எமது கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றியே இது – மகிழ்ச்சியின் உச்சத்தில் சந்திமால்

668
Rangana Hearth

சொந்த மண்ணில் இந்திய அணியுடன் இடம்பெற்ற மூன்று வகைப் போட்டிகள் ஒன்பதையும் கோட்டை விட்டு  தோல்விகளையே சந்தித்து வந்த இலங்கை அணி, அபுதாபியில் நடந்த பாகிஸ்தானுடனான முதல் டெஸ்ட்டில் 21 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம், தோல்விகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து மோசமான நிலையொன்றில் இருந்து மீண்டு கொண்டமைக்காக அணித் தலைவர் தினேஷ் சந்திமால் ஆறுதல் அடைந்துள்ளார்.

நாங்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கின்றோம். அனைவரும் கடினமாக உழைத்தனர். எங்கள் கடின உழைப்புக்கான பலன் எமக்கு கிட்டியிருக்கின்றது, “ என சந்திமால் முதல் டெஸ்ட்டின்  பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்டிருந்தார்.

குறித்த போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் கைப்பற்றிய 6 விக்கெட்டுக்களோடு, மொத்தமாக போட்டியில் 11 விக்கெட்டுக்களை கைப்பற்றி ஆட்ட நாயகனாக தெரிவான இலங்கையின் முன்னணி சுழல் நாயகன் ரங்கன ஹேரத் பற்றியும் குறிப்பிட்ட சந்திமால் ரங்கன (ஹேரத்) ஒரு சிறந்த வீரர். அவர் எனக்கு மிகப் பெரியளவில் உறுதுணையாக காணப்படும் ஒரு நபர். இன்னும் தனது அனுபவங்களையும் சக அணி வீரர்களிடம் அவர் பகிர்ந்து கொள்கின்றார். திறமை மிக்க அவர் எமது அணிக்கு கிடைத்திருப்பது என்பது மிகவும் பெறுமதியானது. “ என குறிப்பிட்டிருந்தார்.

ரங்கன ஹேரத்தின் அதிரடிப் பந்துவீச்சினால் போராடி வென்ற இலங்கை அணி

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி நகரில் நடைபெற்று முடிந்திருக்கும், இலங்கை…

அடுத்த வருடத்தில் ரங்கன ஹேரத் தனது 40 ஆவது அகவையை எட்டப் போவதைப் பற்றியும் சிறிது கவனம் செலுத்தியிருந்த சந்திமால், அவருக்கு வயது அதிகரிப்பது இப்போதைக்கு கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விடயம் இல்லையென்றும் கூறியிருந்தார்.

அவருக்கு (ஹேரத்துக்கு) இப்போது 39, தற்போது கொஞ்சம் வயதாகிவிட்டது. எனினும் அவர் எப்போதும் தன்னால் வழங்க முடிந்த சிறப்பானதையே தருகின்றார். நான் விளையாடும் போதெல்லாம் அது தொடர வேண்டும் என ஆவல் கொள்கின்றேன். “

இலங்கை அணியானது குசல் மெண்டிஸ் பெற்றுக்கொண்ட யாசிர் சாஹ்வின் பிடியெடுப்போடு 24 ஓட்டங்களுக்குரிய வெற்றியொன்றினை கொண்டாடியிருந்தது. எனினும், சில நிமிடங்களில் போட்டி நடுவர்கள் பாகிஸ்தானின் இறுதி விக்கெட்டுக்காக தில்ருவான் பெரேரா வீசிய அந்தப் பந்து முறையற்றது (No Ball) என அறிவிக்க இலங்கை வீரர்களின் ஆரவாரம் முடிவுக்கு வந்தது. இது பற்றியும் பேசியிருந்த சந்திமால் அதனை பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.

அந்த விக்கெட்டினை (யாசிர் சாஹ்வின்) நாங்கள் கைப்பற்றிய பின்னர், நீண்ட காலம் கொண்டாட காத்திருந்த ஒரு வெற்றியின் மகிழ்ச்சியினை வெளிப்படுத்த தொடங்கியிருந்தோம். எனினும், அது முறையற்ற பந்து என போட்டியின் மூன்றாம் நடுவர் அறிவிக்க நாம் அனைவரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருந்தோம். அதிலும் (பந்தினை வீசிய)தில்ருவான் பெரேரா மிகவும் துன்பத்துக்கு ஆளாகியிருந்தார். நானும், ஹேரத்தும் இணைந்து அது வெறும் ஒரு பந்துதான் இன்னும் அவர்கள் பெற அதிக ஓட்டங்கள் இருக்கின்றன, சரியான முறையில் அடுத்த பந்துகளை வீசினால் போதும் எனக்கூறி  தில்ருவான் பெரேராவுக்கு ஆறுதல் வழங்கினோம். “

இந்த போப்போட்டியில் இலங்கை அணிக்கு நிரோஷன் திக்வெல்ல வழங்கிய பங்களிப்பினையும் மறுக்க முடியாது. நான்கு விக்கெட்டுக்களை இழந்து 69 ஓட்டங்களுடன் போட்டியின் ஐந்தாம் நாளினை ஆரம்பித்த இலங்கை வீரர்களுக்கு, திக்வெல்ல பெற்றுக்கொடுத்த 40 ஓட்டங்களின் உதவியே 136 ஓட்டங்களை வெற்றி இலக்காக தீர்மானித்தது. அதோடு, இலங்கை அணியின் விக்கெட் காப்பாளரான திக்வெல்ல போட்டியின் முதல் இன்னிங்சில் 83 ஓட்டங்களைப் பெற்று தனது தனிப்பட்ட ரீதியான சிறந்த டெஸ்ட் இன்னிங்சினையும் காட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திக்வெல்ல அவரது போராட்டம் மூலம் எமக்கு இரண்டாம் இன்னிங்சில் 140 ஓட்டங்களுக்கு கிட்டவான இலக்கு ஒன்றினை அடைய உதவினார். (இந்த இலக்கினை பாகிஸ்தான் பெறுவதை) ரங்கன ஹேரத் என்கிற சிறந்த வீரர் எமக்கு உதவுபவர் என்பதும் தெரியும். இறுதியாக எமக்கு அவர் தனது சிறப்பாட்டம் மூலம் பெறுமதியினை தந்தார். “  எனக்கூறிய சந்திமால் நிரோஷன் திக்வெல்ல மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர் தனது அணிக்கு வழங்கிய பங்களிப்புக்களை இறுதியாக விபரித்திருந்தார்.

அதோடு சந்திமால், முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிரேம் லப்ரோய் தலைமையிலான இலங்கை அணியின் புதிய தேர்வாளர்கள் குழாத்துக்கு தமது அணியினை இந்த சுற்றுப் பயணத்தில் முன்னேற்ற அறிவுரைகள் வழங்கியமைக்காக தனது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.

நான் தேர்வாளர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். நாம் இங்கு வர முன்னர், அவர்கள் என்னோடும், அணியுடனும் பேசியிருந்தனர், இன்னும் எமக்கு நம்பிக்கையையும் ஊட்டி இருந்தனர். அதுவே இந்த மாற்றமான (மேம்பட்ட) விளையாட்டுக்கு காரணம். எமது வீரர்களும் போட்டியின் மத்தியில் இருந்து சிறப்பான ஆட்டங்களை காட்டத் தொடங்கினர். “ என்றார்.