மெதிவ்ஸின் உடற்தகுதி மாற்றத்துக்கான காரணம் என்ன?

157

அஞ்செலோ மெதிவ்ஸ் தன்னுடைய உடற்தகுதியை அதிகரித்துக்கொள்வதற்கான முக்கிய காரணம், தொடர்ச்சியாக அவருக்கு ஏற்பட்டுவந்த உபாதைகள் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்ச்சியாக பல்வேறு விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வந்தாலும், தனிப்பட்ட ரீதியிலும், கிரிக்கெட் வீரர் என்ற ரீதியிலும் தன்னை எந்த சந்தர்ப்பத்திலும் மாற்றிக்கொள்ள தயாராக இருப்பதில்லை என எமது இணையத்தளத்துக்கு வழங்கிய காணொளி செவ்வியில் மெதிவ்ஸ் குறிப்பிட்டார்.

சங்கக்காரவுடன் பிறந்த நாளைக் கொண்டாடிய மிக்கி ஆத்தர்

மெதிவ்ஸின் உடற்தகுதி மற்றும் உடல் எடை குறித்து கடந்த காலங்களில் பல்வேறு விமர்சனங்கள் வெளியாகி வந்தன. இந்தநிலையில், மெதிவ்ஸ் தேசிய அணியில் விளையாடாமல் இருந்த குறைந்தப்பட்ச காலத்தில், தனது உடற்தகுதியை அதிகரித்து, உடல் எடையையும் குறைத்திருந்தார்.

“அனைவருக்கும் பிரச்சினைகள் வரும். ஆனால், விமர்சனங்கள் மற்றும் பிரச்சினைகள் காரணமாக என்னை எந்த சந்தர்ப்பத்திலும் மாற்றிக்கொள்ளப் போவதில்லை. ஆனால் நான் ஒருநாள் காலையில் எழுந்த பின்னர், நான் மாற்றிக்கொள்ள வேண்டிய விடயங்களை செய்ய வேண்டும் என முடிவுசெய்தேன்” என மெதிவ்ஸ் குறிப்பிட்டார்.

இலங்கை அணியின் தலைவராக அஞ்செலோ மெதிவ்ஸ் செயற்பட்டிருந்ததுடன், 2014 ஆண்டு காலப்பகுதியில் அணிக்கு மிகச்சிறந்த சகலதுறை வீரராக இருந்தார். ஆனால், அவருக்கு ஏற்பட்ட தொடர் தசைப்பிடிப்பு உபாதை காரணமாக பந்துவீச முடியாத நிலை ஏற்பட்டதுடன், அணியில் தொடர்ச்சியாக இடத்தை பிடிக்க முடியாமலும் தடுமாறி வந்தார்.

“எனக்கு அதிகமாக காலில் உபாதை ஏற்பட்டு வந்தது. இதனால், தொடர்ச்சியாக ஏமாற்றத்தை உணர்ந்தேன். எனது இந்த உடற்தகுதிக்கு காரணம் எனக்கு ஏற்பட்ட தொடர் உபாதைகள் தான். உபாதைகளை எம்மால் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால், அதனை குறைப்பதற்கான வழிமுறைகளை செய்ய முடியும்.

ஒருநாள் இதுதொடர்பில் சிந்திக்கும் போது, நான் உணவு எடுத்துக்கொள்ளும் முறை, பயிற்சி செய்யும் முறை போன்ற அனைத்தையும் மாற்றிக்கொள்ள வேண்டும் என முடிவுசெய்தேன். அத்துடன், குறித்த தருணத்தில் நான் குழாத்தில் இருக்கவில்லை. எனவே, எதிர்வரும் காலங்களில் கிரிக்கெட் விளையாட வேண்டுமானல், என்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என நினைத்தேன்” என்றார். 

அஞ்செலோ மெதிவ்ஸ் குழாத்தில் இணைக்கப்படாமல் இருந்த காலப்பகுதியில், அவரது உடற்தகுதிக்கு டில்ஷான் மற்றும் ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இருக்கும் பயிற்றுவிப்பாளர்கள், உடற்தகுதி நிபுணர்கள், ஏனைய குழாத்தில் இருக்கும் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் தேசிய அணியின் உடற்தகுதி நிபுணர்கள் போன்றோர் உதவியதாக கூறியுள்ளார். 

