதை அந்தப் பாடசாலையின் கிரிக்கெட் பயிற்சியாளர் அன்டண் கொஸ்தா அவதானித்தார்.

சிறிது நேரம் அந்த மாணவன் பந்துவீசியதை பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பயிற்சியாளர் பாடசாலையின் கிரிக்கெட் அணியில் விளையாடுவதற்கு ஆர்வம் உண்டா என வினவினார். ஆனால், அந்த மாணவனுக்கோ கிரிக்கெட்டை விட கால்பந்து மற்றும் மென்பந்து கிரிக்கெட் விளையாடுவதில் தான் அதிக ஆர்வம் இருப்பதாக தெரிவித்துள்ளார்

எனவே, பாடசாலை கிரிக்கெட் அணியில் விளையாடுவதற்கு தனக்கு விருப்பம் கிடையாது என அந்த மாணவன் தெரிவித்துள்ளார்.

இந்திய தொடருக்கான இலங்கை T20I குழாம் வெளியானது!

இந்திய அணிக்கு எதிராக எதிர்வரும் 5ம்……

அவ்வாறானதொரு பதிலை சொல்லிவிட்டு அந்த மாணவன் மைதானத்திலிருந்து வெளியே சென்றாலும், பயிற்சியாளர் தொடர்ந்து அவரை பின்தொடர்ந்தார்

இதில் அந்த மாணவன் கால்பந்து மற்றும் மென்பந்து விளையாடுவதை தொடர்ந்து கண்காணித்து வந்த பயிற்சியாளர், அந்த மாணவனை எப்படியாவது பாடசாலையின் கிரிக்கெட் அணியில் சேர்க்க வேண்டும் என்ற கங்கணத்தோடு இருந்தார்

இதன் முதல் கட்டமாக பயிற்சியாளர் அண்டனி கொஸ்தா, குறித்த மாணவனின் வீட்டுக்குச் சென்று அவனது பெற்றோரை சந்தித்து கதைத்துப் பார்த்தார்.  

அதிலும் குறிப்பாக, அந்தப் பாடசாலையின் அதிபரான மொஹான் விக்ரமசிங்கவையும் அழைத்துச் சென்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

எனவே, அந்தப் பயிற்சியாளரின் தொல்லை தாங்க முடியாமல் பாடசாலையின் 15 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியில் விளையாடிய அந்த மாணவன், தனக்கு இலங்கை  தேசிய அணியில் விளையாடுவதற்கான வரம் கிடைக்குமா என்பதை கனவிலும் நினைத்துப் பார்த்து இருக்க மாட்டான்

எனினும், தொடர்ந்து பாடசாலை அணிக்காக விளையாடிய வந்த அந்த மாணவன் தனது அபார திறமையை வெளிப்படுத்திய காரணத்தினால் தான் இன்று தேசிய அணியில் விளையாடுகின்ற வரத்தைப் பெற்றுக் கொண்டார்

எனவே, இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய வேகப்பந்து வீச்சாளராக இணைந்துகொண்ட அசித்த பெர்னாண்டோவின் ஆரம்ப காலத்தைப் பற்றிய சிறியதொரு விளக்கம்தான் மேலே குறிப்பிடப்பட்டது.

மணிக்கு 144 கிலோ மீற்றர் வேகத்தில் பந்துவீசுகின்ற 22 வயதுடைய இளம் வீரரான அசித்த பெர்னாண்டோ, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் இணைத்தளத்துக்கு வழங்கிய செவ்வியின் தொகுப்பை இந்தக் கட்டுரை விவரிக்கவுள்ளது.  

வெளி மாவட்டங்களில் உள்ள வீரர்களின் திறமைகளை இனங்கண்டு கொள்ளும் நோக்கில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்படுகின்ற மாவட்ட மற்றும் மாகாண மட்டப் கிரிக்கெட் தொடர்களில் திறமைகளை வெளிப்படுத்திய அசித்த பெர்னாண்டோ, முதல்தடவையாக 17 வயதுக்குட்பட்ட வீரர்களுக்காக கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற பயிற்சி குழாத்தில் இடம்பிடித்தார்.

எனவ, அசித்த பெர்னாண்டோவின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது இந்தப் பயிற்சி முகாம் தான் என்றால் மிகையாகாது.

பானிபூரி விற்று ஐ.பி.எல் மூலம் கோடீஸ்வரனான 17 வயது இளைஞன்

மும்பையை சேர்ந்த இளம் வீரர் யஷஸ்வி…..

”நான் கிரிக்கெட் விளையாடுவதற்கு முன் கால்பந்து விளையாடினேன். அதேபோல, மென்பந்து கிரிக்கெட்டும் விளையாடி வந்தேன். அந்த நேரத்தில் தான் பாடசாலையின் கிரிக்கெட் பயிற்சியாளர் அண்டனி கொஸ்தா கிரிக்கெட் விளையாடுவதற்கு அழைத்தார்

ஆனால் அதற்கு ஆரம்பத்தில் நான் மறுப்பு தெரிவித்தேன். அதன்பிறகு பாடசாலையின் அதிபருடன் அவர் வீட்டுக்கு வந்து அப்பா, அம்மாவுடன் பேசினார். அதன்பிறகு தான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன்” என்றார் அசித்த.

