இராணுவ அணி மற்றும் சிங்கள கிரிக்கெட் கழகம் இறுதிப் போட்டிக்கு

212
U23 semis roundup

23 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான கிரிக்கட் போட்டிகளின் அரையிறுதி ஆகஸ்ட் மாதம் 13ஆம் திகதி நடைபெற்றது. இப்போட்டிகளில் இலங்கை இராணுவ அணி மற்றும் சிங்கள கிரிக்கட் கழகம் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குத் தெரிவாகியது.

நோன்ஸ்க்ரிப்ட் கிரிக்கெட் கழகம் மற்றும் சிங்கள கிரிக்கட் கழகத்திற்கு இடையிலான போட்டி

பி. சரவணமுத்து மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் சிங்கள கிரிக்கட் கழகம்  நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தது. இதன் படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய என்.சி.சி அணி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள்  65 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றனர். முதலாவது விக்கட்டாக நிரோஷன்  திக்வெல்ல 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதிரடியாக துடுப்பெடுத்தாடிய  உதார 26 பந்துகளில் 57 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

அணி தலைவர் விக்ரமசிங்க அணியைத் தாங்கி நின்று 41 ஓட்டங்களைக் குவித்தார். தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் அதிக ஓட்டங்களைக் குவிக்க முடியாமல் ஆட்டமிழந்து மைதானத்தில் இருந்து வெளியேற என்.சி.சி அணி நியமிக்கப்பட்ட 20 ஓவர்களில்  7 விக்கட்டுகளை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றது. சிங்கள கழகத்தின் வீரர்  மெண்டிஸ் சிறப்பாகப் பந்து வீசி 4 விக்கட்டுகளைப் பெற்றுக்கொண்டார்.

175 ஓட்டங்கள் எனும் அதிக இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய சிங்கள கிரிக்கெட் கழகமானது முதலாவது விக்கட்டை  35 ஓட்டங்களுக்கும் 2ஆவது விக்கட்டை  36 ஓட்டங்களுக்கும் பறிகொடுத்து தடுமாறியது. ஓப்பத்த  11 ஓட்டங்களுடனும், குலசேகர 1 ஓட்டத்துடனும்  ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து வந்த வீரர்களும் பிரகாசிக்காமல் ஆட்டமிழக்க சிங்கள கழகம் 47 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை இழந்து தோல்வியடையும் நிலையில் காணப்பட்டது. 5ஆவது விக்கட்டுக்காக இணைந்த ஆர்.மெண்டிஸ் மற்றும் வை. மெண்டிஸ் 93 ஓட்டங்களை இணைப்பாட்டமாகக் குவித்து தமது அணியின் வெற்றிக்கு உதவி செய்தனர். சிறப்பாக விளையாடிய வை. மெண்டிஸ் 38 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அணித்தலைவர் ஆர்.மெண்டிஸ் 45 பந்துகளில் 74 ஓட்டங்களை விளாசி அணியின் வெற்றியை உறுதி செய்தார். அவரது 74 ஓட்டங்களுக்கு 3 நான்கு ஓட்டங்களும், 5 ஆறு ஓட்டங்களும் உள்ளடங்கியமை குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய திலஞ்சனவும் அதிரடியாக 14 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியை வெற்றியின் பக்கம் அழைத்துச் சென்றார்.

19.1 ஓவரில் 5 விக்கட்டுகளை இழந்து 179 ஓட்டங்களைப் பெற்று வெற்றியைப் பெற்றது.

போட்டியின் சுருக்கம்

என்.சி.சி – 175/7 (20): உதார 57, விக்ரமசிங்க 41, ஆர்.மெண்டிஸ்  4/29

சிங்கள கிரிக்கட் கழகம் – 179/5 (19.1): ஆர்.மெண்டிஸ் 74, வை.மெண்டிஸ் 38, குருசிங்க 2/8


கொழும்பு கிரிக்கட் கழகம் மற்றும் இராணுவ அணிகளுக்கிடையிலான போட்டி

பி. சரணமுத்து மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இராணுவ அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இராணுவ அணிக்கு சிறந்த ஆரம்பத்தைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

ரந்திக 9 ஓட்டங்களுடனும், டி. சொய்சா 8 ஓட்டங்களுடனும், தில்ரங்க 4 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழக்க 44 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை இராணுவ அணி இழந்த  நிலையில் காணப்பட்டது. பிரான்ஸிஸ்கொ 22 பந்துகளில் 23 ஓட்டம் பெற்று அணிக்கு ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

லியனகே வேகமாக 21 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பெரேரா 13 ஓட்டங்களையும், டி. சில்வா 16 ஓட்டங்களையும்  பெற நியமித்த 20 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து 133 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

134 எனும் இலகுவான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய கொழும்பு கிரிக்கட் அணி சிறந்த ஆரம்பத்தைப் பெற்றது. கொழும்பு அணி 53 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் முதலாவது விக்கட்டாக 16 பந்துகளில் 23 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ரொன் சந்திரகுப்த ஆட்டமிழக்க தொடர்ந்து மதுரங்கவும் 27 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் பெற்றுத் தந்த ஆரம்பத்தைப் பயன்படுத்த தவறிய ஏனைய வீரர்கள் தொடர்ந்து ஆட்டமிழந்து மைதானத்திலிருந்து வெளியேறினார். அணிக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக ரவீன் சேயர் 24 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்த பொழுதும் துரதிஷ்டவசமாக ஓடும் பொழுது ஆட்டமிழந்தார்.

19ஆவது ஓவரைப் பந்து வீசிய ரந்திக 4 பந்துகளில் 3 விக்கட்டுகளைப் பெற்று கொழும்பு அணியின் சகல வெற்றி வாய்ப்பையும் கலைத்தார்.

இறுதியில் கொழும்பு கிரிக்கட் கழகமானது 120 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. இராணுவ அணி இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.

போட்டியின் சுருக்கம்

இராணுவ அணி – 133/8(20): பிரான்ஸிஸ்கொ 23, லியனகே 21, லியனாராச்சி 3/14

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 120/10(18.4): மதுரங்க 27, ரொன் 23, சேயர் 24  ரந்திக 3/1