இந்தியாவின் புவனேஸ்வர் நகரில் உள்ள காலிங்கா மைதானத்தில் நிறைவடைந்த 22ஆவது ஆசிய தடகள சம்பியன்ஷிப் போட்டிகளின் இறுதி நாளான நேற்று இலங்கை அணிக்கு முதலாவது தங்கப் பதக்கத்தை 800 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் பங்குபற்றிய நிமாலி லியானாரச்சி பெற்றுக் கொடுத்தார்.
இதன்படி ஆசிய மெய்வல்லுனர் அரங்கில் 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கை அணி முதற்தடவையாக தங்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. போட்டிகளின் நிறைவில் இலங்கை அணி ஒரு தங்கம் மற்றும் 4 வெள்ளிப் பதக்கங்களுடன் ஒன்பதாம் இடத்தைப் பெற்றுள்ளது.
இப்போட்டித் தொடரின் முதல் நாளில் பெண்களுக்கான ஈட்டி எறிதலில் பங்குபற்றிய இலங்கையின் நதீஷா தில்ஹானி லேகம்கே, தனது தனிப்பட்ட சிறந்த தூரத்தைப் பதிவு செய்து வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுக்கொடுத்தார்.
எனினும் போட்டியின் 2ஆவது மற்றும் 3ஆவது நாட்களில் இலங்கை வீரர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தி அரையிறுதி, இறுதிப் போட்டிகளுக்குத் தெரிவான போதிலும் துரதிஷ்டவசமாக தோல்விகளை சந்தித்தனர். இந்நிலையில், போட்டியின் இறுதி நாளான நேற்று இலங்கை அணி ஒரு தங்கம் மற்றும் 3 வெள்ளிப் பதக்கங்களை வென்று அசத்தியது.
இந்திய வீராங்கனை தகுதி நீக்கம்
இலங்கை அணியின் நிமாலிக்கும், கயன்திகாவுக்கும் பலத்த போட்டியைக் கொடுத்து பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் முதலிடம் பிடித்த 21 வயதான இந்திய வீராங்கனை அர்ச்சனா ஆதவ் 2 நிமிடம் 2 வினாடிகளில் இலக்கை எட்டி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
ஆசிய மெய்வல்லுனர் சம்பின்ஷிப் முதல் நாளில் இலங்கை வீரர்கள் அபாரம்
ஆசிய வலயத்தின் 45 நாடுகள் பங்கேற்றுள்ள 22ஆவது ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளின்…
இதில் இலங்கை வீராங்கனைகளான நிமாலி லியனாரச்சி 2ஆவது இடத்தையும், (2.05.23 வினாடி) கயன்திகா அபேரதன் 3ஆவது இடத்தையும் (2.05.27 வினாடி) பிடித்தனர். ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்தில் அர்ச்சனாவின் மகிழ்ச்சி சுக்கு நூறானது.
அர்ச்சனா ஆதவ் போட்டி தூரத்தில் முடிவு எல்லையின் போது தமக்கு ஓடுவதற்கு இடையூறு விளைவித்ததாக இலங்கை வீராங்கனைகள் செய்த முறைப்பாட்டினை மேல் பரிசீலினை செய்த போட்டி ஒருங்கிணைப்பு குழு அர்ச்சனா ஆதவினை தகுதிநீக்கம் செய்தது. எனவே அவரது பதக்கம் பறிக்கப்பட்டது. இதன் காரணமாக, தங்கப் பதக்கம் நிமாலிக்கும், வெள்ளிப் பதக்கம் கயன்திகாவுக்கும் வழங்கப்பட்டதுடன், முன்னாள் ஆசிய சம்பியனான ஜப்பானின் புமிகாவுக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது.