”முதலில் 17 வயதுக்குட்பட்ட அணியில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் செல்வதற்கு தேர்வானேன். அதன்பிறகு தான் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற பயிற்சிக் குழாத்தில் இடம்பிடித்தேன். அதுதான் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் படியாக அமைந்தது

அவ்வாறு திறமைகளை வெளிப்படுத்திய காரணத்தால் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணிக்காக விளையாடும் வாய்ப்பைப் பெற்றுக் கொண்டேன்

அந்தத் தொடரில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்டேன். அதிலும் குறிப்பாக என்னுடன் அந்த அணியில் விளையாடிய லஹிரு குமார தற்போது தேசிய அணிக்காக விளையாடி வருகின்றார்” என்று தனது முதல் அனுபவத்தைப் பகிர்ந்தார் அசித்த.

புத்தளம் மாவட்டம், கட்டுனேரியவைப் பிறப்பிடமாகக் கொண்ட அசித்த, 3 ஆண் பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் கடைசி பிள்ளையாவார். அசித்தவின் மூத்த சகோதரர்கள் இருவரும் தச்சுத் தொழில் செய்து வருவதுடன், அசித்தவின் அப்பா கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்றார்

பங்களாதேஷில் நடைபெற்ற இளையோர் உலகக் கிண்ணப் போட்டிகளுக்குப் பிறகு அவருக்கு இலங்கை வளர்ந்துவரும் அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது.  

”அதில் 2 தடவைகள் வளர்ந்துவரும் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடினேன். இதில் ஒன்று பங்களாதேஷிலும், மற்றையது இலங்கையிலும் நடைபெற்றது

அத்துடன், குறித்த 2 தொடர்களிலும் நாங்கள் சம்பியன்களாகத் தெரிவானோம். அந்தத் தொடரில் சிறப்பாக பந்துவீசிய காரணத்தினால் தான் தேசிய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது”. 

அண்மையில் நிறைவுக்கு வந்த பாகிஸ்தான் தொடருக்காக அறிவிக்கப்பட்ட குழாத்தில் அசித்த பெர்னாண்டோவுக்கு வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், சுரங்க லக்மாலுக்கு ஏற்பட்ட டெங்குக் காய்ச்சலினால் இறுதி நேரத்தில் அவருக்கு அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது

அதிலும் குறிப்பாக, இலங்கை அணி பாகிஸ்தானுக்கு புறப்பட்டுச் செல்லும் போது அசித்த, நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்றிருந்தார். இதன்காரணமாக முதலாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமானதற்கு பிறகு தான் அவர் இலங்கை அணியுடன் இணைந்து கொண்டார்

இந்த நிலையில், கராச்சியில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் போட்டியில் உபாதைக்குள்ளாகிய கசுன் ராஜிதவுக்குப் பதிலாக அசித்தவுக்கு இறுதி பதினொருவர் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், துரதிஷ்டவசமாக அந்த சூழ்நிலை அமையாமல் போனது

டி20 போட்டிகளில் பந்துவீசத் தயாராகும் அஞ்செலோ மெதிவ்ஸ்

இலங்கையின் கிரிக்கெட் வரலாற்றில்…….

”உண்மையில் தேசிய அணியில் விளையாட சந்தர்ப்பம் கிடைத்தமையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த இடத்திற்கு வருவதற்கு பலர் எனக்கு உதவினார்கள். அவர்களது பெயர்களை சொல்வது தற்போது கடினமாக உள்ளது

எனினும், பாடசாலைக் காலத்திலிருந்து எனக்கு தர்ஷன கமகே உதவி செய்தார். அத்துடன் தேசிய மட்டத்துக்கு வரும்வரை பல பேர் எனக்கு உதவி செய்தார்கள்” என தெரிவித்தார்

அசித்த பெர்னாண்டோவுக்கு தற்போது 22 வயதாகின்றது. அவருக்கு பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், இலங்கை கிரிக்கெட் அணியின் எதிர்கால நட்சத்திரமாக நிச்சயம் திகழ்வார். அதற்கு அவர் கொஞ்சம் பொறுத்து இருக்க வேண்டும்

இதுவரை 27 முதல்தரப் போட்டிகளில் விளையாடியுள்ள அசித்த பெர்னாண்டோ, 69 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். அத்துடன், 2017ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கெதிராக ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட அவர், 2 ஓவர்கள் பந்துவீசி 22 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார்

இந்த நிலையில், இலங்கை 23 வயதுக்குட்பட்ட மற்றும் இலங்கை அணிகளுக்காக விளையாடி வருகின்ற அசித்த, தற்பொழுது உள்ளூர் கழக மட்டப் போட்டிகளில் என்.என்.சி அணிக்ககாக விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<