IPL 2022: லக்னோ அணியில் இணையும் அண்ட்ரூ டை

Indian Premier League 2022

108
Andrew Tye replaces injured Mark Wood

காயம் காரணமாக IPL தொடரிலிருந்து விலகிய இங்கிலாந்து வீரர் மார்க் வுட்டிற்குப் பதிலாக அவுஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் அண்ட்ரூ டை லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் அணியில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 15ஆவது அத்தியாயம் எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், காயம் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்கான பல முன்னணி வெளிநாட்டு வீரர்கள் வெளியேறி வருகின்றனர்.

இதில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து ஜேசன் ரோய், மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்த் ஜொப்ரா ஆர்ச்சர் என இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து IPL தொடரில் இருந்து வெளியேறினர்.

இந்த நிலையில், வலதுகை மூட்டுப்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வருகின்ற இங்கிலாந்து அணியின் மற்றுமொரு வேகப் பந்துவீச்சாளரான மார்க் வுட்டும் இந்த ஆண்டு IPL தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இம்முறை IPL மெகா ஏலத்தில் மார்க் வுட்டை 7.5 கோடி ரூபாய்க்கு லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் அணி வாங்கியது. எனவே அவரது திடீர் விலகலால் உடனடியாக அதே தொகைக்கு ஒரு பொருத்தமான வேகப்பந்து வீச்சாளரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் லக்னோவ் அணி இருந்தது.

இதனையடுத்து தற்போது தென்னாபிரிக்காவில் நடைபெற்று வருகின்ற ஒருநாள் தொடரில் பந்துவீச்சில் பிரகாசித்து வருகின்ற பங்களாதேஷ் வீரர் டஸ்கின் அஹ்மட்டை ஒப்பந்தம் செய்ய லக்னோவ் அணி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது.

எனினும், தற்போது நடைபெற்று வருகின்ற தென்னாபிரிக்க அணிக்கெதிரான தொடர் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் தொடர் என்பவற்றை கருத்தில் கொண்டு டஸ்கின் அஹ்மட்டுக்கு IPL தொடரில் பங்கேற்க பங்களாதேஷ் கிரிக்கெட் அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்தது.

இதனால் மார்க் வுட்டிற்கான மாற்று வீரராக அவுஸ்திரேலியாவின் நட்சத்திர T20 பந்துவீச்சாளரான அண்ட்ரூ டையை லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் அணி ஒரு கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் முன்னணி T20 பந்துவீச்சாளரான ஆண்ட்ரூ டை, 32 சர்வதேச T20 போட்டிகளில் விளையாடி 47 விக்கெட்டுகளைக் வீழ்த்தியுள்ளார். மேலும் 27 IPL போட்டிகளில் விளையாடி 40 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுஇவ்வாறிருக்க, இம்முறை IPL தொடரில் லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர்களாக அவேஷ் கான், அன்கித் ராஜ்புட் மற்றும் துஷ்மந்த சமீர ஆகிய மூவரும் இடம்பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும்.

அதேபோல, அந்த அணியின் சகலதுறை வீரர்களாக ஜேசன் ஹோல்டர், மார்கஸ் ஸ்டொய்னில் மற்றும் கைல் மேயர்ஸ் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இதேவேளை, கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் அணி, எதிர்வரும் 28ஆம் திகதி வான்கடே மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக முதல் போட்டியில் விளையாட உள்ளது. இந்த ஆண்டு IPL தொடரில் புதிதாக இணைந்துள்ள இரு அணிகளுக்கும் இதுதான் முதல் போட்டியாக அமையவுள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<