அரையிறுதியில் ஈராக்கிடம் போராடி தோற்றது இலங்கை

110

ஆசிய சவால் கிண்ணக் கரப்பந்தாட்டத் தொடரில், தொடர்ந்து தமது திறமைகளை வெளிப்படுத்திவந்த இலங்கை ஆடவர் அணி, இன்றைய தினம் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஈராக் அணியிடம் 1-3 என்ற செட்கள் கணக்கில் தோல்வியடைந்துள்ளது.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்று வரும் ஆசிய சவால் கிண்ண கரப்பந்தாட்ட தொடரில் நேற்று (19) நடைபெற்ற காலிறுதிப் போட்டியில், ஐக்கிய அரபு இராச்சியத்தை 3-0 என வீழ்த்திய இலங்கை ஆடவர் அணி இன்று (20) பலம் மிக்க ஈராக் அணியை எதிர்கொண்டது.

ஆசிய சவால் கிண்ணத்தின் அரையிறுதிக்கு முன்னேறியது இலங்கை

ஈராக் அணி நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான காலிறுதிப் போட்டியில் மலேசிய அணியை 3-1 என்ற செட் கணக்கில் தோல்வியடையச் செய்து அரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டிருந்தது

தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கிய இலங்கை அணி, ஆரம்பத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஈராக் அணியை விட இரண்டு புள்ளிகள் என்ற முன்னிலையை பெற்றுச் சென்றுகொண்டிருந்த இலங்கை அணி, இறுதியில் 25-22 என முதல் செட்டை கைப்பற்றியது.

பின்னர் ஆரம்பமாகிய இரண்டாவது செட்டில் ஈராக் அணி பதிலடி கொடுக்கத் தொடங்கியது. இதன்படி 19-9 என்ற முன்னிலையை பெற்ற ஈராக் அணி செட்டின் வெற்றியை நெருங்கியது. எனினும் விட்டுக்கொடுக்காத இலங்கை அணி அடுத்தடுத்து புள்ளிகளைப் பெற்றது. 10 புள்ளிகள் முன்னிலையை குறைத்து 19-14 என நெருங்கியது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய இலங்கை அணி 24-24 என புள்ளிகளை சமப்படுத்திய போதிலும், இறுதியில் முன்னணி வீரர் தீப்தி ரொமேஷ் பந்து பணிப்பில் விட்ட தவறினால் இலங்கை 26-24 என இரண்டாவது செட்டை போராடி தோற்றது.

போட்டி 1-1 என சமநிலையடைந்த நிலையில், மூன்றாவது செட் விறுவிறுப்பாக இடம்பெற்றது. இந்த செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய ஈராக் அணி 25-20 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று போட்டியில் 2-1 என முன்னிலைபெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற இலங்கையின் தோல்வியை தவிர்க்க வேண்டிய நான்காவது செட்டின் முதல் தொழிநுட்ப இடைவேளையில் ஈராக் அணி 8-7 என மீண்டும் முன்னிலைபெற்றது. இதே முன்னிலையுடன் விளையாடிய ஈராக் அணி, 25-20 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியீட்டி அரையிறுதிக்கு முன்னேறியது. இதேவேளை இந்த போட்டியில் தோல்வியடைந்த இலங்கை அணி நாளை (21) நடைபெறவுள்ள மூன்றாவது இடத்துக்கான நிரல்படுத்தல் போட்டியில் விளையாடவுள்ளது.

பொன் விழாக் கோலம் பூணும் மட்டக்களப்பின் வெபர் கிண்ண கூடைப்பந்து தொடர்

ஏனைய போட்டி முடிவுகள்

மொங்கோலியா எதிர் ஹொங்கொங் (5-8 இடங்களுக்கான நிரல் படுத்தல் போட்டி)

  • ஹொங்கொங் அணி 3-2 என்ற செட்கள் கணக்கில் வெற்றி
  • செட் புள்ளிகள் : 25-21, 20-25, 24-26, 25-17, 15-10

ஐக்கிய அரபு இராச்சியம் எதிர் மலேசியா (5-8 இடங்களுக்கான நிரல் படுத்தல் போட்டி)

  • ஐக்கிய அரபு இராச்சிய அணி 3-1 என்ற செட்கள் கணக்கில் வெற்றி
  • செட் புள்ளிகள் : 21-25, 25-23, 36-34, 25-21

மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க