2011 உலகக் கிண்ண தோல்விக்கான காரணத்தை கூறும் மெதிவ்ஸ்

2128

இந்திய அணிக்கு எதிரான 2011 கிரிக்கெட் உலகக் கிண்ண  இறுதிப் போட்டியின் போது, மேலும் 20 அல்லது 30 ஓட்டங்களை பெற்றிருந்தால், முடிவை மாற்றியிருக்கலாம் என இலங்கை அணி வீரர் அஞ்செலோ மெதிவ்ஸ் உலகக் கிண்ணத்தை மீண்டும் ஞாபகப்படுத்தியுள்ளார். 

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணி மஹேல ஜயவர்தனவின் சதத்துடன், சவாலான இலக்கை நிர்ணயித்திருந்தது. அத்துடன், பந்துவீச்சில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்தர் ஷெவாக் ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றி சிறந்த ஆரம்பத்தை பெற்றிருந்தது. 

நியூவ் சௌத் வேல்ஸின் உதவி பயிற்றுவிப்பாளராக ஹதுருசிங்க

எனினும், கௌதம் கம்பீர் மற்றும் விராட் கோஹ்லியின் இணைப்பாட்டம் மற்றும் டோனியின் அதிரடியின் ஊடாக இந்திய அணி போட்டியில் வெற்றிபெற்று கிண்ணத்தை வென்றது. இதில், சிறிய தவறுகளை இந்திய அணி மேற்கொண்டிருந்தாலும், போட்டியின் முடிவு மாறியிருக்க வாய்ப்பிருந்தது. 

குறித்த இறுதிப் போட்டியில், உபாதை காரணமாக அஞ்செலோ மெதிவ்ஸ் விளையாடியிருக்கவில்லை. அரையிறுதியில் விளையாடிய இவர், அணியின் வெற்றிகளுக்கு முக்கிய துறுப்புச்சீட்டாக இருந்ததுடன், இறுதிப் போட்டியிலிருந்து இவர் வெளியேறியமை அணியின் பின்னடைவுக்கு மற்றுமொரு முக்கிய காரணமாக அமைந்திருந்தது.

குறித்த அனுபவம் தொடர்பில் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் கருத்து தெரிவித்த அஞ்செலோ மெதிவ்ஸ், 

“50 ஓவர்கள் கொண்ட உலகக் கிண்ண போட்டியில் 2011ம் ஆண்டு நான் முதன்முறையாக விளையாடினேன். இதற்கு முன்னர் 2009 மற்றும் 2010ம் ஆண்டுகளில் T20 உலகக் கிண்ணத்தில் விளையாடியிருந்தேன். 2011 உலகக் கிண்ணம் மிகச்சிறப்பு வாய்ந்தது. எமக்கு ஏற்ற காலநிலை மற்றும் ஆடுகள தன்மைகளில் நாம் விளையாடியிருந்தோம். அத்துடன், இறுதிப்போட்டிக்கு வருவதற்கு முன்னர் மிகச்சிறந்த போட்டிகளை கொடுத்திருந்தோம்.

அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற பின்னர் நான் இறுதிப் போட்டியில் விளையாட ஆர்வமாக இருந்த போதும், துரதிஷ்டவசமாக எனது உபாதை அதற்கு வாய்ப்பளிக்கவில்லை. குறித்த விடயம் எனக்கு ஏமாற்றத்தை வழங்கியது. அதேநேரம், குறித்த உபாதை எனக்கு அதிக வலியை கொடுத்ததுடன், இரண்டு வாரங்களுக்கு சரியாக நடக்க முடியாமல் இருந்தது. ஆனாலும், இறுதி வாய்ப்புக்காக குழாத்துடன் இந்தியா புறப்பட்ட போதும், விளையாடக்கூடிய சூழ்நிலை ஏற்படவில்லை” 

மீண்டும் இறுதிப் போட்டியை ஞாபகப்படுத்திய மெதிவ்ஸ், இன்னும் 20 அல்லது 30 ஓட்டங்களை அதிகமாக பெற்றிருந்தால், போட்டியின் முடிவை மாற்றியிருக்கலாம் என குறிப்பிட்டார்.

“நாம் 320 ஓட்டங்கள் வரை பெற்றிருந்தால், வெற்றிபெற்றிருக்கலாம் என இப்போதும் எனக்கு தோன்றுகிறது. பலமான இந்திய அணியின் துடுப்பாட்டத்துக்கு எதிராக நாம் சிறப்பாக செயற்பட்டிருந்தோம். இந்திய ஆடுகளங்கள் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமானது. துடுப்பாட்ட வீரர் ஒருவர் ஓட்டத்தை பெற ஆரம்பித்துவிட்டார் என்றால் அதனை தடுத்து நிறுத்துவது கடினம். 

இந்திய அணி மிகச்சிறந்த துடுப்பாட்ட வரிசையை வைத்திருந்தது. அத்துடன், வான்கடே மைதானம் அவ்வளவு பெரிய மைதானம் அல்ல. எனவே, துடுப்பாட்ட வீரர்களுக்கு ஓட்டங்களை வெகுவாக பெறமுடியும். நாம் 20-30 ஓட்டங்கள் எமக்கு குறைவாக இருந்தது.  நாம் எமது வாய்ப்புகளை பிடித்திருந்தோம். ஆனால், கம்பீர் மற்றும் விராட் கோஹ்லி சிறப்பாக துடுப்பெடுத்தாடியதுடன், டோனி இணைந்து போட்டியை முடிவுக்கு கொண்டுவந்தார். எவ்வாறாயினும், அதுவொரு சிறந்த போட்டி” என்றார்.

 மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க