த்ரில் வெற்றியுடன் இறுதிப் போட்டியில் இலங்கையுடன் பாகிஸ்தான் அணி

149

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையே நடைபெற்ற ஆசியக் கிண்ணத் தொடரின் சுபர் 4 மோதலில், பாகிஸ்தான் அணி நஸீம் சாஹ்வின் இறுதி நேர அதிரடியோடு ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

இங்கிலாந்து அணியில் இணையும் அலெக்ஸ் ஹேல்ஸ்

மேலும் இந்த வெற்றியுடன் சுபர் 4 சுற்றில் இரண்டு வெற்றிகளைப் பதிவு செய்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 2022ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (11) இலங்கை அணியுடன் விளையாடும் சந்தர்ப்பத்தினையும் பெற்றிருக்கின்றது.

ஷார்ஜாவில் நேற்று (07) ஆரம்பமான இந்தப் போட்டியில் முதலில் பாகிஸ்தானினால் துடுப்பாடப் பணிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயம் செய்யப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 129 ஓட்டங்களை எடுத்தது.

ஆப்கானிஸ்தான் அணியின் துடுப்பாட்டம் சார்பில் இப்ராஹிம் சத்ரான் அதிகபட்சமாக 37 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 35 ஓட்டங்கள் பெற, பாகிஸ்தான் பந்துவீச்சில் ஹரிஸ் ரவுப் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் மொஹமட் நவாஸ், சதாப் கான், மொஹமட் ஹஸ்னைன் மற்றும் நஸீம் சாஹ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 130 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணி, தமது முக்கிய துடுப்பாட்ட வீரர்களை இழந்தததோடு போட்டியின் 19ஆவது ஓவர் நிறைவில் 119 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து மிகவும் இக்கட்டான நிலைக்கும் சென்றது.

தொடர்ந்து போட்டியின் இறுதி ஓவரில் 11 ஓட்டங்கள் தேவைப்பட, 20ஆவது ஓவரின் முதல் இரண்டு பந்துகளிலும் இரண்டு அபார சிக்ஸர்களை விளாசிய பாகிஸ்தான் அணியின் பின்வரிசை வீரர் நஸீம் சாஹ், பாகிஸ்தான் அணி 19.2 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 131 ஓட்டங்கள் பெற்று போட்டியின் வெற்றி இலக்கினை அடைய உதவியாக மாறியிருந்தார்.

மனிபால் டைகர்ஸ் அணியில் களுவிதரான, முரளிதரன்

பாகிஸ்தான் துடுப்பாட்டத்தில் நஸீம் சாஹ் 4 பந்துகளில் 14 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் நிற்க, சதாப் கான் 26 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பௌண்டரி அடங்கலாக 36 ஓட்டங்கள் எடுத்திருந்தார். இவர் தவிர இப்திக்கார் அஹமட்டும் 30 ஓட்டங்களுடன் பாகிஸ்தான் அணியின் வெற்றியினை உறுதி செய்தார்.

ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் பசால்ஹக் பரூக்கி மற்றும் பரீட் அஹ்மட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்க்க, ரஷீட் கான் 2 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தனர்.

இந்தப் போட்டி தோல்வியுடன் ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய அணிகள் ஆசியக் கிண்ணத் தொடரில் இருந்து வெளியேறுகின்றன. இதேநேரம் சுபர் சுற்றுக்காக எஞ்சியிருக்கும் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் இன்று (08) இந்தியாவை எதிர்கொள்ள, பாகிஸ்தான் தமது அடுத்த சுபர் 4 போட்டியில் நாளை (09) இலங்கையை எதிர்கொள்கின்றது.

போட்டியின் சுருக்கம்

ஆப்கானிஸ்தான் – 129/6 (20) இப்ராஹிம் சத்ரான் 35, ஹரிஸ் ரவுப் 26/2(4)

பாகிஸ்தான் – 131/9 (19.2) சதாப் கான் 36(26), இப்திக்கார் அஹ்மட் 30(33), நஸீம் சாஹ் 14(4)*, பசால்ஹக் பரூக்கி 31/3(3.1), பரீட் அஹ்மட் 31/2(4), ரஷீட் கான் 25/2(4)

முடிவு – பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட்டினால் வெற்றி 

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<