Vantage FA கிண்ண காலிறுதி மோதல் விபரம்

123

Vantage FA கிண்ண கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றில் ஆடும் அணிகளின் விபரம் இன்று (08) இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

எபோனி ஹோல்டிங்ஸ் தனியார் நிறுவனத்தின் அனுசரணையில் இடம்பெறும் 2019 ஆம் ஆண்டுக்கான Vantage FA கிண்ண கால்பந்து தொடரில் இலங்கையில் உள்ள 64 லீக்குகளில் உள்ள 827 அணிகள் மோதின. இதன் 16 அணிகள் சுற்று கடந்த வாரம் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், கால் இறுதிச் சுற்றுக்கு 8 அணிகள் தெரிவாகியுள்ளன. இதில் டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரில் ஆடும் 6 அணிகளும், பிரிவு 2 தொடரில் ஆடும் 2 அணிகளும் உள்ளன. பிரிவு ஒன்றில் ஆடும் எந்தவொரு அணியும் இந்த சுற்றுக்கு தகுதி பெறவில்லை.

>>Vantage FAகிண்ண புகைப்படங்கள்<<

இந்நிலையில், இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைமையகத்தில் இன்று (08) இடம்பெற்ற அணிகளைப் பிரிக்கும் குலுக்களுக்கு அமைய, நடப்புச் சம்பியன் டிபெண்டர்ஸ் கால்பந்து கழகத்தை கடந்த சுற்றில் வீழ்த்திய பொலிஸ் அணி வீரர்கள் சிவில் பாதுகாப்பு கழக விளையாட்டுக் கழக அணியை எதிர்கொள்ளவுள்ளனர்.

அதேபோன்று, டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரில் ஆடும் புளு ஸ்டார் அணி சிறைச்சாலைகள் விளையாட்டுக் கழகத்துடன் மோதும் அதேவேளை, டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரில் ஆடும் அணிகளான புளு ஈகல்ஸ் மற்றும் ரினௌன் அணிகள் ஒன்றை ஒன்று சந்திக்கின்றன.

FA கிண்ணத்தை அதிக தடவைகள் கைப்பற்றிய சோண்டர்ஸ் விளையாட்டுக் கழகம், சீஹோக்ஸ் கால்பந்து கழகத்துடன் மோதவுள்ளது.

கால் இறுதிப் போட்டிகள் எதிர்வரும் 11 ஆம் மற்றும் 12 ஆம் திகதிகளில் சுகததாஸ அரங்கில் இடம்பெறும். இதன்போது ஒரு நாளில் மாலை 4 மணிக்கும் 6.30 மணிக்கும் என இரண்டு போட்டிகள் இடம்பெறும்.

அதனைத் தொடர்ந்து அரையிறுதிப் போட்டிகள் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி கொழும்பு ரேஸ்கோஸ் சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறும். தொடர்ந்து Vantage FA கிண்ண தொடரின் இறுதிப் போட்டி பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி மாலை 8 மணிக்கு ரேஸ்கோர்ஸ் அரங்கில் இடம்பெறும்.

காலிறுதிச் சுற்று விபரம்  

திகதி  நேரம் அணி  1  அணி 2
11.01.2020 பி.ப 4.00 சிவில் பாதுகாப்பு வி.க இலங்கை பொலிஸ் வி.க
11.01.2020 பி.ப 6.30  புளு ஈகல் வி.க ரினௌன் கா.க
12.01.2020 பி.ப 4.00  சீஹோக்ஸ் கா.க சோண்டர்ஸ் வி.க
12.01.2020  பி.ப 6.30 சிறைச்சாலை வி.க  புளு ஸ்டார் வி.க

16 அணிகள் சுற்று முடிவுகள் 

  • டிபெண்டர்ஸ் கா.க 1(4) – (5)1 இலங்கை பொலிஸ் வி.க
  • சோண்டர்ஸ் வி.க 1(3) – (0)1 ஜாவா லேன் வி.க 
  • புளு ஸ்டார் வி.க 6 – 2 அப் கன்ட்ரி லயன்ஸ் வி.க
  • சிவில் பாதுகாப்பு வி.க 1(6) – (5)1 ரெட் ரோஸ் வி.க
  • ரினௌன் கா.க 2 – 0 நியு ஸ்டார் வி.க 
  • ரெட் சன் வி.க 0 – 1 புளு ஈகல் வி.க 
  • சீஹோக்ஸ் கா.க 1 – 0 பாடும் மீன் வி.க 
  • நியு யங்ஸ் கா.க 1 (4) – (5)1 சிறைச்சாலை வி.க

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<