இப்போட்டி நிகழ்ச்சியின் நடப்புச் சம்பியனான டின்டு லூக்கா பாதி தூரம் ஓடிய நிலையில் போட்டியில் இருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று, ஆண்களுக்கான 800 மீற்றரில் கலந்துகொண்ட இந்துனில் ஹேரத் போட்டித் தூரத்தை ஒரு நிமிடமும் 50.57 வினாடிகளில் நிறைவு செய்து 5ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
வெள்ளிப் பதக்கம் வென்ற ருமேஷிகா
தெற்காசியாவின் அதிவேக வீராங்கனையான ருமேஷிகா ரத்னாயக்க பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் பந்தயத்தை 23.43 வினாடிகளில் நிறைவுசெய்து வெள்ளிப் பதக்கம் வென்றார். 2007ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆசிய மட்டத்தில் இலங்கைக்காக குறுந்தூரப் போட்டிகளில் பெற்ற முதலாவது பதக்கம் இதுவாகும்.
முன்னதாக நேற்று காலை நடைபெற்ற 200 மீற்றர் ஓட்டப் பந்தயத்தின் முதலாவது தகுதிகாண் சுற்றில் கலந்துகொண்ட ருமேஷிகா, போட்டியை 23.40 செக்கன்களில் நிறைவு செய்ததுடன், தனது தனிப்பட்ட சிறந்த காலத்தைப் பதிவுசெய்திருந்தார்.
ஆனால் 100 மீற்றர் போட்டியில் தவறான ஆரம்பத்தை மேற்கொண்டு போட்டியிலிருந்து ருமேஷிக்கா துரதிஷ்டவசமாக வெளியேற்றப்பட்டார். ஆனால் ஆசியாவின் அதிவேக வீராங்கனையாக கடந்த வெள்ளியன்று முடிசூடிய கஸகஸ்தானின் விக்டோரியா சியாப்கினை தகுதிகாண் போட்டியில் ருமேஷிகா வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப்பந்தயத்தின் அரையிறுதிப் போட்டியில் கலந்துகொண்ட இலங்கையின் வினோத் சுரன்ஜய சில்வா, போட்டியை 21.27 செக்கன்களில் நிறைவுசெய்து 6ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
விதுஷாவுக்கு ஏமாற்றம்
பெண்களுக்கான முப்பாய்ச்சலில் வெண்கலப் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட இலங்கை அணியின் விதூஷா லக்ஷானி, இறுதியாகப் பாய்ந்து பதிவு செய்த முயற்சியை இந்திய தொழில்நுட்ப அதிகாரிகள் தவறு என அறிவித்தனர். எனவே, அவருக்கு கிடைக்க வேண்டிய பதக்க வாய்ப்பு இந்திய வீராங்கனையான சீனா என்.விக்கு வழங்கப்பட்டது. எனினும், குறித்த முடிவானது இலங்கை வீராங்கனைக்கு செய்யப்பட்ட மோசடியாகவே விமர்சிக்கப்பட்டது.
ஆசிய தடகள சம்பியன்ஷிப் போட்டிகளுக்கான இலங்கை குழாமில் 22 பேர்
எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ள…
விதூஷா தனது கடைசி முயற்சியில் 13.50 மீற்றர் தூரம் பாய்ந்த போதிலும், போட்டி நடுவர் அதனை தவறு என அறிவித்தார். ஆனால் உடனடியாக விரைந்த உதவியாளர்கள் அவரது தூரத்தை அளவிட முன் மண்னை சரிசெய்து விட்டனர். அதிலும் குறிப்பாக இந்திய நடுவர் விதூஷா பாய்ந்து முடியும் வரை இருந்து விட்டுதான் சிவப்பு கொடியையும் உயர்த்தினார்.
உடனே, போட்டியில் கடமையாற்றிய இந்திய தொழில்நுட்ப அதிகாரியிடம் விதூஷா இது தொடர்பில் வினவியபோது, அதற்கான பதில் அரை மணி நேரத்திற்குப்பிறகு வழங்கப்பட்டது. அதற்கான மற்றுமொரு வாய்ப்பினை வழங்கவும் நடவடிக்கை எடுத்திருந்தார். எனினும், விதூஷாவின் அந்த முயற்சியின்போது சிறந்த பதிவை மேற்கொள்ள முடியாமல் போனது. அவர் 13.33 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்ய, 13.42 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்த இந்திய வீராங்கனை வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
4X400 அஞ்சலோட்ட அணிக்கு வெற்றி
திலிப் ருவன், அஜித் பிரேமகுமார, பிரதீப் குமார மற்றும் கிரேஷன் தனஞ்சய ஆகியோர் கலந்துகொண்ட இலங்கையின் 4X400 அஞ்சலோட்ட அணி நாட்டிற்கு மற்றுமொரு வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக்கொடுத்தது. குறித்த போட்டியை 3 நிமிடமும் 04.80 வினாடிகளில் நிறைவு செய்த இலங்கை அணி, முன்னதாக நடைபெற்ற தகுதிகாண் போட்டியில் மிகப் பெரிய நேர இடைவெளியில் முதலிடத்தைப் பெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில், இந்தியா முதலிடத்தையும், தாய்லாந்து மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டன.
