ஐந்தாவது தடவையாக நடைபெறவுள்ள பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) டி20 தொடரில், இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான லசித் மாலிங்க முதற் தடவையாக களமிறங்கவுள்ளார். இதன்படி, மஷ்ரபி பின் முர்தஷா தலைமையிலான ராங்பூர் ரைடர்ஸ் அணியில் லசித் மாலிங்க களமிறங்கவுள்ளதாக அவ்வணி நிர்வாகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அடுத்த மாதம் 3ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் டி20 குளோபல் லீக் தொடர், நிலையானதொரு தொலைக்காட்சி உரிம ஒப்பந்தத்தை பெறாமை, தொடருக்கான பிரதான உரிமைகள் அனுசரணையைப் பெறாமை போன்ற காரணத்தினால் ஒத்திவைப்பதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்திருந்தது. இதன் காரணமாக குறித்த தொடரில் விளையாடுவதற்கு ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட பல வெளிநாட்டு வீரர்கள் பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் விளையாடுவதற்கு மீண்டும் சம்மதம் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து, ஸ்டெலன்போஸ்ச் கிங்ஸ் (Stellenbosch Kings) அணியின் வெளிநாட்டு நட்சத்திர வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்ட இலங்கை அணியின் லசித் மாலிங்க, 5ஆவது தடவையாக நடைபெறவுள்ள பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் முதல் தடவையாக விளையாடுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
புஷ்பகுமாரவின் அபாரப் பந்துவீச்சினால் இரண்டாவது டெஸ்ட்டை வெற்றியீட்டிய இலங்கை A
மேற்கிந்திய தீவுகள் A அணியுடனான இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை A அணி…
34 வயதாகும் மாலிங்க தனது 19 மாதகால உபாதையின் பின்னர் இலங்கை ஒரு நாள் மற்றும் டி20 அணி குழாமில் இணைந்த போதிலும் தனது வழமையான ஆட்டத்தைக் காட்டத் தவறியிருந்தார். இந்நிலையில், தனது மீள்வருகைக்குப் பின்னர் 13 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை மாத்திரமே கைப்பற்றியிருந்த மாலிங்க, தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பாகிஸ்தான் அணியுடனான ஒரு நாள் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியிருந்தார்.
இதேவேளை, பாதுகாப்பு காரணங்களுக்காக அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள பாகிஸ்தான் அணியுடனான டி20 போட்டித் தொடரிலிருந்தும் விலகுவதாக மாலிங்க அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்றுவருகின்ற டி20 போட்டித் தொடர்களில் விளையாடி அனுபவமிக்க வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகின்ற மாலிங்க, உலக டி20 தொடர்களில் பங்கேற்று அதிகளவான விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் 2 ஆவது இடத்திலும் உள்ளார்.
இந்நிலையில், எதிர்வரும் நவம்பர் மாதம் 8ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 9ஆம் திகதி வரை மிர்பூர் மற்றும் சிட்டகொங் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ள 5 ஆவது BPL தொடரில் ராங்பூர் அணிக்காக இலங்கை அணியின் அதிரடித் துடுப்பாட்ட வீரரும், ஆரம்பத் துடுப்பாட்ட வீரருமான குசல் ஜனித் பெரேரா மற்றும் சகலதுறை வீரரான திசர பெரேரா ஆகியோர் முன்னதாக ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இவ்விரு வீரர்களும் BPL தொடரில் முதற்தடவையாக விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மகளிர் அணிக்கெதிரான டி20 தொடரும் மேற்கிந்திய தீவுகள் வசம்
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கும்…
இதேவேளை, கடந்த வருடத்தைப் போல இவ்வருடமும் ராங்பூர் ரைடர்ஸ் அணியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர வீரர்களான கிறிஸ் கெய்ல், சாமுவேல் பத்ரி, ஜொன்சன் சார்லஸ் மற்றும் இங்கிலாந்தின் ரவி போபரா ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளதுடன், நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான பிரெண்டன் மெக்கலமும் முதல் தடவையாக களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், இம்முறை பங்களாதேஷ் பிரீமியர் லீக் (டி20) தொடரில், இலங்கையிலிருந்து 11 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, குமார் சங்கக்கார, சீக்குகே பிரசன்ன, ஷெஹான் ஜயசூரிய, திஸர பெரேரா, குசல் ஜனித் பெரேரா, சதுரங்க டி சில்வா, வனிந்து ஹசரங்க டி சில்வா, தசுன் சானக்க, அஞ்செலோ மெதிவ்ஸ், டில்ஷான் முனவீர மற்றும் ஜீவன் மெண்டிஸ் ஆகிய வீரர்கள் இம்முறை பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் விளையாடவுள்ளனர்.