இலங்கை களத்தடுப்பு பயிற்சியாளர் பதவியினை இராஜினமா செய்த அன்டன் ரூக்ஸ்

60
Anton Roux Announces Decision

இலங்கை தேசிய ஆடவர் கிரிக்கெட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக செயற்பட்ட அன்டன் ரூக்ஸ் தனது பதவியினை இராஜினமாக செய்வதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி அன்டன் ரூக்ஸ் தனது இன்ஸ்டாக்கிரம் கணக்கு வாயிலாக பதவி விலகல் தொடர்பில் அறிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>> திரில் வெற்றியுடன் AFC ஆசியக்கிண்ண குவாலிபையருக்கு தகுதிபெற்ற இலங்கை!

தென்னாபிரிக்காவைச் சேர்ந்த முதல்தரக் கிரிக்கெட் வீரரான அன்டன் ரூக்ஸ், கிரிக்கெட் போட்டிகளில் ஆடியதன் பின்னர் கிரிக்கெட் பயிற்சியாளாரக தனது பயணத்தினை தொடங்கினார்.

பயிற்சியாளரான பின்னர் நெதர்லாந்து ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயற்பட்ட அவர் குறித்த பதவியில் இருந்து விலகி கடந்த 2022ஆம் ஆண்டின் மார்ச் மாதம் தொடக்கம் இலங்கையின் களத்தடுப்பு பயிற்சியாளராக செயற்பட ஆரம்பித்திருந்தார்.

அன்டன் ரூக்ஸின் ஆளுகையிலான இலங்கை அணி களத்தடுப்பில் சிறந்த பெறுபேறுகளை காட்டியதோடு 2022ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணத் தொடர் உட்பட பல்வேறு முக்கிய கிரிக்கெட் தொடர்களை வெற்றி கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் ரூக்ஸ் இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணி மாத்திரமின்றி மகளிர் அணிக்காகவும் தனது சேவைகளை வழங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தான் இலங்கை அணியில் இருந்து விலகும் விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கும் ரூக்ஸ், இலங்கை கிரிக்கெட் அணியும் இலங்கை நாடும் தனக்கு மறக்க முடியாத ஒன்றாக இருந்தது என சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

>> பாகிஸ்தான் தொடருக்கான இங்கிலாந்து டெஸ்ட் குழாம் அறிவிப்பு

அத்துடன் மேலும் பேசிய ரூக்ஸ் தனது திறமையில் நம்பிக்கை வைத்த மஹேல ஜயவர்தன, டொம் மூடி, டிம் மெக்கஸ்கில் மற்றும் இலங்கையின் முன்னாள் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வூட் ஆகியோருக்கும் தனது நன்றிகளைத் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி அதன் தலைமைப் பயிற்சியாளராக காணப்பட்ட கிறிஸ் சில்வர்வூட் பதவி விலகியதன் பின்னர் தற்போது தற்காலிக பயிற்சியாளரான சனத் ஜயசூரியவின் ஆளுகையில் காணப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<