அத்துடன் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் போட்டியில் கலந்துகொண்ட தனுக லியனபத்திரன 7.68 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து 8ஆவது இடத்தைப் பெற்றுகொண்டதுடன், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஈட்டி எறிதல் வீரர் வருண லக்ஷான் 76.78 மீற்றர் தூரத்தை எறிந்து 8ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
ஹிமாஷ, சுரன்ஜயவின் பதக்க கனவு தகர்ந்தன
போட்டிகளின் இரண்டாம் நாளான கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை அணி வீரர்களின் பதக்க கனவு காலிங்கா மைதானத்தில் நிலவிய கடும் மழையினால் தகர்ந்தது. பின்னர், நேற்று இரவு நடைபெற்ற பெரும்பாலான இறுதிப் போட்டிகளுக்கு மழையால் பாதிப்பு ஏற்பட்டதுடன், போட்டிகளை நடத்துவதில் காலதாமதமும் ஏற்பட்டது.
பதக்கம் வெல்வார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரர்களான ஹிமாஷ ஏஷான் மற்றும் வினோத் சுரன்ஜய சில்வா இருவரும் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் பந்தயத்தின் அரையிறுதிப் போட்டிகளில் தோல்வியைத் தழுவினர்.
கூடைப்பந்தில் யாழில் தமது பலத்தை நிரூபித்தது சென்றலைட்ஸ் அணி
யாழ்ப்பாணம் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் 98வது ஆண்டு..
இதன்படி போட்டியின் முதலாவது அரையிறுதில் கலந்துகொண்ட ஹிமாஷ ஏஷான் போட்டியை 10.53 வினாடிகளில் நிறைவுசெய்ததுடன், வினோத் சுரன்ஜய 10.44 வினாடிகளில் போட்டியை நிறைவு செய்தார். எனினும், முன்னதாக நடைபெற்ற தகுதிகாண் போட்டியில் கலந்துகொண்ட ஹிமாஷ போட்டித் தூரத்தை 10.47 வினாடிகளில் நிறைவுசெய்து 2ஆவது இடத்தையும், வினோத் சுரன்ஜய போட்டித் தூரத்தை 10.44 வினாடிகளில் நிறைவுசெய்து 2ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டு அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, நேற்று இரவு நடைபெற்ற ஆசியாவின் வேகமான வீரர் மற்றும் வீராங்கனை யார் என்பதை தீரமானிக்கும் 100 மீற்றர் ஓட்டப் பந்தயத்தின் இறுதிப் போட்டியில் ஈரானின் ஹசன் தப்தியான் மற்றும் கஸகஸ்தானின் விக்டோரியா சியாப்கின் ஆகியோர் தங்கப் பதக்கங்களை வென்றமை குறிப்பிடத்தக்கது.
400 மீற்றரில் திலிப், அஜித் தோல்வி
கடும் மழைக்கு மத்தியில் நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில் பங்குபற்றிய திலிப் ருவன் மற்றும் அஜித் பிரேமகுமார ஆகியோர் போட்டியை 46.50 மற்றும் 47.35 வினாடிகளில் நிறைவுசெய்து முறையே 5ஆவது மற்றும் 8ஆவது இடங்களைப் பெற்றுக் கொண்டனர்.