“நான் குழாத்தில் இல்லாத நிலையில், எனக்கு அதிகமாக உதவியவர் டில்ஷான். நான் எவ்வாறான விடயங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என அவரிடம் கூறினேன். அத்துடன், கெத்தாராம மைதானத்தில் இருக்கும் பயிற்றுவிப்பாளர்கள், உடற்தகுதி நிபுணர்கள், குழாத்தில் இருக்கும் ஏனைய பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் தேசிய அணியின் உடற்தகுதி நிபுணர்கள் என பல்வேறு தரப்பினரும் எனக்கு அதிகமான உதவிகளை வழங்கினர். 

அத்துடன், முன்னாள் வீரர்கள், கெத்தாராம மைதானத்தில் இருக்கும் பிற்பகுதி பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் உடற்பயிற்சியாளர்களின் சேவையை நாம் எப்போதும் பேசுவதில்லை. ஆனால், நான் உடற்தகுதியை சரிசெய்யும் போதுதான், அவர்கள் எவ்வளவு பாராட்டக்கூடியவர்கள் என்பதை உணர்ந்தேன்.

இதேவேளை, நான் எனது உணவு முறைகளை மாற்ற வேண்டியது, எனது பயிற்சிகளை மாற்ற வேண்டியது மாத்திரமே இருந்தது. அதனை நான் மாற்றிக்கொண்டுள்ள போதும், தற்போது அதனை தொடர்ச்சியாக செய்ய வேண்டியதுதான் முக்கியமாகியுள்ளது.

மெதிவ்ஸின் பந்துவீச்சு இலங்கை அணிக்கு முக்கியமானதொன்றாக காணப்பட்டது. உபாதைகள் காரணமாக பந்துவீசாவிட்டாலும், கடந்த சில மாதங்களாக ஒருநாள் மற்றும்  T20I போட்டிகளில் பந்துவீசி வருகின்றார். இந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளில் அவர் பந்துவீசுவாரா? என்ற கேள்விக்கு பதிலளித்தார்.

மீள ஆரம்பிக்கவுள்ள கிரிக்கெட் போட்டிகள் தொடர்பில் ஐ.சி.சி. இன் அறிவுறுத்தல்

டெஸ்ட் போட்டிகளில் பந்துவீசுவது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. ஆனால், இப்போது இருக்கும் தொடர்கள் மற்றும் வேலைப்பளுவிற்கு மத்தியில் மூன்றுவிதமான போட்டிகளிலும் பந்துவீசுவது இலகுவான விடயம் அல்ல. 

எனினும் தேர்வுக்குழு, பயிற்றுவிப்பாளர் மற்றும் அணித் தலைவர் ஆகியோர் என்னுடன் எதிர்வரும் காலங்களில் டெஸ்ட் போட்டிகளில் பந்துவீசுவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். அத்துடன், சகலதுறை வீரர் என்ற ரீதியில் எனது பங்களிப்பு தொடர்பிலும் கூறியிருந்தனர்.

இப்போதைய நிலைக்கு எனது அனுபவம் மற்றும் அணியின் சமனிலை என்பவற்றை கருத்திற்கொண்டு ஒருநாள் மற்றும் T20I போட்டிகளில் பந்துவீசுவது முக்கியமானது என கலந்துரையாடியுள்ளோம். எனவே, அதற்காக என்னை தயார்படுத்தி வருகின்றேன்.  

டெஸ்ட் போட்டிகளுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக பந்துவீச முன்வரலாம் என எண்ணியுள்ளேன். ஆனால், இருக்கும் வேலைப்பளுவின் காரணமாக அனைவரிடமும் கலந்துரையாடி ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும். சாதாரணமான ஒரு முடிவினை மேற்கொண்டு, பந்துவீச முடியுமென்றால் கட்டாயமாக பந்துவீசுவேன்” என மெதிவ்ஸ் சுட்டிக்காட்டினார்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<