மெதிவ்சின் பதவி விலகல் இலங்கை கிரிக்கெட் அணியை வளர்ச்சி செய்யாது : சனத் ஜயசூரிய

2131

அஞ்செலோ மெதிவ்ஸ் தலைமைப் பதவியில் இருந்து விலகியதனால் மாத்திரம் இலங்கை கிரிக்கெட் அணியில் அபிவிருத்தி ஏற்படாது. அணியில் உள்ள அனைத்து வீரர்களும் பங்களிப்பு செய்வதனாலேயே அணியை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லலாம் என்று இலங்கை தேர்வுக் குழுவின் தலைவரும் முன்னாள் வீரருமான சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் இலங்கை அணி சந்தித்த தொடர் தோல்விகள் மற்றும் ஜிம்பாப்வே அணியுடனான வரலாற்று ரீதியான ஒரு நாள் தொடர் தோல்வி என்பவற்றின் பின்னர் அணியின் தலைமைப் பதவியில் இருந்து அஞ்செலோ மெதிவ்ஸ் இராஜினாமா செய்தார்.  

குமார் சங்கக்கார விசாரணைக்கு உட்படுத்தப்படுவாரா?

தமது தரப்பினர் மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து , வேண்டும் என்றால்..

எனவே, அவரது இராஜினாமா மற்றும் புதிய தலைவர் நியமனம் குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கான ஊடகவியலாளர் சந்திப்பொன்று இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைமையகத்தில் இடம்பெற்றது. இதன்போது இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலைவர் சனத் ஜயசூரியவிடம் ஊடகவியலாளர்கள் அணியின் வளர்ச்சி, மற்றும் அண்மைய நிலைமைகள் குறித்து பல கேள்விகளை எழுப்பினர்.

இலங்கை அணியின் தலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளமையினால் அணியில் மாற்றம் ஏற்படுமா என்பது குறித்து கருத்து தெரிவித்த ஜயசூரிய, “மெதிவ்ஸ் அணியில் உள்ள ஒரு சிறந்த வீரர். விளையாட்டு மற்றும் அணியின் நுணுக்கங்களை அறிந்த அவருக்கு நாம் 5 வருடங்களுக்கு முன்னர் தலைமைப் பதவியை வழங்கினோம். எனினும், அவர் இன்று அப்பதவியில் இருந்து விலகியுள்ளார்.

எனினும், அணியின் வளர்ச்சிக்கு மெதிவ்ஸ் மாத்திரம் காரணமாக அமைந்துவிட முடியாது. அணியில் உள்ள அனைத்து வீரர்களும் அதற்காக பங்களிக்க வேண்டும். அணியின் வீழ்ச்சிக்கு என்ன காரணம் என்பதை அறிந்துகோண்டு, அணிக்கான குழாத்தில் உள்ள அனைத்து வீரர்களும் உழைப்பது மிகவும் அவசியம்” என்றார்.  

அண்மைய காலங்களில் இலங்கை அணி அடையும் தோல்விகள் குறித்து பல தரப்பினரும் பல வகையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளனர். எனினும், அதிகமான அழுத்தம் இலங்கை தேர்வுக் குழு மீது சுமத்தப்பட்டுள்ளன.  

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு பாரிய பங்கினை வழங்கும் ஊடகங்கள் இவ்வாறான ஒரு தருணத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்தும் ஜயசூரிய தெரிவித்தார்.

”இந்தத் தருணமானது அனைத்து தரப்பினரும் எமக்கு சாதகமான, நேர்மையான முறையில் பங்களிப்பையும், உதவியையும் வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.

யாருக்கும் தமது தனிப்பட்ட கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவிக்கலாம். அவற்றில் உள்ள நல்லவற்றை நாம் எடுப்போம். எனினும், அவ்வாறான கருத்துகளுக்கு பதில் கொடுத்துக்கொண்டிருப்பதை விட எமது வீரர்களுக்கு மன ரீதியாக மேலும் வலுவைக் கொடுக்க முடியும் என்றால், அதுவே நாம் செய்யும் பெரிய பங்களிப்புஎன்றார்.

சூரியவெவ மைதானத்தில் பணியாளர்களின் காற்சட்டைகளை அகற்றிய அதிகாரிகள்

இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கிடையில் நேற்று (10) நடைபெற்ற 5ஆவதும்..

கடந்த காலங்களில் இலங்கை அணியில் பல வீரர்கள் உபாதைக்குள்ளாகியதனால், அணி வீரர்களில் தொடர்ச்சியாக மாற்றங்கள் செய்யப்பட்டன. குறிப்பாக புதிய வீரர்கள் அணியில் உள்வாங்கப்படல், வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்படல் போன்ற செயற்பாடுகள் அடிக்கடி இடம்பெற்றன.

இது குறித்தும் பல்வேறான கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. குறித்த ஊடகவியலாளர் சந்திப்பிலும் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சனத், ”எமது அணியில் கடந்த சில மாதங்களில் மிக அதிகளவான மாற்றங்கள் ஏற்படுவதற்கு உபாதைகளே காரணம். தற்பொழுது கூட குசல் ஜனித் அணியில் இல்லை. நுவன் பிரதீப், சுரங்க லக்மால், சந்திமால், அஞ்செலோ மெதிவ்ஸ், திக்வெல்ல என சுமார் 15, 20  வீரர்கள் அண்மைய காலங்களில் உபாதைக்கு உள்ளாகினர்.

இவ்வாறான நிலைமைகளின்போது வீரர்களை உள்ளே எடுக்கவும், வெளியேற்றவும் நேரிடுகின்றது. நாம் எம்மை முழுமையாக சரி என்பதில்லை. எனினும் தற்பொழுது கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அளவுக்கு நாம் எந்த தவறும் செய்யவில்லைஎன்றார்.

அதேபோன்று, உபுல் தரங்க அனைத்து இடங்களிலும் துடுப்பாடுவது குறித்து குறிப்பிட்ட அவர், உபுல் தரங்கவின் நிலையை நினைத்து எனக்கும் கவலை. அவர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக இருந்து, 3,4, 5, 6 என அனைத்து நிலைகளிலும் தடுப்பாடி வருகின்றார். எனினும் அவர் அனைத்து சவால்களையும் ஏற்றுக்கொண்டு ஏனைய வீரர்களுக்கு வாய்ப்பை வழக்கி, தனது நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றார். இது ஏனைய கிரிக்கெட் வீரர்களுக்கு சிறந்த முன்மாதிரி.

எனவே இந்த விடயம் குறித்து யார் எந்த விடயம் சொன்னாலும் நாம் அது குறித்து எதுவும் குறிப்பிட விரும்பவில்லை. தரங்க தனக்கு வழங்கப்பட்ட கடமையை 100% சிறப்பாக செய்துள்ளார்” என்றும் சனத் ஜயசூரிய மேலும் தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும், ஜிம்பாப்வே அணியுடன் ஒரு நாள் தொடரை இழந்திருக்கும் இலங்கை அணி அடுத்து பலம் மிக்க இந்திய அணியுடனேயே மோதவுள்ளது. எனவே அந்த தொடர் குறித்த எதிர்பார்ப்பு பலர் மீதும் எழுந்துள்ளன.

அடுத்த தொடருக்கு முழுமையாக புதிய அணித் தலைவர்களுடன் களமிறங்கவுள்ள இலங்கை அணியில் எவ்வாறான மாற்றங்கள் இடம்பெறும் என்று மிக விரைவில் தகவல் வெளியிடப்படும்.