எனினும், கடந்த முறை றியோ ஒலிம்பிக்கில் பங்குபற்றியிருந்த இந்தியாவின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரரான மொஹமட் அனஸ் இப்போட்டியில் தங்கம் பதக்கம் வென்றார். கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் தொடரில் முதல் 3 இடங்களையும் பெற்றுக்கொண்ட வீரர்களும் இம்முறை போட்டித் தொடரில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பெண்களுக்கான 400 மீற்றரில் கலந்துகொண்ட நிர்மாலி மதுஷிகா போட்டித்தூரத்தை 54.48 செக்கன்களில் நிறைவுசெய்து 5ஆவது இடத்தையும், ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் கலந்துகொண்ட சன்ஞய ஜயசிங்க 15.97 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து 6ஆவது இடத்தையும், பெண்களுக்கான உயரம் பாய்தலில் பங்குபற்றிய துலான்ஞலி குமாரி 1.75 மீற்றர் உயரத்தைத் தாவி 10ஆவது இடத்தையும் பெற்றுக் கொண்டார்.
மஞ்சுளவுக்கு 6ஆவது இடம்
இலங்கை அணியின் தலைவரும், உயரம் பாய்தல் வீரருமான மஞ்சுள குமார, நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 6ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். அவர் குறித்த போட்டியில் 2.20 மீற்றர் உயரத்தைத் தாவியிருந்தார். எனினும் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இதே ஆசிய மெய்வல்லுனர் சம்பின்ஷிப் போட்டியின் உயரம் பாய்தலில் மஞ்சுள குமார தங்கம் வென்று சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் முன்னாள் உலக இளையோர் சம்பியனான தென்கொரியாவின் வூ சேங் 2.30 மீற்றர் உயரத்தைத் தாவி தங்கப் பதக்கத்தையும், உலக மெய்வல்லுனர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சீனாவின் சேங் குவெய் 2.28 மீற்றர் உயரம் தாவி வெள்ளிப் பதக்கத்தையும், 2.24 மீற்றர் உயரத்தைத் தாவிய சிரியாவின் மஜீத் அல்சின் கஸால் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
இதேவேளை, ஆண்களுக்கான 4X100 போட்டியில் இலங்கை அணி 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டது. ஹிமாஷ ஏஷான், வினோத் சுரன்ஜய, ஷெஹான் அம்பேபிட்டிய மற்றும் மொஹமட் அஷ்ரப் ஆகிய வீரர்கள் கலந்துகொண்ட இப்போட்டியில் இலங்கை அணி 39.59 வினாடிகளில் போட்டித் தூரத்தை நிறைவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும், இந்தியாவிற்கு 10 நாட்கள் முன்னதாகச் சென்று பயிற்சிகளைப் பெற்ற இலங்கை அஞ்சலோட்ட அணியில் இடம்பெற்றிருந்த மொஹமட் சப்ரான், போட்டித் தொடர் ஆரம்பமாவதற்கு முன் நடாத்தப்பட்ட தகுதிகாண் போட்டியில், போட்டித் தூரத்தை நிறைவு செய்ய அதிக நேரத்தைப் பதிவு செய்ததால் இறுதி அஞ்சலோட்ட குழாமில் இடம்பெறும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.
இந்தியாவிற்கு முதலிடம்
கடந்த 4 தினங்களாக நடைபெற்ற இப்போட்டித் தொடரின் பதக்கப் பட்டியலில் 12 தங்கப் பதக்கங்களை வென்ற இந்தியா முதலிடத்திலும், 8 தங்கங்களுடன் சீனா 2ஆவது இடத்திலும், 4 தங்கப் பதக்கங்களை வென்ற கஸகஸ்தான் 3ஆவது இடத்திலும் உள்ளது. ஒரேயொரு தங்கம், 4 வெள்ளிப் பதக்கங்களை வென்ற இலங்கை 9ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.
சுமார் 800 இற்கும் அதிகமான வீரர்கள் கலந்துகொண்ட இப்போட்டிகளில் 42 வகையான போட்டிகள் இடம்பெற்றன. அடுத்த மாதம் லண்டனில் நடைபெற உள்ள உலக தடகள சம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதி சுற்றாகவும் இது அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




















